தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Aug 02, 2021 4:24 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஜெயகாந்தனின் சிறுகதைகள் பிணக்கு ( 1958)

2 posters

Go down

ஜெயகாந்தனின் சிறுகதைகள்  பிணக்கு ( 1958) Empty ஜெயகாந்தனின் சிறுகதைகள் பிணக்கு ( 1958)

Post by udhayam72 Sat May 04, 2013 7:44 pm

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

பிணக்கு ( 1958)


மெட்டியின் சப்தம் 'டக் டக்'கென்று ஒலித்தது.

வளையொலி கலகலத்தது.

கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார்.

கையில் பால் தம்ளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கையறைக்குள் நுழைவது தெரிந்தது. தன்மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழ்ந்தது!

- கிழவருக்குக் கொஞ்சம் குறும்புதான்.

கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். 'கிரீச்' சென்ற ஒலியுடன் கதவு மூடியதும் மேலே செல்ல முடியாமல் அவரது பார்வை கதவில் முட்டிக் கொண்டது.

மூடிய கதவின் மீது ஒரு பெண்ணுருவம் சித்திரம் போல் தெரிந்தது. வயது பதினாறுதான் இருக்கும்.

மழுங்கச் சீவிப் பின்னிய சிகையில் உச்சி வில்லை, தளர்ந்து துவளும் ஜடையில் திருகு வில்லை, நெற்றியில் முத்துச் சுடரை அள்ளி விசிறும் சிட்டியும், பவழ உதடுகளுக்குமேல் ஊசலாடும் புல்லாக்கும் முழங்கைவரை இறங்கிய ரவிக்கையோடு, சரசரக்கும் சரிகை நிறைந்த பட்டுப் புடவை கோலமாக, கருமை படர்ந்து மின்னிய புருவக் கொடிகளின் கீழாய், மை தட்டிப் பளபளக்கும் பெரிய விழிகள் மருண்டு நோக்க, இளமையும் மருட்சியும் கலந்து இழையும் வாளிப்போடும், வனப்போடும், நாணமும் நடுக்கமுமாய் நிற்கும் அந்தப் பெண்...

ஆமாம்; தர்மாம்பாள் ஆச்சியின் வாலைப் பருவத் தோற்றம் தான்.

அது, அந்த உருவம், மூடிய கதவிலிருந்து இறங்கி அவரை நெருங்கி வந்தது. வெட்கம், பயம், துடிப்பு, காமம், வெறி, சபலம், பவ்யம், பக்தி, அன்பு - இத்தனையும் ஓர் அழகு வடிவம் பெற்று நகர்ந்து வருகிறது - கைலாசம் தாவி அணைக்கப் பார்க்கிறார்.

- சமையல் அறை வேலையெல்லாம் முடித்துக் கொண்டு, கூடத்திற்கு வந்த தர்மாம்பாள் பேரப் பிள்ளைகளின் அருகே பாயை விரித்தாள்.

அருகே ஆளரவம் கேட்கவே நினைவு கலைந்த பிள்ளை மனைவியைப் பார்த்தார்.

தலை ஒரு பக்கம், கால் ஒரு பக்கமாகப் போட்டபடி உறங்கும் பெரிய பையனைப் புரட்டிச் சரியாகக் கிடத்தினாள்.

"பிள்ளையோ லெச்சணமோ? பகலெல்லாம் கெடந்து ஆடு ஆடுன்னு ஆடறது, ராவுலே அடிச்சிப் போட்டாப்பிலே பெரக்கனையே இல்லாம தூங்கறது. அடாடா... என்னா ஆட்டம்! என்னா குதிப்பு!.." என்று அலுத்துக் கொண்டே பேரனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

- ஏக புத்திரன் கண்ணனின் சீமந்த புத்திரனல்லவா?

"வயசு எட்டு ஆகுது... வயசுக்குத் தகுந்த வளத்தியா இருக்கு?... சோறே திங்க மாட்டேங்கறான்..." என்று கவலையுடன் பெருமூச்சு விட்டாள் தர்மாம்பாள்.

இளையவள் விஜயா, நான்கு வயதுச் சிறுமி. எல்லாம் பாட்டியின் வளர்ப்புத்தான் - பாயை விட்டுத் தரையில் உருண்டு கிடந்தாள். அவளையும் இழுத்துப் பாயில் கிடத்தினாள்.

"ஹீம் பாட்டி" என்று சிணுங்கினாள் குழந்தை.

"ஒண்ணுமில்லேடி கண்ணூ... தரையிலே கெடக்கியே. உம் தூங்கு" என்று முதுகில் தட்டிக் கொடுத்தாள்.

கைலாசம், தனது பசுமை மிக்க வாலிபப் பிராய நினைவுகளில் மனசை மேயவிட்டவராய் மௌனமாக அமர்ந்திருந்தார்.

"நீங்க ஏன் இன்னும் குந்தி இருக்கீங்க... உங்களுக்கும் ஒரு தாலாட்டுப் பாடணுமா?... பாலைக் குடிச்சிட்டுப் படுக்கக் கூடாதா? கொண்டு வந்து வச்சி எத்தினி நாழி ஆவுது... ஆறிப் போயிருக்கும்..." என்று சொல்லிக் கொண்டே கலைந்து கிடந்த அவரது படுக்கையை ஒழுங்கு படுத்தினாள்.

"கொஞ்சம் ஒன் கையாலே அந்தத் தம்ளரை எடுத்துக் குடு."

பால் தம்ளரை வாங்கும்போது அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.

"ஆமா படுத்துத் தூங்குடாங்கிறியே, எந்தச் சிறுக்கி மவ எனக்கு வெத்திலை இடிச்சிக் குடுத்தா" என்று அவள் கையை விடாமல் சிரித்துக் கொண்டே கேட்டார்.

"சிரிப்புக்குக் கொறைச்சல் இல்லே; பிள்ளை இல்லாத வீட்டிலே கெழவன் துள்ளி வெளையாடினானாம்... கையை விடுங்க."

"யாருடி கெழவன்...? நானா?" என்று மனைவியின் கன்னத்தில் தட்டியபடி சிரித்தார்.

"இல்லே. இப்பத்தான் பதினேழு முடிஞ்சி பதினெட்டு நடக்கு, பொண்ணு ஒண்ணு பாக்கவா?"

"எதுக்கு நீதான் இருக்கியே?..." அவள் முந்தியைப் பிடித்து இழுத்தார்...

"ஐய, என்ன இது?"

- மறுபடியும் சிரிப்புத்தான். கிழவர் பொல்லாதவர்...

பாலைக் குடித்த பிறகு, உடல் முழுதும் வேர்த்தது. துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டு, "உஸ் அப்பா, ஒரே புழுக்கம். அந்தப் பாயைக் கொண்டு போய் முத்தத்திலே விரி... நா வெத்திலைச் செல்லத்தை எடுத்திட்டு வாரேன்" என்று எழுந்தார்.

தர்மாம்பாள் பாயைச் சுருட்டிக் கொண்டு கூடத்து விளக்கை அணைத்தாள். முற்றத்தில் பளீரென்று நிலா வௌிச்சம் வீசிய பாகத்தில் பாயை உதறி விரித்தாள்.

"உஸ்... அம்மாடி, என்னமா காத்து வருது..." என்று காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்தாள்.

மேலாக்கை எடுத்து, முன் கையிலும், கழுத்திலும் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள். ரவிக்கையின் பித்தானைக் கழற்றி விட்டு முதுகுப் புறத்தை உயர்த்திக் கையிலிருந்த காம்பினால் பின்புறத்தைச் சொறிந்து கொண்டாள்.

கைலாசம் பிள்ளை, மனைவியின் அருகே அமர்ந்து நிலவெரிக்கும் வான் வௌியை வெறித்துப் பார்த்தார்.

ஆகாச வௌியில் கவிந்து மிதந்து செல்லும் மேகத்திரள்கள் நிலவினருகே வரும்போது ஒளிமயமாகவும், விலகிச் செல்கையில் கரிய நிழற் படலங்களாகவும் மாறி மாறி வர்ண ஜாலம் புரிந்தன.

இந்த நிலவொளியில் ஆம்; இதே நிலவுதான் காலம் எத்தனையானாலும் நிலவு ஒன்றுதானே. இந்த நிலவில், பாட்டியின் மடியில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டு பால் சோறு உண்ட பருவம் முதல், தனக்கு வாய்த்த அருமை மனைவி தர்மாம்பாளின் மடியில் தலை சாய்த்து இன்பக் கனவுகளில் மயங்கியபடியே தாம்பூலம் வாங்கிக் கொண்டதெல்லாம்...

அந்த நிகழ்ச்சிகளெல்லாம், நிலவில் படிந்த மேகங்கள் ஒளி பெறுவது போன்று நினைவில் கவிந்து ஒளி பெற்று ஜ்வலித்து, பிறகு விலகி குறைந்து, ஒளி இழந்து கரிய இருள் நிழலாய் மாறி நகர்ந்தன.

மேகம் எங்கே? எங்கோ இருக்கும் நிலவு எங்கே?

நினைவு எங்கே? இப்பொழுது தான் இருக்கும் நிலை எங்கே?...
நினைத்தால்தான் நினைவா? நினைக்காதபோது நினைவுகள் எங்கு இருக்கின்றன? நினைவு ஏன் பிறக்கிறது? எப்படிப் பிறக்கிறது... நினைவு!... அப்படியென்றால்?... நினைப்பதெல்லாம் நடந்தவைதானா? நடக்காதனவற்றை நினைப்பதில்லையா? நினைப்பு என்பது முழுக்கவும் மெய்யா? பொய்யை, ஆசைகளை, அர்த்தமற்ற கற்பனைகளை, அசட்டுக் கற்பனைகளை, நினைத்து நினைத்து நினைவு என்ற நினைப்பிலேயே நிசமாவதில்லையா?

"டொடக்... டொடக்"

தர்மாம்பாளின் கையிலிருந்த பாக்கு வெட்டி இரவின் நிசப்தத்தில் பாக்கை வெட்டித் தள்ளும் ஒலி...

கைலாசம் தன் மனைவியைக் காணும்போது தன்னையும் கண்டார்.

தர்மாம்பாள், உள்ளங் கையில் வைத்திருந்த வெற்றிலையில், உறைந்து போயிருந்த சுண்ணாம்பைச் சுரண்டி வைத்துத் திரட்டி, பாக்கையும் சேர்த்து, இரும்புரலில் இட்டு 'டொடக் டொடக்' கென்று இடிக்க ஆரம்பித்தாள்.

கைலாசத்தின் நாவு பற்கள் இருந்த இடத்தைத் துழாவியது.

'உம்.. எனக்கு எப்பவுமே பல்லு கொஞ்சம் பெலகீனம்தான்...'

உடம்பை ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டார். முண்டாவையும் புஜங்களையும் திருகிக் கைகளை உதறிச் சொடக்கு விட்டுக் கொண்டார். ரோமம் செறிந்த நெஞ்சிலும் புஜங்களிலும் சருமம் சற்றுத் தளர்ந்திருந்தாலும் தசை மடிப்புக்கள் உருண்டு தெரிந்தன.

கைலாசம் உண்மையிலேயே திடகாத்திரமான மனிதர்தான். உடம்பில் அசுர வலு இருந்த காலமும் உண்டு; இப்பொழுது நிச்சயம் ஆள் வலு உண்டு!

- போன வருஷம்தான் சஷ்டியப்த பூர்த்தி...

தர்மாம்பாளுக்கு ஐம்பதுக்கு மேல் அறுபதுக்குள்.

அவளுக்கு மூங்கில் குச்சி போல் நல்ல வலுவான உடம்புதான். ஒல்லியாயிருந்தாலும் உடலில் உரமும் உண்டு... இல்லாவிட்டால் ஏறத்தாழ நாற்பத்தைந்து வருஷமாக அந்த உடம்புக்கு ஈடு கொடுக்க முடியுமா?

கிழவரின் கை மனைவியின் தோளை ஸ்பரிசித்தது...

"என்ன?... கொஞ்சுறீங்க, வெத்திலையைப் போட்டுக் கிட்டுப் படுங்க..." என்று இடித்து நசுக்கிய வெற்றிலைச் சாந்தை அவரது உள்ளங்கையில் வைத்தாள்... மீதியை வாயிலிட்டுக் குதப்பி ஒதுக்கிக் கொண்டாள்.

தர்மாம்பாளுக்குப் பற்கள் இருக்கின்றன. என்றாலும் புருஷனுக்காக இடிப்பதில் மீத்துத் தானும் போட்டுக் கொள்வதில் ஒரு திருப்தி. ஆறு வருடமாய் இப்படித்தான்.

அந்தத் தம்பதிகளிடையே ஒரு சிறு மனத்தாங்கல் கூட இதுவரை நின்றதில்லை. ஒரு சச்சரவு என்பதில்லை. 'சீ... எட்டி நில்!'- என்று அவர் சொன்னதில்லை. சொல்லி இருந்தால் அவள் தாங்குவாளா என்பது இருக்கட்டும், அவர் நாவு தாங்காது...

சிரிப்பும் விளையாட்டுமாகவே வாழ்க்கையைக் கழித்து விட்டார்கள்.

- கழித்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா? இதுவரை வாழ்வை அப்படித்தான் கழித்தார்கள்...

நிலவு இருண்டது! எங்கும் ஒரே நிசப்தம். கூடத்தில் படுத்திருந்த முத்து, தூக்கத்தில் ஏதோ முனகியவாறே உருண்டான்.

- அறைக்குள்ளிருந்து வளையல் கலகலப்பும், கட்டிலின் கிரீச்சொலியும், பெண்ணின் முணுமுணுப்பும்...

எங்கோ ஒரு பறவை சிறகுகளைப் படபடவென்று சிலுப்பிக் கொள்ளும் சப்தம், அதைத் தொடர்ந்து வௌவால் ஒன்று முற்றத்தில் தெரிந்த வான் வௌியில் குறுக்காகப் பறந்தோடியது..
முற்றத்தில் ஒரு பகுதி இருண்டிருந்தது!

நிலவு எதிர்ச் சரகக் கூரைக்கும் கீழே இறங்கி விட்டது. அவர்கள் படுத்திருந்த இடத்தில் நிழலின் இருள் நிலவொளிக்குத் திரையிட்டிருந்தது...

தர்மாம்பாள் தொண்டைக்குள் 'களகள'வென்று இளமை திரும்பி விட்டது மாதிரிச் சப்தமில்லாமல் சிரித்தாள்...

கிழவரின் அகண்ட மார்பில் அவள் முகம் மறைந்தது. பொன் காப்பிட்ட அவளது இரு கரங்களும் கிழவரின் முதுகில் பிரகாசித்தன...

இருளோ, நிலவோ, இரவோ, பகலோ, இளமையோ முதுமையோ எல்லாவற்றையும் கடந்ததுதானே இன்பம்!

ஆம். அது - இன்பம் மனசில் இருப்பது... இருந்தால் எந்த நிலைக்கும் எந்தக் காலத்துக்கும் யாருக்கும் அது ஏற்றதாகத்தான் இருக்கும். தர்மாம்பாளும் கைலாசமும் மனசில் குறைவற்ற இன்பம் உடையவர்கள்... வயசைப் பற்றி என்ன?

'டொக்... டொக்...'

கைலாசம், நிலா வௌிச்சத்தில் பாயை இழுத்துப் போட்டுக் கொண்டு, இரும்புரலில் வெற்றிலை இடிக்கிறார்.

அருகே தர்மாம்பாள் படுத்திருக்கிறாள்... தூக்கம், அரைத்தூக்கம், மயக்கம்தான்!

"நீங்க இன்னும் படுக்கலியா?"

"உம்... நீ வெத்திலை போடுறியா?"

"உம்... அந்தத் தூணோரம் செம்பிலே தண்ணி வச்சேன். கொஞ்சம் கொண்ணாந்து தாரீங்களா? நாக்கை வரட்டுது" என்று தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள்.

"எனக்கும் குடிக்கணும்!" என்றவாறு எழுந்து சென்று செம்பை எடுத்துத் தண்ணீரைக் குடித்துவிட்டுக் கொண்டு வந்தார் கைலாசம்.

அவர் வரும்போது நிலவொளியில், அந்த திடகாத்திரமான உருவத்தைக் கண்டு தர்மாம்பாளின் மனம், வாலிபக் கோலம் பூண்டு, அந்த அழகில் லயித்துக் கிறங்கி வசமிழந்து சொக்கியது. அவர் அவள் அருகே வந்து அமர்ந்தார்.

தாகம் தீரத் தண்ணீர் குடித்த தர்மாம்பாள், ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் மேல் சாய்ந்தாள். வலுமிக்க அவரது கரத்தை லேசாக வருடினாள். அவளுக்கே சிரிப்பு வந்தது - சிரித்தாள். "என்னடி சிரிக்கிறே?"

"ஒண்ணுமில்லே; இந்தக் கெழங்க அடிக்கற கூத்தை யாராவது பார்த்தா சிரிப்பாங்களேன்னு நெனைச்சேன்!" அவர் கண்டிப்பது போல் அவள் தலையில் தட்டினார். "யாருடி கிழம்?..."

கிழவர் சிரித்தார்! அவளும் சிரித்தாள்.

தர்மாம்பாள் எழுந்து உட்கார்ந்து இன்னொரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டாள். அவள் பார்வை கவிழ்ந்தே இருந்தது.

- கிழவர் அவள் முகத்தைத் தடவிக் கொடுத்தார். அவள் விழிகளை உயர்த்திப் பார்த்தாள். அவர் அவள் விழிகளுக்குள்ளே பார்த்தவாறு சிரித்தார்.

"சே!.. நீங்க ரொம்ப மோசம்!" என்று வெட்கத்துடன், கண்டிக்கும் குரலில் சிணுங்கினாள் தர்மாம்பாள். அனுபவித்த சந்தோஷத்தால் காரணமற்றுச் சிரிப்பும் பொத்துக் கொண்டு வந்தது. கிழவருக்குப் பெருமை தாங்க முடியவில்லை.

அவளிடம் ஏதாவது வேடிக்கை பேசி, விளையாடத் தோன்றியது அவருக்கு. உள்ளங்கையில் புகையிலையை வைத்துக் கசக்கியபடி, தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே,

"அந்தக் காலத்திலே நான் அடிச்ச கூத்தெல்லாம் ஒனக்கெங்கே தெரிஞ்சிருக்கப் போகுது" என்று சொல்லிவிட்டுத் தலையை அண்ணாந்து புகையிலையை வாயில் போட்டுக் கொண்டார். "ஏன்? சீமைக்கா போயிருந்தீங்க?"

"தர்மு, உனக்குத் தெரியாது. நீ எப்பவும் குழந்தைதான். ஒன்கிட்டே அப்போ நான் சொன்னதே இல்லை. இப்ப சொன்னா என்ன?"

- கிழவர் கொஞ்சம் நகர்ந்து சென்று சாக்கடையில் எச்சில் துப்பிவிட்டு வந்தார்.

"நம்ம சந்நிதித் தெரு கோமதி இருந்தாளே, ஞாபகம் இருக்கா?"

கால்களிலே சதங்கை கொஞ்ச, கரு நாகம் போன்ற பின்னல் நௌிந்து திரும்பி வாலடித்துச் சுழல, கண்களும் அதரங்களும் கதை சொல்ல, 'இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கிருக்குது' என்ற நாட்டியக் கோலத்துடன் முத்திரை பாவம் காட்டி, சதிராடி நிற்கும் ஒரு தங்கப் பதுமை போன்ற கோமதியின் உருவம் தர்மாம்பாளின் நினைவில் வந்து நின்றது. ஒரு கணம் மயல் காட்டி மறையாமல் நிலைத்து நின்றது...

"என்ன, ஞாபகம் இருக்கா?... அந்தக் காலத்திலெ அவளுக்குச் சரியா எவ இருந்தா?... என்ன இருந்தாலும் தாசின்னா தாசிதான். அவளுகளை மாதிரி சந்தோஷம் குடுக்க வீட்டுப் பொம்பளைங்களாலே ஆகுமா?"

"உம்" தர்மாம்பாளின் கண்கள் கிழவரின் முகத்தை அர்த்தத்தோடு வெறித்தன...

மனம்?...

'ஓஹோ! அந்தக் காலத்திலே அவ நாட்டியம்னா பறந்து பறந்து ஓடுவாரே அதுதானா?' என்று பற்பல நிகழ்ச்சிகளை முன்னிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தது மனம்.

கிழவர் குறும்பும் குஷியுமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்.

"என்னை ஒரு தடவை நீலகிரிக்கு மாத்தியிருந்தாங்களே, ஞாபகமிருக்கா? கண்ணன் அப்ப வயத்திலே ஏழு மாசம். இல்லையா..."

"உம்..." தர்மாம்பாளின் விழிகள் வெறித்துச் சுழன்றன. "இது சத்தியம்! இது சத்தியம்!" என்று அவளூள் ஏதோ ஒரு குரல் எழுந்தது.

"அப்போ தனியா போனேன்னா நெனைச்சிட்டிருக்கே... போடி பைத்தியக்காரி! அந்தக் கோமதிதான் என்கூட வந்தா... அவ ஒடம்பு செலை கணக்கா இல்லே இருக்கும்... உம்... அவ என்ன சொன்னா தெரியுமா கடைசியிலே..." கிழவர் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார். "நானும் இதுவரைக்கும் எத்தனையோ பேரைப் பாத்திருக்கேன் - ஆம்பளைன்னா நீங்கதான்னா..." கிழவர் மறுபடியும் சிரித்தார்.

அது என்ன சிரிப்பு... பொய்ச் சிரிப்பா, மெய்ச் சிரிப்பா...

தர்மாம்பாளின் நெஞ்சில் ஆத்திரமும், துரோகமிழைக்கப்பட்ட - வஞ்சிக்கப்பட்ட ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்தன.

"நெசந்தானா!"

"பின்ன... பொய்யா?... அதுக்கென்னா இப்போ, எப்பவோ நடந்ததுதானே..."

- அடப் பாவி, கிழவா? பொய்யோ மெய்யோ அவள் திருப்திக்காகவாவது மாற்றிச் சொல்லக் கூடாதா?

தர்மாம்பாள் கிழவிதான்! கிழவி பெண்ணில்லையா...?

'துரோகி, துரோகி' என்று அவள் இருதயம் துடித்தது. 'ஆமாம்; அது உண்மைதான். பொய்யில்லை.' ஏனோ அவள் மனம் அதை நம்பிவிட்டது. பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிக்கக்கூட இல்லை - அதெல்லாம் தாம்பத்திய ரகசியம்!

விருட்டென்று எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று கூடத்து இருளில் வீழ்ந்தாள்
தர்மாம்பாள்.

"அடடே, தர்மு கோவிச்சுக்கிட்டியா? பைத்தியக்காரி, பைத்தியக்காரி!" என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே பாயில் துண்டை விரித்துப் படுத்தார் கைலாசம் பிள்ளை.

- விளையாட்டா? அது என்ன விளையாட்டோ? கிழவரின் நாக்கில் சனியல்லவா விளையாடி இருக்கிறது!

மணி பன்னிரண்டு அடித்தது! கிழவர் தூங்கிப் போனார். தர்மாம்பாள் தூங்கவில்லை!

மறுநாள்...

மறுநாள் என்ன, மறுநாளிலிருந்து வாழ்நாள் வரை...

அவருக்கு அவள் தன் கையால் காப்பி கொடுப்பதில்லை; பல் துலக்க, குளிக்க வெந்நீர் கொடுப்பதில்லை. முதுகு தேய்ப்பதில்லை; சோறு படைப்பதில்லை; வெற்றிலை பாக்கு இடித்துக் கொடுப்பதில்லை.

- பாவம்! கிழவர் அனாதைச் சிசுவைப் போல் தவித்தார்.

அவளைப் பொறுத்தவரை, கைலாசம் பிள்ளை என்றொரு பிறவியே இல்லாத மாதிரி, அப்படி ஒருவருக்குத் தான் வாழ்க்கைப் படாதது மாதிரி நடந்து கொண்டாள். அவருடன், யாருடனும் அவள் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

மகனும் மருமகளும் துருவித் துருவி அவளை விசாரித்தனர்.

- மௌனந்தான்.

கிழவர்? - அவர் வாயைத் திறந்து என்னவென்று சொல்லுவார்?

- மௌனம்தான்.

அன்று இரவு விஜயா கேட்டாள்:

"பாட்டி! நீ தாத்தாவோட 'டூ' வா?..."

- அவள் ஒன்றும் பேசவில்லை.

"ஏன் தாத்தா, பாட்டி ஒன்னோட பேச மாட்டேங்குது? நீ அடிச்சியா?" - என்று முத்து கிழவரை நச்சரித்தான்.

கிழவரால் பொறுக்க முடியவில்லை.

"என்னடி தர்மு - நான் வெளையாட்டுக்கு, பொய்யிதான் சொன்னேன் - என்னை ஒனக்குத் தெரியாதா! மனசார ஒனக்கு நா துரோகம் செஞ்சிருப்பேன்னு நீ நெனைக்கிறியா? இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்தும், என்னை நீ தெரிஞ்சுக்கலையா, தர்மு... தர்மு..."

'சீ! வாழ்ந்தேனா? - ஐயோ, என் வாழ்வே! வாழ்ந்ததாக நெனச்சி ஏமாந்து போனேன்..."

இதைக்கூட அவள் வௌியில் சொல்லவில்லை. குழந்தைகள் தூங்கி விட்டன.

அவர் தானாகவே அன்று வெற்றிலை இடித்துப் போட்டுக் கொண்டார்.

"தர்மு... என்னை நீ நம்ப மாட்டியா..." அவர் கை அவள் தலையை வருடியது...

அடிபட்ட மிருகம் போல் உசுப்பிக் கொண்டு நகர்ந்த அவள் உடம்பு துடித்துப் பதைத்தது.

"சீ" என்று அருவருப்புடன் உறுமினாள். "தொட்டீங்கன்னா, கூச்சல் போட்டுச் சிரிக்க அடிச்சிடுவேன்!"

அவளுக்கு மூச்சு இளைத்தது - உடல் முழுதும் வேர்த்து நடுங்கியது. அப்படி அவரிடம் அவள் பேசியது அதுவே முதல் தடவை. அவரும் திகைத்துப் போனார்!

கிழவர் மனம் குமுறி எழுந்து நடந்தார்...

'என்னை - என்னை சந்தேகிக்கிறாளே' என்று நினைத்த பொழுது மனசில் என்னவோ அடைத்துக் கண்கள் கலங்கின.

"போறா, நல்ல கதிக்குப் போக மாட்டா" என்று மனம் சபித்தது.

யாருமற்ற, நாதியற்ற அனாதைபோல் தெருத் திண்ணையில் வெறுந்தரையில் படுத்துக் கொண்டார்.

தர்மாம்பாளைக் கைப் பிடித்தது முதல் அன்றுதான் முதன் முறையாக வர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.

'விதி - விதி!' என்ற முனகல்.

விதிக்கு வேளை வந்து விட்டது!

இரவு மணி எட்டு! தெரு வாசற்படியில் கார் நிற்கிறது.

கூடத்து அறையில் தர்மாம்பாள் படுக்கையில் கிடக்கிறாள். அவளைச் சுற்றிப் பேரனும் பேத்தியும் மகனும் மருமகளும் நிற்கின்றனர் - டாக்டர் ஊசி போடுகிறார்.

தெருவில் திண்ணையோரத்தில் நிற்கும் கைலாசம் பிள்ளை பதைக்கும் மனத்தோடு ஜன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்க்கிறார்.

உள்ளே செல்ல அவருக்கு அனுமதி இல்லை.

டாக்டர் வௌியே வருகிறார். கண்ணன் பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் பின்னே வருகிறான்.

"டாக்டர்... என் உயிர் பிழைக்குமா?" என்ற கைலாசம் பிள்ளையின் குரல் டாக்டரின் வழியில் குறுக்கிட்டு விழுந்து மறிக்கிறது.

டாக்டர் பதில் கூறாமல் தலையைக் குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார்.

கிழவர், தன்னை மீறி வந்த ஆவேசத்துடன், உள்ளே ஓடுகிறார்.

'தர்மு... தர்மு... என்னெ விட்டுப் போயிடாதேடி... தர்மு!'

நீட்டி விரைத்துக்கொண்டு கட்டிலில் கிடக்கும் தர்மாம்பாளின் உடலில், அங்கங்களில் அசைவில்லை; உணர்வில்லை.

உயிர்?...

நெற்றியில் ஒரு ஈ பறந்து வந்து உட்காருகிறது. நெற்றிச் சருமம் - புருவ விளிம்பு நௌிகிறது...

- கண்கள் அகல விரிந்து ஒருமுறை சுழல்கின்றன.

கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருக, தம்ளரிலிருந்த பாலைத் தாயின் வாயில் வார்க்கிறான் கண்ணன்.

'யாரு... கண்ணனா... பாலில்தான்டா உறவு இருக்கு... அந்த உறவும் ரத்தாயிடும்!...'

அதோ, ஸரஸா இப்பொழுது பால் வார்க்கிறாள்.

'ரெண்டு கொழந்தையையும் வச்சுக்கிட்டுத் தவிப்பியேடி கண்ணே!'

பேரன் முத்து - "பாட்டி... பாட்டி..." என்று சிணுங்கியபடியே பாலை ஊற்றுகிறான்...

முத்துவை அள்ளி அணைத்துக் கொள்ளத் துடிப்பதுபோல் கண்கள் பிரகாசிக்கின்றன.

பயந்து, ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் விஜியின் பிஞ்சுக் கரங்களால் பாட்டியின் உதடுகளுக்கிடையில் பால் வார்க்கும்போது...

அதில் தனி இனிப்போ! முகத்தில் அபூர்வக் களை வீசுகிறது... 'மடக்... மடக்'கென்று பால் உள்ளே இறங்குகிறது!

மேல் துண்டில் முகத்தை மூடிக் கொண்டு உடல் பதறிக் குலுங்க வந்து நின்றார் கைலாசம்.

'இந்த நிலையிலாவது தன்னை மன்னிக்க மாட்டாளா' என்ற தவிப்பு!

அவர் கைகள் பால் தம்ளரை எடுக்கும்போது நடுங்குகின்றன.

"தர்மு... தர்மு... என்னைப் பார்க்க மாட்டியா, தர்மு?"

'யாரது?' அவள் விழிகள் வெறித்துச் சுழல்கின்றன.

தாளாத சோகத்தில் துடிக்கும் உதடுகளில், கண்ணீருடன் புன்சிரிப்பையும் வரவழைத்துக் கொண்டு பால் தம்ளரை அவள் உதட்டில் பொருத்துகிறார் கைலாசம்.

பற்களைக் கிட்டித்துக் கொண்டு வலிப்புக் கண்டது போல் முகத்தை வெட்டி இழுத்துக் கொண்ட தர்மாம்பாளின் முகம் தோளில் சரிகிறது.

- கடைவாயில் பால் வழிகிறது!

"ஐயோ மாமீ" என்ற ஸரஸாவின் குரல் வெடிக்கிறது...

"அம்மா... பாட்டீ ஹ்ம்" முத்து தாயைக் கட்டிக் கொண்டு அழுகிறான். விஜி ஒன்றும் புரியாமல் விழிக்கிறாள் - கண்ணன் தலையைக் குனிந்துகொண்டு கண்ணீர் வடிக்கிறான்.

கிழவர் நிமிர்ந்து நிற்கிறார். அவர் முகம் புடைத்து, கண்களில் கண்ணீரும் கோபமும் குழம்ப, செக்கச் சிவந்து ஜ்வலிக்கிறது!

கைலாசம் கிழவர்தான். என்றாலும் ஆண் அல்லவா!

"இவளுக்கு என் கையாலே கொள்ளிகூட வைக்க மாட்டேன்" - கையிலிருந்த பால் தம்ளரை வீசியெறிந்துவிட்டு அறையை விட்டு வௌியேறுகிறார்...

முற்றத்து நிலவில், பால் தம்ளர் கணகணவென்று ஒலித்து உருண்டு கிடக்கிறது.

அன்று, அந்தக் கடைசி இரவில், அவர்கள் படுத்திருந்த இடத்தில் கொட்டிக் கிடந்த பாலில் நிலவின் கிரணங்கள் ஒளி வீசிச் சிரித்தன.

ஆம்; அதே நிலவுதான்!

(எழுதப்பட்ட காலம்: 1958)
udhayam72
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 39
Location : bombay

Back to top Go down

ஜெயகாந்தனின் சிறுகதைகள்  பிணக்கு ( 1958) Empty Re: ஜெயகாந்தனின் சிறுகதைகள் பிணக்கு ( 1958)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 06, 2013 5:08 pm

[You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum