தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காந்தி - அசோகமித்திரன்

Go down

காந்தி - அசோகமித்திரன் Empty காந்தி - அசோகமித்திரன்

Post by RAJABTHEEN Tue Feb 22, 2011 4:02 am

அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு வெகு நாட்களாகியும், அன்றுதான் காபியின் கசப்பை கசப்பாக, ருசிக்கத்தக்கதல்லாததாக உணர முடிந்தது. ‘சர்க்கரை கொண்டு வா’ என்று சொல்லத் திடமில்லாமல் கோப்பைasokamயில் பாதிக்கு மேல் காபியிருக்க அவன் அதை ஒதுக்கி விட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டான். அந்த ஹோட்டலிலும் மின் விசிறிகளை ஓட வைப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டன. அவன் சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக்கொண்டு ஊதிக் கொண்டான். மார்பின் மேல் காற்று கசப்பாகப் படிந்து மறைந்தது.

உள்ளிருக்கும் கசப்புத்தான் வெளியிலும் கசப்பாக உணர்வளிக்கிறது என்று அவனுக்குத் தெரியாமலில்லை. உண்மை கசப்பானது, உண்மை கசப்பானது என்று நண்பர்களுடன் விவாதிப்பதையே மிக முக்கியமானதாக, அர்த்தம் பொருந்தியதாக, வாழ்வே அதில்தான் மையம் கொண்டிருக்கிறது என்பது போன்ற மனநிலை கொண்டுவிட்ட இந்த ஏழெட்டு வருட காலத்தில் பல நூறு முறை அவன் அதைக் கூறியிருப்பான். உண்மை கசப்பானது என்று யாராலோ எந்தச் சந்தர்ப்பத்திலோ கூறப்பட்டாலும் அவர்கள் அவனைப் பார்த்து ஒரு முறை கண் சிமிட்டும் அளவுக்கு அவன் உண்மை கசப்பானது என்ற வாக்கியத்துடன் இணைக்கப்பட்டிருந்தான். அதில் அவனுக்கு முதலில் சங்கோசமிருந்து பின் சங்கடமிருந்து, அதன் பின் பெருமையிருந்து, அதற்குப் பின்னால் அது சம்பிரதாயமான கிட்டத்தட்ட உணர்வேயெழுப்ப இயலாத, செத்த அசைச் சொல்லாகவும் போய் விட்டிருக்கும் என்ற நேரத்தில் அவன் கசப்பை மனதில், உடலில், வாயில், காபியில் உணர வந்திருப்பதை நினைக்க, அந்த நினைப்பைத் தடுக்க இயலாமல் போன தன் நிலையை எண்ணி மேலும் மாய்ந்து போனான்.

இவ்வளவிற்கும் அவனைப் பற்றிப் பொய்யைப் பரப்பித் திரிபவன் அவனுடைய நண்பன். ‘திரிபவன்’ என்று நினைத்து விட்டோமே என்று வருத்தம் கொண்டான். அவனைப் பற்றி பொய்யை ஒருவரிடத்தில், ஓரிடத்தில் மட்டும் அவன் நண்பன் கூறியிருந்தால் அந்த நண்பனையே நேருக்கு நேர் பார்த்துக் கேட்டுவிடலாம். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் அந்த நண்பன் பலரிடத்தில், பல சந்தர்ப்பங்களில் பொய்யை, பல பொய்களைக் கூறியிருக்கிறான். தீர்மானமாக, முன் திட்டத்துடன், துவேஷத்துடன் கூறியிருக்கிறான். இன்னமும் கூறி வருகிறான். இனியும் அந்த நண்பனைப் பார்த்து அதுபற்றிக் கேட்க முடியாது, கேட்க வேண்டியதில்லை. அந்தப் பொய்களைத் தான் நம்புகிறான் என்னும் அளவுக்கு அந்த நண்பன் நடந்து கொண்டு வருகிறான். அபிப்ராயங்கள் பற்றிச் சந்தேகம் கொண்டு, சந்தேகம் கொள்ள வைத்துப் பேசலாம், விவாதிக்கலாம், மாற்றிக் கொள்ளலாம், மாற்ற வைக்கலாம். ஆனால் நம்பிக்கைகளை மாற்ற முடியுமா?

அவனுக்கு அவனைப் பற்றிப் பொய்கள் வெளியில் உலவுகின்றன என்பதில்கூட அவ்வளவு துக்கம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நண்பனால் அவை உலவவிடப் படுகின்றன என்பதுதான் சித்ரவதையேற்படுத்தியது. நண்பன்! எப்பேர்ப்பட்ட நண்பன்.

ஒருகணம் எல்லா வேதனையும் மறந்து அந்த நண்பனைப் பற்றிய ஒட்டுமொத்தமான உணர்வில் தன்னை பற்றிய நினைவும் மறைய லயித்தான். அவர்கள் இருவரின் உறவு நான்கு மாதங்களுக்கு மேற்பட்டதில்லை. நான்கே மாதங்கள். தன்னைப் பிறப்பிக்க அம்மா, அப்பா; தன்னோடுகூடப் பிறந்தவர்கள்; சந்தர்ப்ப சூழ்நிலையானாலும் தன்னிச்சை காரணமாகவும் பள்ளி நாட்களில் ஏற்பட்ட எண்ணற்ற நண்பர்கள்; உறவுகள்; நான்காம் படிவத்தில் டபிள்யு. எச். ஹென்லியின் ‘இரவிலிருந்து’ என்னும் கவிதையை ஒரு தரிசனமாக மாற்றிக் கற்றுக்கொடுத்த ஆங்கில மொழி ஆசிரியர்; எவ்வளவோ மாதங்கள் புரியாத முடிச்சாக இருந்த கால்குலஸ் இண்டெக்ரேஷன் அடிப்படையை ஒரு வலுவிழந்த நொடியில் தனக்குப் பிரகாசமாக்கிய கணிதப் பேராசிரியர்; நன்றாகத் தூக்கியெறியப்பட்டு மெதுவாகக் கீழிறங்கும் சுழற் பந்தைத் தவறாமல் கவர் - டிரைவ் செய்யப் பாதங்களை நகர்த்திக் கொள்ளக்கற்றுக் கொடுத்த கிரிக்கெட் வைஸ் காப்டன்; தன்னுடைய அழுக்குப் படிந்த ஷர்ட்களையும் டிரௌசர்களையும் பச்சைக் குழந்தையைக் கையாளுவது போல நல்ல வெயில் நேரத்திலும் பொறுமையாகக் கிணற்றடியில் சோப்புப் போட்டு அலசி உலர்த்தும் அவன் தங்கை; இப்படி இன்னும் எவ்வளவோ பேர்கள் எவ்வளவோ ஆண்டுகளாக அவன் மனத்தில், அவன் பிரக்ஞையில் ஆழ்ந்து போயிருந்த போதிலும் அந்த நண்பன், நான்கே மாதங்கள் முன்பு ஏற்பட்ட நண்பனுக்கு அவனுடைய முழு ஜீவித இயக்கத்தையும் அர்ப்பணம் செய்திருந்தான். நண்பர் வட்டமே முழு உலகமும் என்றிருந்த அந்த வயதில், அந்த நண்பர் வட்டத்திலும் அந்த நண்பனே முழு வியாபகமும் என இருந்த நேரத்தில் தன் பிரக்ஞையே சிதறிப் போகிற விதத்தில் அந்த நண்பன் தோற்றம் கொண்டு விட்டான். தோற்றம் என்றால் என்ன?
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காந்தி - அசோகமித்திரன் Empty Re: காந்தி - அசோகமித்திரன்

Post by RAJABTHEEN Tue Feb 22, 2011 4:03 am

சளசளவென்று பேசிக்கொண்டு காலைத் தேய்த்துத் தேய்த்து நடப்பதால் உண்டாகும் அளவு மீறிய செருப்புச் சப்தத்துடன் மூன்று இளைஞர்கள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றுகூடத் தோன்றும் முறையில் நாற்காலிகளைத் தடாம் முடாம் என்று நகர்த்தி ஒரு மேஜையைச் சுற்றி உட்கார்ந்தார்கள். அவர்களில் ஒருவனின் தலை மயிர் நீண்டு வளர்ந்து கழுத்துக்குப் பின்னால் ஷர்ட் காலரைத் தொட்டுப் புரண்ட வண்ணமிருந்தது. இப்போது எல்லோரும் தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் கழுத்துக்கு அடியில் உள்பக்கமாக மயிர் தானாகச் சுருண்டு கொள்வதில்லை. அவனுடைய நண்பன் முடி அப்படித்தான் சுருண்டு கொண்டிருக்கும். அவனை முதன் முதலாகச் சந்தித்த தினத்தன்றுகூடப் பேச்சு எது எதிலோ சென்று தலைமுடி பற்றி ஒருகணம் சுழன்றபோது அந்த நண்பன் பெருமையடித்துக் கொண்டான். அன்றிரவு மற்ற நண்பர்கள் நேரமாகிவிட்டது என்று ஒவ்வொருவராகச் சென்றுவிட்ட பின் அவர்கள் இருவரும்தான் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அறிமுகமான முதல் நாள் என்ற உணர்வே இருவருக்கும் தோன்ற முடியாத வண்ணம் அந்த நண்பன் தொடர்ச்சியாகவும் முழு ஈடுபாடுடனும் பேசிக் கொண்டிருந்தான். அவன் எதைப் பற்றிப் பேசினாலும், அவன் பேசுவது மிகவும் அபத்தமானதாக இருந்தாலும், முழு மூச்சோடும் மனித சம்பாஷணையில் சாத்தியமான அதிக பட்ச ஆர்வத்துடனும் பேசிக்கொண்டிருந்தான். இவன் அந்த நண்பன் பேசும் விஷயங்களைக் காட்டிலும் அவனுடைய பேச்சு வெளிப்பாடு விதத்தில் லயம் கொண்டு தலையசைத்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த நிலையில் அப்போது ஆகாயத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களும் வேறு சில வீடுகளின் மாடிப் பகுதிகளும் மட்டும் நிழலாகப் பார்வையில் தெரிந்தன. அப்போது அந்த நண்பன் சட்டென்று “அதோ பார்” என்றான். அது எதிர்வீட்டு மொட்டைமாடி. அங்கே யாரோ ஒரு பையன் ஒரு சிம்னி விளக்கு உதவியில் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். விளக்கு இவர்கள் இருந்த இடத்தில் தெரியவில்லை. அந்தப் பையன் எழுந்திருக்கிறான். சிம்னி விளக்கின் மங்கல் ஒளி ஒருகணம் பையன் முகத்தில் விழுந்தது. அந்த ஒருகணத்தில் கோடிகணக்கான மைல் தூரத்தில் நட்சத்திரங்கள் சிறு புள்ளிகளாக மின்னிக் கொண்டிருக்கும் கருநிற வானப் பின்னணியில் சுமார் இருபது முப்பது அடி தூரத்தில் அந்தப் பையனின் முகத்தின் ஒரு பகுதி மட்டும் சிம்னி விளக்கு ஒளிவிழுந்து ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதை போல - அப்படித் தேவதைகள் இருக்குமானால் பூமியின் எண்ணற்ற ஸ்தூல சக்திகளால் கட்டுப்பட்டிருக்கும் மனித உணர்வை, மனிதக்கற்பனையை, உளமன எழுச்சியை, எல்லைக்கடங்கா அகண்ட வெளியில் இழுத்துச் செல்லும் தேவதை போலக் காட்சியளித்தது. அந்த ஒரு கணம் அப்பையனின் முகம் சாந்தத்தில், அமைதியில், அழகில், பரிசுத்தத்தில் தெரிந்தது தெரியாததான இலட்சிய மனிதப் பிறவிகள் யாவரையும் ஒரு நொடியில் பிரகாசப்படுத்திப் போவது போல இருந்தது. அந்தப் பையன் விளக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிப் போய்விட்டான். நண்பன் பேசுவதை நிறுத்திவிட்டு வெகுநேரம் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அவன் லயம் கலைந்து ஒரு முறை பெருமூச்சு விட்டவுடன் இவன், “நீ சாப்பிட்டுவிட்டு இன்றிரவு இங்கே இருந்து விடேன்,” என்றான். சிறிது நேரம் முன்பு வரை ஆவேச இயக்கத்தின் உருவமாக இருந்த நண்பன் இப்போது எதிர்ப்பே சாத்தியமில்லாதவனாக மாறியிருந்தான். இரவு உணவு முடித்துவிட்டு இருவரும் மீண்டும் மாடிக்கு வந்தார்கள். ஏனோ இருவருக்கும் பேச விஷயங்களே இல்லாமல் போயிருந்தது. திடீரென்று நண்பன் அழ ஆரம்பித்தான். விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். இவன் அவனை அணைத்துக் கொண்டான். என்ன காரணம் என்று கேட்கத் தோன்றாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டான். அந்தச் சோகம் அற்ப சுய நல சோக்கு மன முறிவால் உண்டானதாகத் தோன்றவில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சோகமாகவும் தோன்றவில்லை. காலம் காலமாகக் கோடிக்கணக்கில் தோன்றி, உழன்று, மறைந்த மனித குலம் அனைத்திற்குமாக உண்டான சோகமாக இருந்தது. மனிதனின் முதன்மையானதும், மகத்தானதுமான இழப்புக்கு ஏற்பட்ட சோகமாக இருந்தது. மனித இனம் இழந்த பரிசுத்தத்திற்காக உருகி அழித்துக்கொள்ளும் சோகமாக இருந்தது. நண்பன் வெகு நேரம் அழுது ஓய்ந்தபின் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டான். இவனும் தன் கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு படுத்தபடியே வெகுநேரம் ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் விழித்திருந்தான். அந்த நண்பன், பரிசுத்தத்தின் எல்லையையும் சோகத்தின் எல்லையையும் உணர்வில் எட்டி அந்த மகத்தான அனுபவத்தை இன்னொருவனுக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய நண்பன், இப்பொழுது முன் திட்டத்தோடும் துவேஷத்தோடும் ஒருவனைப் பற்றிப் பொய்களைக் கூறிப் பரப்பி வருகிறான்!

அந்த மூன்று இளைஞர்கள் எழுந்து போய்விட்டார்கள். அவர்களை விட ஓரிரு வயதே பெரியவனாக இருக்கக்கூடிய தனக்கு அவர்களை எப்படித் தனியே இளைஞர்கள் என்று அழைக்கத் தோன்றியது என்று எண்ணிக் கொண்டான். ஏன் தன்னால் இப்படி முதுமையுணர்ச்சியோடு சிந்தனையில் விழுந்து கிடக்க முடிகிறது? அவன் எதிரே அந்த அசைவ ஹோட்டலிலும் தனக்கு இடமுண்டு என்று சொல்வது போல் ஒரு காந்திப் படம் புன்முறுவலித்துக் கொண்டிருந்தது. காந்தி! எப்பேர்ப்பட்ட மனிதர்! எவ்வளவு அசாத்தியமான நம்பிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் கொண்ட அபூர்வப் பிறவி! முப்பது வயதிலேயே முதுமை கொண்ட மனிதர். எங்கோ கடல் கடந்த நாட்டில் தனக்கு நேர்ந்த ஒரு அவமதிப்பை மனித இனத்திற்கே பொதுமைப்படுத்திக் கொள்ளக்கூடிய மன விசாலம் பெற்று இயற்கையின் தன்னிச்சையான அள்ளித் தெளிப்பால் கிடைத்த தோல் நிறத்தாலே கூட ஒரு மனிதன் இன்னொருவனை விட உயர்த்தி எனக் கொள்ளக்கூடிய எந்தவித நியாயவாதத்திற்கும் உட்பட முடியாத ஆனால் எவ்வளவோ நூற்றாண்டுகளாக நடைமுறை வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட சிருஷ்டி விநோதப் பெருமையையும் அகங்காரத்தையும் முற்றிலும் உணர்ந்து, சோகத்தில் தோய்ந்து, அந்தச் சோகத்தின் உந்துதலால் எண்ணற்ற அசாத்தியமான பணிகளில் ஈடுபட்ட மனிதர். அந்த வெள்ளிக்கிழமையன்று மாலை குண்டடிப்பட்டுச் சாகும்வரை சுயசுத்திரிகரிப்புத் தவத்தைத் தவறவிடாதவர். மனித இயல்பின் சபலங்களையும் பலவீனங்களையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர். அப்படிப்பட்ட மனிதருக்கு மனமுறிவும் ஏமாற்றங்களும் சாத்தியமேயில்லை. ஆனால் அவருடைய கடைசி ஆண்டுகள் கண்ணீரில் உப்பரிக்கப்பட்டவை. அழையா இடங்களுக்கு அவராகப் போய் அவரைக் கேட்காத ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அவராகக் கொடுத்து, பிரளயமாகப் பொங்கி வந்தப் பயங்கரக் கேடுகளுக்கு அவரே காரணம் எனத் தோற்றம் கொண்டு மற்றோரையும் நினைக்க வைத்து, தான் கண்டெடுத்து உருவாக்கி வளர்த்துவிட்ட சீடர்களைக் கிழம் ஏன் இப்படி தொல்லை கொடுக்கிறது எனச் சொல்லாமல் சொல்ல வைத்து, தன்னை வணங்கிய ஒருவன் கையாலேயே சாவும் அடைந்தவர். மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா?
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காந்தி - அசோகமித்திரன் Empty Re: காந்தி - அசோகமித்திரன்

Post by RAJABTHEEN Tue Feb 22, 2011 4:03 am

அவன் காந்தியைப் பார்த்தது கிடையாது. அவன் பிறந்ததே அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான். அவரைப்பற்றி அவன் முதன் முதலில் கேட்டதெல்லாம் அவர் பெயருடன் கூடவே தாத்தா, தாத்தா என்று சொல்லப்பட்டு ஏதோ பல்லுப்போன, உடல் வலுவிழந்த, விவரம் அறியாச் சிறுவர்களுக்கு மட்டும் களிப்பூட்டும் விதூஷக உருவம்தான். ஆனால் அப்படி இல்லை, எண்பது வயதை நெருங்கியபோதும் உலகம் அனைத்துக்கும் பொதுவான, பொருத்தமான பிரச்சினைகளில் முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், தனக்கு அந்தரங்கம் என்று எதையுமே வைத்துக் கொள்ளாதவர், ஒரு நாளில் இருபத்திநான்கு மணி நேரத்திலும் தன்னை மற்றவர் பார்வைக்கும் பரிசோதனைக்கும் பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் வெளிப்படுத்திக் கொண்டவர். தனக்கே கூச்சமேற்படுத்தும் நினைவுகளையும் அனுபவங்களையும் அவரைப் பேர் ஊர் தெரியாதவர்கள் கூட என்றோ எப்போதோ அறிந்து அவரைப்பற்றி விகாரமாக எண்ணிக் கொள்ளக்கூடிய வகையில் ஒப்புதல் வாக்குமூலம் போல சுயசரிதை எழுதியவர், தான் நேற்றிருந்தவனில்லை, ஒவ்வொரு கணமும் மறுபிறவி எடுக்கக் கூடியவன் - மாற்றம் கொள்ளக் கூடியவன் - உயரக்கூடியவன் - என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் முன்கணம் களங்கமுற்றதை இந்தக் கணம் பகிரங்கப்படுத்தத் தயங்காதவர், இந்த மனிதர் கடவுளைக் குறிப்பது என்று தான் நம்பிய ஒரு சொல்லை உச்சரித்தபடிதான் தன் இறுதி மூச்சை விட்டார். அவர் கடவுளைக் கண்டாரா? கடவுள்தான் மனித துயரத்தின் எல்லையா? இந்த மனிதரால் எப்படிச் சிரிக்கவும் முடிந்திருக்கிறது?

காபிக் கோப்பை மீது உட்கார வந்த ஒரு ஈயைச் சட்டென்று விரட்டினான். அரைக் கோப்பை அளவு மிஞ்சியிருந்த காபி மீது லேசாக ஏடு பரவ ஆரம்பித்திருந்தது. இந்த காபியைத்தான் குடிக்கப் போவதில்லையே, ஏன் ஈயை விரட்டினோம் என்று அவனுக்குத் தோன்றியது. ஓர் ஈ எத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கும்? பத்து நாட்கள்? இருபது நாட்கள்? ஒரு மாதம்? அந்தக் குறுகிய கால வாழ்க்கையில் ஒரு கணம், அதன் ஒரு வாய் உணவு, பெரும்பங்கைத்தான் வகிக்க வேண்டும். அவனால் இப்போது சாக்கடையில் கொட்டப்பட இருக்கும் அந்த காபி எத்தனை ஜீவ ராசிகளின் முழு ஜீவித ஆதாரமாக இருக்கக்கூடும்?எவ்வளவு எளிதில் சிருஷ்டி தர்மத்தை, ஓருயிர் தான் வாழவேண்டும் என்று மேற்கொள்ளும் இயக்கத்தை, தன்னால் ஒரு சலனம் கூட இல்லாமல் புறக்கணிக்க முடிகிறது, துஷ்பிரயோகம் செய்ய முடிகிறது? மனிதனுக்கும் மனிதனுக்கும்கூட இப்படித்தானோ? காந்தி இதற்குத்தான் மீண்டும் மீண்டும் தான் ஆங்கிலேயரை வெறுக்கவில்லை, ஆங்கிலேயரைத் துவேஷிக்கவில்லை என்று கூறிக் கொண்டாரோ?

ஆனால் காந்தியை அவனுடைய நண்பன் ஒத்துக்கொண்டதில்லை. காந்தியாலே கூட தனக்கும் தன் நண்பனுக்கும் இப்படிக் குரோதம் தோன்றிவிட்டதோ என்று நினைத்துக் கொண்டான். “காந்தியைப் போல ஒரு அயோக்கியன் மனித சரித்திரத்திலேயே பிறந்ததில்லை. அவனைப் போல் ஒரு மனித இன விரோதி செயல்பட்டதேயில்லை. இன்று சோவியத்தாரர்கள் அவர்களுக்குச் சௌகரியமாயிருக்கிறது என்று அவர்களும் காந்தி பஜனை செய்யலாம். ஆனால் அவனைப் போன்ற ஒரு பாட்டாளி வர்க்கச் சத்ரு உலகத்தில் தோன்றியதே இல்லை” - இவ்வளவு திட்டவட்டமாக, தீவிரமாக, பெயர் ஊர் தெரியாத ஒரு சிறுவன் முகத்தின் பரிசுத்தத் தோற்றத்தில் உள்மன வயப்பட்டு உருகிக் கண்ணீர் வடிக்கவும் கூடிய அவனுடைய நண்பன் கூறியிருந்தான். திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான். காந்தியைப் பற்றித் தான் அறிந்ததெல்லாம் அவனுடைய நண்பனும் அறிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தும் இவ்வளவு நிந்தனையை வெகு எளிதாக மனதின் அடித்தளத்திலிருந்து காந்திமீது சுமத்த முடிகிறது. “எப்படிக் கூறுகிறாய்?” என்று இவன் கேட்டிருக்கிறான்.

“அந்த மனிதனுடைய ஒவ்வொரு செய்கையும் அவன் அயோக்கியன் என்று காட்டுகிறது. ஊருக்கெல்லாம் உபதேசம். தான் செய்வதெல்லாம் அதற்கு நேர் எதிரானது.”

“எப்படி?”

“ஒரு செயல்கூடப் பாட்டாளி மக்கள் நன்மைக்காக என்று கிடையாது. தானும் தன் பனியா இனத்தினரும் நிரந்தரமாக ஏகபோக வர்த்தக ஆதிக்கம் இழக்காமல் இருக்கவேண்டும் என்றுதான் அவன் செயல்பட்டது. ஒருமுறை கூட உண்மையான தொழிலாளிகள் வர்க்கத்துடன் இணைந்துகொள்ளவில்லை மாறாக ஒவ்வொரு தொழிலாளர் கிளர்ச்சியின் போதும் பனியா முதலாளிகள் உடைமைகளையும் நலன்களையுமே பாதுகாக்க விவரமறியா ஏழைகளைப் பலியிட்டிருக்கிறான். சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் என்று கூச்சலிட்டதெல்லாம் பனியா மில் முதலாளிகளின் கொள்ளையடிப்பைப் பாதுகாக்கத்தான். ஆங்கிலத் துணி பகிஷ்கரிப்பு பம்பாய் மில்களின் ஏகபோக வர்த்தகத்தை வலுப்படுத்தத்தான். எந்தத் தொழிற்சங்கக் கிளர்ச்சியிலும் தலையிட்டு மில் முதலாளிகளுக்குச் சாதகமாகவே கிளர்ச்சியைத் திசை திருப்பி விடுவதுதான் அவன் நோக்கம். எந்த உண்மையான மக்கள் எழுச்சியும் பண முதலைகளுக்குச் சாதகமாக மாற்றி விடுவதுதான் அவன் ஆயுள் லட்சியம். கை நூற்பு, கைவேலை, சர்வோதயம் என்றெல்லாம் ஏழைகள் என்றென்றைக்கும் ஏழைகளாகவே இருந்து சாவதற்காகச் செய்த தந்திரம். யாரும் ஆங்கில மருந்துகளை உபயோகிக்கக் கூடாது, மேல் நாட்டு வைத்திய முறை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதற்காக என்று நாளெல்லாம் அலறிவிட்டுத் தனக்கு மட்டும் உடம்புக்கு வந்தால் உடனே அதே வைத்தியர்களிடம் ஓடுவதுதான் அவனுடைய வழக்கம். ‘உனக்கு ஆபரேஷன் செய்தால் நீ பிழைப்பாய்’ என்று கூறியபோது வாயை மூடிக்கொண்டு ஆபரேஷன் செய்துகொண்டவன் தானே இந்தக் காந்தி!”
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காந்தி - அசோகமித்திரன் Empty Re: காந்தி - அசோகமித்திரன்

Post by RAJABTHEEN Tue Feb 22, 2011 4:03 am

“தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது யாருக்கும் முதல் தர்மமில்லையா?”

“அதுதான், அதுவேதான். தன் உயிர் என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கெல்லாம் உபதேசம். மாட்டுப் பால் குடித்தால் ஹிம்சை. ஆட்டுப்பால் குடித்தால் அஹிம்சை.”

“இப்படி ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் முழு வாழ்நாள் சாதனைகளையும் இலட்சியங்களையும் புறக்கணிக்க முடியுமா?”

“என்ன சாதனை? என்ன இலட்சியம்? ஒத்துழையாமை என்று கூறி மக்களை ஏவி விடுவது, அது ஒரு உண்மையான மக்கள் புரட்சியாக மாறும்போது எஜமானர்களுக்குச் சாதகமாகக் கைவிடுவது! பெஷாவரில் என்ன நடந்தது?மக்களோடு கார்வாலி ரெஜிமெண்ட் இணைந்து கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தை உதறித் தள்ளியிருக்கிறது. நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கர அடக்குமுறையைக் கட்டவிழ்த்து அந்த கார்வாலி ரெஜிமெண்டைச் சின்னாபின்னமாகப் படுகொலை செய்து, சித்திரவதை செய்து அந்தமானில் தீவாந்திரத்திற்கு அனுப்பிய போது இந்த மகாயோக்கியன் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறான். ‘அரசியல் கைதிகள் எல்லாரையும் விடுவிக்க வேண்டும். கார்வாலி வீரர்களைத் தவிர.’ இவன் தேசப்பிதா.”

“நீ முழு விவரங்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்காமல் பகுதி பகுதியாகத் துண்டித்துப் பேசுகிறாய்.”

“நான் பேச என்ன இருக்கிறது? இந்திய சரித்திரம் முழுக்கவே இவன் துரோகச் செய்ல்களை அடுக்கிக் கொண்டே போகிறதே? பம்பாயில் கப்பற்படைக் கிளர்ச்சி போது என்ன நடந்தது? கப்பற்படை வீரர்களுடன் பம்பாய் நகரத் தொழிலாளர் வர்க்கம் அனைத்துமே சேர்ந்து கொண்டது. இந்திய வரலாற்றிலேயே முற்றிலும் சுயமான, பூரணமான இந்து முஸ்லீம் - இணைப்பு என்று அப்போதுதான் நடந்தது. அந்தப் போராட்ட மட்டும் அரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தால் 1857 புரட்சியைக் காட்டிலும் பரிபூரணமான உண்மையான சுதந்திரப் புரட்சியாக மாறியிருக்கும். ஆனால் இந்த மகாத்மா என்ன செய்தான் அப்போது? ஆங்கிலப்படை பலத்தைத் திரணமாக மதித்து எதிர்த்து நின்ற அந்த உண்மையான வீரர்களை ஆதரித்து ஒரு வார்த்தை கூறவில்லை. ஒரு அறிக்கை விடவில்லை. மாறாக அவர்கள் முதுகில் கத்தி பாய்ச்சினான். ‘இந்த விதமான இணைப்பு நான் வேண்டும் உன்னத ஹிந்து - முஸ்லீம் இணைப்பு அல்ல. படைவீரர்கள் அதிகாரிகளை மீறித் தள்ளும் கட்டுப்பாடற்ற தன்மையை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.’ கட்டுப்பாடற்ற தன்மை! இவன் வாழ்க்கையே முழுக்க முழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மை. இவன் உபதேசிக்கிறான் கட்டுப்பாடு!”

“நீ தவறான ஆதாரங்களையே படித்திருக்கிறாய்.”

“இவன் தவறான ஆதாரங்களைத்தான் உலகமெல்லாம் பரப்பியிருக்கிறான்? அதைத்தானே உலகமெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது? பொய், புனைசுருட்டு, திரித்துக்கூறல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், தனக்கு ஒரு நியாயம், மக்களுக்கு வேறொரு நியாயம்....”

“உன் ஆதாரம் எது? நீ எதை வைத்துக்கொண்டு இப்படிப் பேசுகிறாய்?”

“நீ ஆர்.பி. டட் எழுதிய ‘இன்றைய இந்தியா’ படி. புரியும் இந்த மகாத்மாவின் மகாத்மியம். இவன் கைப்பட எழுதிய கடிதங்களும் அறிக்கைகளுமே இருக்கின்றன.”

“அவ்வளவுதானா? ஒருவரைப்பற்றி ஒருவர் எழுதியதை மட்டும் வைத்துக்கொண்டு தீர்ப்புக்கூறிவிட முடியுமா? ஒருவன் எண்பதாண்டுகள் பொது வாழ்க்கைக்கே அர்ப்பணித்துச் செயல்பட்டிருந்த போது ஒருவர் விமர்சனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அந்த எண்பதாண்டு பணிகளை உதறித் தள்ளிவிட முடியுமா? நாம் அவரின் செயல்களை நாமாகப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டாமா?”

”என் பரிசீலனை முடிந்துவிட்டது. இவன் கார்வாலி ரெஜிமெண்டைத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியுமா? இவனுடைய காந்தி இர்வின் ஒப்பந்தம் பனியா முதலாளிகள் உடமைகள் பாதுகாப்புக்காகவென்றே செய்யப்படவில்லை என்று கூறமுடியுமா? இவன் மேல்நாட்டு வைத்தியமுறை ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை என்று கூற முடியுமா? இவன் கப்பற்படை வீரர்கள் எழுச்சியை ஒடுக்குவதற்குச் செயல்படவில்லை என்று கூறமுடியுமா? என் பரிசீலனை முடிந்துவிட்டது. அஹீம்சையாம் அஹிம்சை! காஷ்மீரில் இவன் அஹிம்சையைக் காண்பித்திருக்கலாமே? படையெடுப்புக்கு எதிராக இந்தியத் துருப்புக்களை அனுப்பியபோது இவன் வாயை மூடிக்கொண்டிதானே இருந்தான்!”

இப்போது காந்தி படம் இன்னமும் அதிகமாகப் புன்முறுவலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று. பல கோடி ஆண்டுகள் முன்பு நேர்ந்திருக்க வேண்டிய சிருஷ்டியிலிருந்து தொடங்கி உலக வரலாற்றின் ஒவ்வொரு நாளும் மறுபரிசீலனைக்கும் புது முடிவுகளுக்கும் உட்பட்டுக் கொண்டிருக்கும் இன்றுகூட காந்தி பற்றி மட்டும் ஒருவனுக்கு அவன் பரிசீலனை முடிந்துவிட்டது. அந்த நண்பனுக்குக் காந்தி பற்றிய பரிசீலனை மட்டும் என்றில்லை. அந்த நண்பனுடைய காந்தி பற்றிய பரிசீலனையைத் துணை வைத்துக்கொண்டு தன்னைத் தானே பரிசீலித்துக்கொள்ள முடியுமா எதை சத்தியம் என்று வைத்துக்கொண்டு அடுத்தக் கட்டத்திற்குப் போவது? இதனால் தான் காந்தி தன் சுயசரிதத்தைச் ‘சத்திய சோதனை’ என்று பெயரிட்டாரோ?

அவனுடைய நண்பன் ‘சத்திய சோதனை’யைப் படித்திருக்க மாட்டானென்று அவனுக்குத் தோன்றிற்று. அதைப் படித்திருந்தால் அவன் பார்வைக்கு இன்னும் டஜன் கணக்கில் குறைகளும் பாதகங்களும் அடுக்க முடியும். அந்த மனிதர் அதெல்லாவற்றையும் எழுதி வைத்துப் போயிருக்கிறார். அது முழு வாழ்க்கைச் சுயசரிதம் அல்ல. அதில் கண்டிருப்பதற்குப் பின்னர் இன்னும் இருபதாண்டுகளுக்கும் மேலாக காந்தி வாழ்ந்திருக்கிறார். உலக சரித்திரம் அந்த இருபதாண்டுகளில்தான் பயங்கரத் தீவிரம் அடைந்திருக்கிறது. முழு தேசங்கள் அழிந்திருக்கின்றன. முழு நம்பிக்கைகள் அழிந்திருக்கின்றன. முழு கலாச்சாரங்கள் அழிந்திருக்கின்றன. நேரடியாகவும் சில இயக்கங்களின் விளைவாகவும் மக்கள் லட்சக் கணக்கில் அணு அணுவாகவும் ஒரேயடியாகவும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளாக மனிதர் வாழ்ந்த காலத்தில் ஒருவன் முகத்தை இன்னொருவன் அறிந்துதான் கொலை செய்திருக்கிறான். இன்று கொலையாளிக்கு அவன் யாரை எவ்வளவு பேரைக் கொலை செய்யப்போகிறான் என்று தெரியாது. அவன் வரையில் அவன் விசையைத் தள்ளுபவன். கொலை செய்யப்படுபவர்களுக்கும் அவர்களுடைய முடிவுக்கு எவன் உண்மையான காரணம் என்று தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அவன் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் ஒரு சுரங்க அறையில் மிகவும் பத்திரமாக, மிகவும் பத்தியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான். அங்கு அவன் கூட இருக்கும் நாய் பூனைகளிடம் கருணையின் வடிவமாக இருப்பான்..
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காந்தி - அசோகமித்திரன் Empty Re: காந்தி - அசோகமித்திரன்

Post by RAJABTHEEN Tue Feb 22, 2011 4:03 am

நான் யாரையோ எதற்குச் சொல்ல வேண்டும், என் நண்பனே அப்படித்தானே இருக்கிறான்? - சிந்தனை பொது விஷயங்களிலிருந்து பிரிந்து மீண்டும் தன்னைப் பற்றியதாக மாறியதில் அவன் வேதனை தணிந்தது போலிருந்தது. சட்டென்று பொங்கி எழுந்தது. தன்னலனைப் பற்றிய சிந்தனைகளுக்குத்தான் எவ்வளவு கட்டுப்பட்டு அடிமையாக இருக்கிறானென்ற உணர்வு அவன் வேதனையை அக்கணத்தில் விம்மியழுது தீர்க்க வேண்டியதொன்றாகக் கூர்மைப்படுத்தியது. அந்த உண்மையும் எல்லா உண்மைகளைப் போலக் கசப்பாக இருந்தது.

அவன் எதிரே அரைக்கோப்பையளவில் ஆறிக்குளிர்ந்து போயிருந்த காபி மீது காற்று வீசும்போது நூற்றுக்கணக்கான நுணுக்கமான கோடுகளின் நெளிவுமூலம் காபி திரவத்தின் மேற்பரப்பில் பரவிய மெல்லிய ஏடு தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.

(1973)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காந்தி - அசோகமித்திரன் Empty Re: காந்தி - அசோகமித்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum