தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



(இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்

2 posters

Go down

(இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள் Empty (இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 12, 2012 8:05 pm

இயல் – இரண்டு
கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்


சமுதாயமும் இலக்கியமும் ஒன்றுக்கு ஒன்று உறவு உடையவை சமுதாயத்திலிருந்தே இலக்கியங்கள் உருவாக்கம் பெருகின்றன. சமுதாயம் என்பது மக்களின் கூட்டு அமைப்பாகும். சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் அதன் உறுப்பினர்களாகச் செயலாற்றுகின்றனர். சமூக உறுப்பினரின் வாழ்க்கைச் சிறப்பு அச்சமூகத்தின் சிறப்பாக அமைகிறது. தனிமனிதனின் வாழ்க்கை முறையைக் கொண்டு சமூக ஒழுங்கையும் வளர்ச்சியையும் கண்டறியலாம். மக்களின் வாழ்க்கை முறைகளைச் சமூக உண்மைகள் எனக் கூறுவர். இந்தச் சமூக உண்மைகளை அறிந்துகொள்வதற்கும், புரிந்து செயலாற்றிடவும் எழுத்து இலக்கிய வகைகள் மிகவும் உதவி செய்பவையாகத் திகழ்கின்றன. ஏனெனில் எழுத்து வடிவ இலக்கியங்கள் சமூகத்தை நன்கு தெளிவுப்பத்தும் ஆற்றல் பெற்றுள்ளன.

இலக்கியம் எதுவாயினும் அதன் களமாக வாழ்க்கைதான் இருக்கிறது. வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையிலும், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் முறையிலும் இலக்கியம் பல திசைகளில் பிரிந்து போய் உண்மையைத் தேடுகிறது.

அவ்விலக்கியம், சமுதாய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அமைகிறது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது இலக்கியம். சங்க காலம், நீதிநூற் காலம், காப்பியக் காலம் என அமையும் இலக்கிய வரலாற்றினுள் இறுதியாக அமைவது இக்கால இலக்கியமாகும்.

ஆங்கிலக் கல்வியும் அச்சு இயந்திரமும் அமைத்துத் தந்த அடித்தளத்தால் வேரூன்றிய இக்கால இலக்கியத்துள், நாவல் இலக்கியம் தமிழுக்குக் கிடைத்த புது வரவுகளுள் ஒன்றாகும். இன்றைய சமுதாயத்தில், நிலவும் சில சிக்கல்களைச் சுட்டிக் காட்டுவதோடு, தீர்வும் தருகின்ற நாவலாகக் கனவுத் தொட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலக்கியம் - நோக்கமும் பயனும்
தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்கள் அனைத்தும் அவை தோன்றிய காலத்து மக்களின் வாழ்க்கை நெறிகளை உணர்த்துவனவாகவே அமைந்துள்ளன. அம்மக்கட் சமுதாய அமைப்பின் அடிப்படையிலேயே இலக்கியங்கள் உருபெற்றன. இதனை,
“ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடப்பிலிருக்கின்ற பொருளாதார அரசியற் சமுதாய அமைப்புகளின் பிரதிபலிப்பாகத் தோன்றும் தத்துவக் கோட்பாடுகளுக்கேற்பவே இலக்கியம் பற்றிய சிந்தனைகளும் அமைகின்றன.”1
என்னும் கருத்து அரண் செய்கிறது.
இலக்கியமும் சமுதாயமும் ஒன்றுக்கொன்று சங்கிலித் தொடர்போல இயைந்தவை என்பதோடு, ஒன்றில்லாமல் மற்றொன்றிற்கு நிலைபேறில்லை என்பதும் குறிக்கத்தக்கது. இதனை,
“ஒரு சமூகம் நிலைபேறுடைய நிறுவனமாக இயங்குவதற்கும், அவ்வாறு இயங்கியுள்ளது என்பதை அறிவதற்கும், இலக்கியம் மிக முக்கியமானதாகிறது. இதனாலேயே இலக்கிய உருவாக்க மில்லாது சமூக உருவாக்க மில்லை”2
என்று பேராசிரியர் ரேமண்ட் வில்லியம்ஸ் கூறுவதும் உறுதிப்படுகிறது.

மனித சமுதாயத்திற்கே குறிக்கோளை எடுத்தியம்பிப் பயன்படத்தக்க வகையில் அமைவது இலக்கியத்தின் சிறப்பியல்பாகிறது.
“மனிதனின் நாகரிக முன்னேற்றத்திற்கும் சமுதாயப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் வழிகாட்டுகின்ற உயர்ந்த இலட்சியங்களைக் கற்பனையோடும் கலைவண்ணத்தோடும் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் பயன்தரும் வகையில் படைக்கப்படும் எழுத்து வடிவங்களெல்லாம் இலக்கிய வடிவங்களே.”3
என்னும் கருத்து இங்குச் சிந்திக்கத்தக்கது.

இலக்கியம் பொழுதுபோக்கிற்காக மட்டும் தோன்றுவதில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதார சக்திகளால் உந்தப்பட்டே தோன்றுகிறது எனலாம்.
“சமூக முன்னேற்றத்திற்கும் சமுதாய மாற்றத்திற்கும் உதவும் தரமான படைப்பு இலக்கியமாகிறது.”4
என்னும் கூற்று, இலக்கியத்தின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது.
“வெளிப்பாட்டு முறைமை அமைவது வேறுபடினும், சமூக உருவாக்கத்திற்கு இலக்கியம் அத்தியாவசியமானதென்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.”5
என்னும் கூற்று, சமுதாயத்தை உருவாக்குவதில் இலக்கியத்தின் பங்களிப்பு எத்தகையதென்பதைப் புலப்படுத்துகிறது. அரசியல், சமூக, பொருளாதார நிலைகளால் அமைந்த களத்தில் தோன்றும் இலக்கியம், சமுதாய உணர்வை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையும் என்பது உறுதியாகிறது.
“இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக்குக் கொறிக்கும் சிறு தீனிகளாகி விடக்கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப்போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே எட்டுவதாக இருக்க வேண்டும்.”6
என்ற நோக்கமே இலக்கியப் படைப்பாளர்களுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அதனை வலியுறுத்தும்படியான படைப்பையே வித்யாசாகர் படைத்திருக்கிறார் என்பதை,
“ஒரு குழந்தைக்கு உணவிடும்போது அது நிறையச் சாப்பிட வேண்டுமென்ற ஆசையில் நிறைய வாங்கிக் கொள்ளும். ஆனால் உண்பது சிறிதளவு அல்லவா. அப்படித்தான் நானும் இதனை நம் சமூகத் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று நான் இந்நாவலைத் துவங்கினேன்.”7
என்று வரும் வித்யாசாகரின் தற்கூற்றே சான்றாகிறது.

சமுதாய உணர்வை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட இலக்கியத்தின் பயன் சமுதாயத்தைச் சீரமைப்பதே. சமுதாயத்தின் குறைகளைச் சுட்டடிக்காட்டி, அதனைத் தீர்க்கும் வழிவகைகளையும் குறிப்பிட்டுச் செல்கிறது என்று கருத முடிகிறது. அவ்வகையில் இவ்வியலில் முதற்கண் கனவுத் தொட்டிலில் காணப்படும் சமூகச் சிக்கல்கள் எடுத்துரைக்கப்படுகிறது.

உறவு முறைகளில் வாழ்வியல் சிந்தனைகள்
வித்யாசாகரின் கனவுத் தொட்டில் உறவு முறைகளோடு பின்னப்பட்ட கதைக்களமாகவே இருக்கின்றது. இந்நாவலின் மூலம் வாழ்க்கையை; உறவு முறைகளை அர்த்தப்படுத்திக்கொள்ளவும் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் அதை உணரும் பாத்திரங்களாகவும் படைக்கப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.

குடும்ப உறவுகளில் ஆண் - பெண் உறவு
குடும்பம் பலம் வாய்ந்த ஒரு சமூக அமைப்பாகும். ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு ஒரு குடும்பமாகும். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒன்றுபட்டு வாழ்வது, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் உறைவிடம் குடும்பம் எனலாம். பல்வேறு சண்டை சச்சரவுகளுக்கிடையேயும் குடும்பம் என்ற அமைப்பு இன்றுவரை பலமாக நீடித்திருப்பது பரிவு, பாதுகாப்பு என்ற இரு சிறப்பியல்புகளால்தான். குடும்பங்களற்ற அனாதைகள், குடும்பங்களுக்காக ஏங்குவதும், குடும்பம் என்ற அமைப்புக்குள் வரத் துடிப்பதும் பல்வேறு பண்பாட்டு அமைப்புகளால் இன்று உலகின் கவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தின் தேவை கட்டாயமாக உணரப்படும் இக்காலத்தில் வித்யாசாகர் குடும்ப உறவுகளை மையப்படுத்தி நாவலைப் படைத்திருப்பது கூடுதல் அர்த்தமுடையதாகிறது.
“நடைமுறை வாழ்க்கையில் ஒரு வீட்டில் வசிக்கும் இரத்த உறவுடைய உறவினர்கள் அனைவரையும் சுட்டக் ‘குடும்பம்’ என்ற சொல் பயன்படுகிறது.”8
என்பதோடு,
“குடும்பம் என்றால் தங்களுக்குள் உறவுகளையுடைய ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு ஆகும்.”9
என்றும் சமூகவியலாலரின் கருத்தும் ஏற்புடையதாகிறது. ஆண் - பெண் உறவுகளில் குறிப்பிடத்தக்க உறவு கணவன் - மனைவி உறவாகும். இந்நாவலில் வெண்மதிவாணனும் வைஷ்ணவியும் கணவன் மனைவி பாத்திரங்கள் ஆவர். அன்பொத்து வாழும் இவர்களிடையே கருத்துவேறுபாடு தலைக்காட்டி விவாகரத்து வழக்கு வரை சென்று நிற்கிறது.
“இன்னொரு முறை அவுங்க யார் மேலன்னா கையை வெச்ச உன்னை வெட்ட கூடத் தயங்க மாட்டேன்! ச்ச… உன்னை எல்லாம் என் புருஷன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு என்று எச்சரித்துவிட்டு கதறி அழுதுகொண்டே அறுவாமனையை வீசி எறிகிறாள்.”10
என்று வைஷ்ணவி தன் தந்தையை அடித்துவிட்ட கணவரை எச்சரிக்கும் படி பேசியது இருவரின் வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

குடும்ப வாழ்க்கையில் இன்பம் என்பது பெற்றெடுத்த பிள்ளைகள் விட்டுக் கொடுத்தல், பணிந்துபோதல், மதிப்புக் கொடுத்தல், உடல் நலனில் அக்கறை காட்டுதல் இவற்றின் மூலமாகவே பெற முடியும் என்று நாவல்11 சுட்டிக் காட்டுகிறது. அவ்வாறு ஒருவர் குடும்பத்திற்குள் முறைதவறி நடக்கும்போது அந்தக் குடும்பத்தில் சிக்கல் உருவாவது தவிர்க்க முடியாததாகிறது என்பதையும் இந்நாவல் சுட்டிக்காட்டுகிறது.

குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்
நவீன ஐரோப்பியச் சிந்தனையாளர்கள், குடும்பத்தை ஓர் அதிகார மையமாகவே காண்கின்றனர். ஜனநாயகமின்மை, சமூக உணர்வின்மை என்ற இரு குற்றச்சாட்டுகளுக்குக் குடும்பம் உள்ளாகியிருக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான சுவர்களைக் குடும்பம் எழுப்பி இருப்பதே இதற்கான காரணம் ஆகும். இந்தச் சுவர்களால் சுதந்திரம் இழந்து பாதிக்கப்படுவோர், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே. குடும்பம் என்பது ஜனநாயகப் பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை என்ற ஏமாற்றம் நிறைந்த கணிப்பு இன்றைய தலைமுறையினரிடம், குறிப்பாகப் பெண்ணுரிமைவாதிகளிடம் வெளிப்படுவதை நம்மால் அண்மைக்காலத்தில் கவனிக்கமுடிகிறது.
“ஒரு கூறையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு குடும்ப மாகும். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒன்றுபட்டு வாழ்வது, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் உறைவிடம் குடும்பம்... ஆனால் நடைமுறையில் தீவிரமாக மாறிவரும் அரசியல், பொருளியல், சமூகச் சூழலில் குடும்பம் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சவால்கள்தான் எத்தனை.”12
என்று வரையறுப்பதில் குடும்பச் சிக்கலுக்குக் காரணமாகச் சமுதாயமும் ஒரு மறைமுகக் காரணமாகிப் போகிறது. இந்நாவலில் சில சிறிய பிரச்சினைகளே குடும்பத்துள் சண்டைக்குக் காரணமாகி நிற்கிறது என்பதைக் காணமுடிகிறது.
“உலகின் மாற்றங்களைச் செய்ய எண்ணுவோர் அதைத் தன் வீட்டிலிருந்து துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும், நாட்டை நீ தவறு என்பதைவிட இந்த நாட்டில் அடங்கிய நான் தவறு’ எனவே நான் சரியானால் எல்லாம் சரியாகும் என்பதால் எல்லோருமே முதலில் தன்னைச் சரிபடுத்திக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாகச் சொல்லும்விதமாகவும் குடும்பச் சிக்கல்களுக்கான நிறைய வழிகளையமைத்து, பின் அவைகளைச் சரிசெய்து சுபமாக முடியுமாறு இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் சிக்கல்கள் குடும்பத்தில் எவ்வாறு உண்டாகிறது, பின் அவைகளை நாம் எவ்வாறு சீர் செய்யலாம், ஒரு குடும்பம் என்பது எத்தனை நுட்பமானது, பின் அதை எவ்வாறு சிறப்பாக நாம் நடத்துகையில் அது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை பயக்குகிறது என்பதைப் படிக்கும் வாசகர்கள் விளங்கிக் கொள்ளவே குடும்பச் சிக்கல்கள் நிறைய இந்நாவலில் கையாளப்பட்டது.”13
கனவுத் தொட்டிலில் கணவனிடம் உண்மையாக அன்பு செலுத்தும் மனைவி பின்னர், கணவனின் சிறுதவறுகளால் குடும்பத்தில் மனக் கசப்பு உண்டாகும்படி நடந்து கொள்கிறாள். அதனால், இந்தக் குடும்பம் சிக்கலை சந்திக்கிறது.
“அவுங்க ஒண்ணும் குழந்தை இல்லை! ஆயிரம் சாவு, ஆயிரம் சடங்கு, ஆயிரம் நல்லது கெட்டதுன்னு அனுபவிச்சி முடிச்ச கெழக்கட்டை அவுங்க! இன்னைக்கோ… நாளைக்கோன்னு நாளை எண்ணின்ருக்க இதுமாதிரி அப்பாம்மாக்களுக்கு, இனி இருக்கிற கொஞ்ச நாட்கள் தானே வாழ்க்கைன்றது ஏன் உன்னை மாதிரி ஜென்மங்களுக்குப் புரிய மாட்டேங்குது.”14
என்று தன் தந்தையிடமும் தாயிடமும் குறைகாணும் வைஷ்ணவிக்கு வெண்மதிவாணன் நல்லெண்ணத்தைப் போதிக்கிறான். தாய் தந்தையின் பாசத்தை என்றும் நாம் மறந்துவிட முடியாது என்பதை,
“ஒரு மனுஷனை பாடையில் வெக்கிற வரையும் அவனோட உணர்வுகள் மரத்து போனாலும் கூட எங்கோ ஒரு மூலையில இடுக்குகளிலாவது மீண்டும்… மீண்டும்… ஏக்கத்தைத் தர ஒரே விஷயம். அம்மா… அப்பா… தந்த அவர்களுடைய பாசம் நிறைந்த நினைவுகள் தானே? அதை இருக்கும்போது நாமெல்லாம் மதிக்காம இழந்து விடுகிறோமென்பது தான் என் வருத்தம்”15
என்று அழுத்தமாக எடுத்துரைக்கிறார் வித்யாசாகர். தாய் தந்தையை இழந்த பின் அவர்களின் பாசத்துக்காக ஏங்குவது மூடத்தனம் என்றும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஊட்டுகிறார். இருந்தாலும், அவர்களின் இல்வாழ்க்கை,
“இருவரும் சாப்பிட்டார்கள். தூங்கினார்கள். அடுத்தச் சில நாட்கள் அவர்களுக்குச் சோகமாகவும், மனக்கசப்பாகவும் நகர்ந்தது.”16
என்பதால் சிக்கலை நிவர்த்திச் செய்துக்கொள்ளவும் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து நடக்கவும் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. இதனால் விவாகரத்து வரை சென்று நிற்கிறது.

விவாகரத்து
அன்பும் இன்பமும் நிறைந்தது குடும்ப வாழ்க்கை. ஆனால், இன்றைய மேற்கத்திய கலாச்சார நுகர்வினாலும் தேவையான பணப் புழக்கத்தினாலும் இல்வாழ்க்கை சிதைய ஆரம்பித்துள்ளது.

பிடிக்காத இருவரை விலக்கி அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ வழி அமைத்துத் தர விவாகரத்து நல்ல ஆயுதமென்று நம்பிதான் விவாகரத்து முறை நிர்மாணிக்கப்பட்டது.17 ஆனால், நன்றாக வாழ்ந்த இரு மனசு ஏதோ ஒரு கோபத்தில், ஒரு புரிதலில்லா நிலையில், அல்லது யாரோ வேற்று மனிதரின் கற்பிதத்தில் விலகிக் கொள்ளுமெனில் அது பின் விடை கிடைத்திடாத பெரு அவஸ்த்தையோடு நில்லாமல், அவர்களைச் சார்ந்தோரையும் முக்கியமாகக் குழந்தைகளை எல்லாம் பாதிப்பது கொடுமை என்று எடுத்துரைக்கிறார் வித்யாசாகர்.
“எங்குப் பார்த்தாலும் விவாகரத்து, எந்த நாளிதழ் எடுத்தாலும் விவாகரத்து, எடுத்த எடுப்பிற்கெல்லாம் விவாகரத்து, வாழ்க்கைச் சீர்க்கேட்டிற்கும் வரம்பு மீறிய மனிதர்களின் வக்கிர உணர்ச்சி களுக்கும், இனி கெட்டுப் போகும் மனிதன் இப்படித் தன் உணர்ச்சிகளை – தான் என்ற செருக்கிற்கு – விற்று வாழ்வான் என்ற அடையாளத்திற்கும் இந்த பெருகி வரும் விவாகரத்து ஒன்று போதாதா?”18
என்று சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்து பிரச்சினையைக் கண்டு மனம் நோகின்றவராக வித்யாசாகர் இருக்கிறார். விவாகரத்தால் எத்தனையோ பேர் – தானும் பிரிந்து தன் குழந்தைகளையும் பிரித்துக் கொள்கிறார்கள். அத்தகைய குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் – அவர்களின் மனநிலை எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை,
“… பிடித்தால் வாழ்வோம், பிடிக்காவிட்டால் ‘அறுத்துவிட்டுப் போவோம் எனும் விட்டேத்தியான’ மனநிலை மோசகரமனது. அதனால் நாளை குழந்தைகளிடத்தில் பெருத்த குழப்ப மேற்படலாம். இங்குமங்கும் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுத் தான்தோன்றித் தனமாகப் பிள்ளைகள் நடந்துகொள்ளலாம். அதைத் தட்டிக் கேட்கும் உரிமை கூடப் பரஸ்பரம் பெற்றோரிடத்தில் இல்லாது போகலாம்.”19
என்பதால், விவாகரத்தால் குடும்பம், பாசம், விட்டுக் கொடுத்தல், பெருந்தன்மை கருதல், உதவியாக இருத்தல், பிறர் நன்மைப் புரிந்து செயல்படல், அப்பா அம்மா உறவு, தியாக உணர்வு எல்லாம் மெல்ல மெல்ல மறுத்துபோய் அற்றுப் போகவும் வாய்ப்புண்டு. சுயநலம் பெருத்து கட்டுப்பாடு தகர்ந்து பெற்றோரிடத்தில் பெருத்த வெறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமொரு நிலை குழந்தைகளுக்கு ஏற்படச் சாத்தியமுண்டு என்று சமுதாயத்துக்கு எச்சரிக்கை விடுக்கிறார் வித்யாசகர்.

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாதவர்களாக வாழ்ந்து வரும் மனித இனத்திற்கு, விவாகரத்து என்பது மேலும் சிக்கலை உண்டாக்குவதாகவே அமையும் என்பது உறுதியாகிறது.

வைஷ்ணவியின் தந்தை விவாகரத்துக்கு மூலகாரணமாக இருந்து செயல்படுகிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போதும்கூட விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் – வலிந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்கவில்லை என்றால் தான் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளவதாகவே மிரட்டுகிறார் – மிரட்டி வருகிறார். இந்த நிலையில் வைஷ்ணவி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணையின்போது கால அவகாசம் கொடுப்பதாகவும் மேலும் சிந்தித்து விவாகரத்துதான் தங்களுக்குத் தீர்வாகுமா? என்ற நிலைப்பாட்டை எடுக்கவும் அனுமதி கொடுத்தபோதும், தன் தந்தையின் செயலால்,
“வைஷ்ணவி வெறி வந்தவளைப்போல எழுந்து வேண்டாம்… எனக்கு ஒரு அவகாசமும் வேண்டாம். இனி எனக்கு இவரோடு வாழ விருப்பமில்லை. இப்பொழுதே எனக்கு விவாகரத்துக் கொடுத்துவிடுங்கள். இப்பொழுதே விவாகரத்து கொடுத்து விடுங்கள்.”20
என்ற சப்தம் போடுகிறாள்.

தம் பிள்ளைகளின் விவாகரத்தில் பெற்றோர்களின் செயல்பாடுகளும் வருத்தத்திற்கு உரியதாகவே இருக்கக் காண முடிகின்றது. இதைப் பற்றிய நேர்காணல் கேள்விக்கான பதில் ஒன்றில் “பொதுவாக இவ்விசயத்தில் இன்றைய பெற்றோர்கள் அதிகபட்சமாக உணர்ச்சிவசப் படுபவர்களாகவும், சுயநலம் பூண்டும், தன் கருத்தை தன் எண்ணத்திற்கிணங்க பிள்ளைகள்மீது திணிப்பவர்களாகவும், மகன் அல்லது மகள் வழி நின்று எது அவர்களுக்குச் சாத்தியமெனச் சிந்திக்காமல் எதையோ எடுத்தோம் கவிழ்த்தோமென்று தன் விருப்பப்படி செய்பவர்களாகவே இருக்கிறார்கள் சிலர்”21 என்று கருத்துரைத்துள்ளார் வித்யாசாகர்.

காதல்
சங்ககாலம் காதலுக்கு மரியாதை தந்த காலம். பெற்றோர்கள் தன் விருப்பத்திற்கு எதிராக இருந்தால் பெண் ஒருத்தி அவர்களுக்குத் தெரியாமல் காதலனுடன் சென்று வாழ்வதை அக்காலத்துப் பெரியவர்கள் ஆதரித்துள்ளனர். சங்க காலத்தில் இதை ‘உடன்போக்கு’ என்று கௌரவமாகக் குறிப்பிட்டனர். இக்காலத்தில் இப்படி நடந்தால் ‘ஓடிப்போய்விட்டாள்’ என்று சொல்கிறார்கள்.
“காலமுற்றுந் தொழுதிடல் வேண்டும்
காதலென்பதோர் கோயிலின் கண்ணே”22
என்று காதலுக்குக் கோயில் கட்டிப் பாடினார் பாரதியார்.
“கண்ணீரில் வாழ்க்கை செலவழிக்கப்படுகிறது. காதலில்தான் சம்பாதிக்கப் படுகிறது. காதல் என்பது அமுத விஷம். புரிந்தோர்க்கு அது அமுதம்; புரியாதோர்க்கு அது விஷம்; காதல் என்பது புரிதல். காதல் என்பது கனபரிமாணமல்ல; மனபரிமாணம்.”23
என்று காதலின் புனிதத்தை எடுத்துக் கூறுவார் வைரமுத்து.
இன்றைய சமூகச் சூழலில் காதல் தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது எனக் காட்டுகிறது. காதல் தன்னலவாதியாக இருக்கும் மனிதனை மற்றொரு உயிருக்காகத் தன்னலத்தைத் துறக்கும் தியாகத்தைக் கற்றுத் தருகிறது. ஆனாலும், இன்று காதலில் வேறொரு போக்கும் காணமுடிகிறது. இதனை,
“இப்போது இளைஞர்களும், இளம்பெண்களும் கூச்சமோ, தயக்கமோ இன்றிச் சுலபமாக ‘ஐ லவ் யூ’ என்கிறார்கள். பிறகு பார்க், பீச், தியேட்டர், காபி ஷாப், டிஸ்கொதே என்று சுற்றுகிறார்கள். லாட்ஜ் வரை போகிறவர்களும் உள்ளனர். கூர்ந்து கவனித்தால் இணைகள் மாறுவதும் தெரிகிறது.”24
என்று, காதல் என்ற முகமுடியோடு காமத்தில் முடிந்து போகும் காதலை எடுத்துக் காட்டுகிறார் அப்துல் ரகுமான். இவ்வாறானக் காதலில் பெண்ணே பெரிதும் பாதிக்கப்படுகிறாள். ஒருமுறை பாலியல் இச்சைக்கு உடன்பட்டுவிடும் பெண்ணை, நெருக்கமான முறையில் புகைப்படம் மற்றும் பதிவுக் கருவிகளின் மூலம் படம்பிடித்து மிரட்டி பலமுறை உடல் உறவுக்கு உட்படுத்துகின்றனர். பணிய மறுத்தால் இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இத்தகைய போக்கு இன்று பரவலாகிவிட்டது. காதலுக்கு இழுக்கும் சேர்ந்து கொண்டது. அதனால்தான் பெரியவர்கள்; சமூக அக்கறை கொண்டவர்கள் காதலை எதிர்க்கவும் செய்கிறார்கள்.

இன்றைய காதலர்களின் செயல்பாடுகள் எதிர்காலச் சமுதாயத்தைச் செம்மைப்படுத்துமா? என்ற நேர்காணலில் வினா எழுப்பிய போது நாவலாசிரியர்,
“முழுதாக நம்புவதற்கில்லை. ஆயினும் காதலால் எத்தகைய மாற்றத்தையும் நிகழ்த்தும் இளைஞர்களை நாம் கொண்டுள்ளோம். முதலில் காதலை ஒரு உணர்வாகப் புரியும் புரிதல் இளைஞர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் வேண்டும். அது ஒரு மனதில் ஊரும் உணர்வு. அது பின் எத்தகைய வடிவங்களில் மாற்றம்கொள்ளும், எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்துமெனும் தெளிவை நோக்கிச் சிந்திக்கக் கூடிய பக்குவத்தை நாம் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கொடுத்தல் வேண்டும். காதலால் சாதிமதப் பாகுபாடு ஒழியும், காதலால் பிறந்த நாகரீகம்போல் சில வெற்றிகள் கிட்டும், அதேநேரம் பெரிய இழப்புக்களும் நேரிடத் தக்க சமுதாயத்தைத்தான் நாம் சமைத்து வைத்துள்ளோம் என்பது புரியவேண்டிய ஒன்று.
எனவே, காதல் என்பது யாதெனில் என ஆரம்பத்திலிருந்து நாமெல்லோருமே சற்று இலக்கிய மற்றும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிவிட்டு, நடைமுறை ஆராய்ந்து கொண்டு, எதிர்கால நன்மைக் கருதி இடத்திற்கு ஏற்றார்போல் முடிவெடுக்கத் தக்கதாகவே காதல் மற்றும் காதலர்கள் இருக்கையில் முழுமையாக இச்சமுதாயத்தைக் காதல் செம்மைப் படுத்தும் என்று சொல்வதற்கில்லை.”25 என்று கருத்துரைத்தாலும், செம்மைப் படுத்தும் வலிமைக் காதலுக்குண்டு என்றும் திடமாக நம்புகிறார்.

வெண்மதியும் பூஜாவும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். வெண்மதி பூஜாவைத் தோழியாகவே பாவித்துப் பழகி வருகிறான். பூஜா ஒரு நேரத்தில் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். வெண்மதியோ, நல்ல நட்பு கொண்டிருந்ததாகப் பதிலுரைக்கிறான்.26 இதனால், பூஜாவின் காதல் சிக்கலுக்குரியதாக மாறிப் போகிறது.

கற்பும் விலைமகளிரும்
மனிதன் வாழ்வாங்கு வாழ அறநூல்களைப் பல அறநெறிகளை வகுத்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கென வகுத்துக் கொடுத்த அறநெறிகளுள் ‘கற்பு’ என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அறநூல்கள் மட்டுமன்றிச் சங்க காலம் தொடங்கி இன்றுவரை உள்ள இலக்கியங்களும் கற்பைப் பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கி வேடிக்கை பார்க்கின்றன. மிகச் சிலவே கற்பை இருபாலருக்கும் பொதுவாகக் வேண்டும் என்ற சிந்தனையை முன்வைக்கின்றன. கற்பு என்பது கணவனிலும் தெய்வம் வேறில்லையென எண்ணிக் கலங்காது அவனை வழிபடுவது27 என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் கற்பு என்பதற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர்,
“கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”28
என்ற நூற்பாவுக்கு உரை எழுதும்போது ‘கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும் ‘அந்தணர் திறத்துஞ் சான்றோர்தே எத்தும்’, ‘ஒயர் பாங்கினும் அமரர்ச்சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று’29 என்கிறார். இங்குக் ‘கற்றல்’ என்ற பொருளிலேயே கற்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட கூற்றுக்கு முற்றிலும் மாறானதாகக் கனவுத் தொட்டிலில் இன்றைய விலைமகளிரின் போக்குகளைக் காண முடிகின்றது.
“நீண்ட வளாகம்… எங்கும் பெண்கள்… அசிங்கமாய் வாழும் அழகிகள்… பெண்மையைச் சாகடிக்கும் சுந்தரிகள். பெண்ணின் புனிதத்தைத் துலைத்த தாசிகள்… கற்பை விலைக்குப் பேசி – உடம்பை விற்பனைச் செய்யும் பாவப் பெண்டீர்கள்… மணிக் கணக்கா…? நாள் கணக்கா…? எவ்வளவு பணம் வெச்சிருக்க, எத்தனை வயசுல வேணும், எந்த ஊரு வேணும்…? வியாபாரம் மிக சூடாக நடந்து கொண்டிருந்தது.”30
என்றாலும்கூட அங்கு விலைமகளிராக இருக்கும் பெண்கள் யாரும் விருப்பப்பட்டு இந்த இழித் தொழிலுக்கு வரவில்லை என்பதை நாவலாசிரியர் வெளிப்படையாகவே - அங்கு விலைமகளீராக இருக்கும் பெண்களின் கூற்றுகளின் மூலமாகவே வெளிப்படுத்தியுள்ளார். விபச்சாரத்தொழிலில் நிறையப் பணம் கிடைக்கிறது.31 விபச்சாரத் தொழிலுக்குப் பல பெண்களைக் கடத்திக் கொண்டு வந்தும் கட்டாயப்படுத்தி அந்தத் தொழிலில் ஈடுபட வைப்பதையும் கனவுத் தொட்டில் எடுத்துரைக்கிறது.32 விபச்சாரம் ஒழிய வேண்டும் என்பதே அத்தொழில் செய்யும் அழகிகளின் கருத்தாக உள்ளது. விபச்சாரம் நடக்க ஆண்களைப் பெண்களும், பெண்களை ஆண்களும்தான் காரணம் என்று மாறிமாறிக் குற்றம் சொல்வதை விட்டுவிட்டு சமுதாயத்தின் தீமையாகிப்போன இந்த விபச்சாரத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்று கனவுத் தொட்டில் வலியுறுத்திப் பேசியுள்ளது.

சான்றெண் விளக்கம்


1. க.கைலாசபதி, இலக்கியமும் திறனாய்வும், முன்னுரை ப.iv.
2. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் ப.19.
3. த.ராசு, புதிய நோக்கிகல் படைப்பிலக்கியம், ப.15.
4. சு.வேங்கடராமன், புனை கதை இலக்கியம், பக்.5-6.
5. கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் ப.19.
6. இராஜம் கிருஷ்ணன், கரிப்பு மணிகள், ப.7.
7. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.iv.
8. ஆறு.இராமநாதன், நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் ப.56.
9. சோ.லக்குமிரதன், நமது சமூகம், ப.132.
10. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.164.
11. மே.கு.நூ., பக்.150-160.
12. மைதிலி சிவராமன, பெண்ணுரிமை சில பார்வைகள், ப.79.
13. வித்யாசாகர், நேர்காணல், வினா எண்.1.
14. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.152.
15. மே.கு.நூ., ப.154.
16. மே.கு.நூ., ப.156.
17. வித்யாசாகர், நேர்காணல், வினா எண்.18.
18. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.190.
19. வித்யாசாகர், நேர்காணல், வினா எண்.21.
20. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.186.
21. வித்யாசாகர், நேர்காணல், வினா எண்.20.
22. பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.189.
23. வைரமுத்து, சிகரங்களை நோக்கி, ப.107.
24. அப்துல் ரகுமான், தட்டாதே திறந்திருக்கிறது, ப.168.
25. வித்யாசாகர், நேர்காணல், வினா எண்.4.
26. வித்யாசாகர், கனவுத் தொட்டில், பக்.39-53.
27. அபிதான சிந்தாமணி, ப.383.
28. தொல்காப்பியம், ‘கற்பியல்’, நூற்பா.142.
29. தொல்காப்பியம், ‘கற்பியல்’, நச்சினார்க்கினியர் உரை, ப.163.
30. வித்யாசாகர், கனவுத் தொட்டில், ப.75.
31. மே.கு.நூ., ப.81.
32. மே.கு.நூ., பக்.74 - 90.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

(இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள் Empty Re: (இயல் – இரண்டு) கனவுத் தொட்டிலில் சமுதாயச் சிக்கல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 14, 2012 11:17 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum