தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை

Go down

தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Empty தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 12, 2013 7:26 pm

தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை (கட்டுரை)
சித்திர சேனன் 
தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Thirunangai-1கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூசன்  என கலைத்துறையில் சாதித்தவர்களுக்கு பட்டம் அளித்து கௌரவிப்பர். தன் வாழ்வில் சாதித்துப் புகழடையாதவர்களை, முன்னேற்றப் பாதையில் செல்லாதவர்களை இச்சமூகத்தில் உருப்படியற்றவன், பயனற்றவன், வெற்றுப்பயல் என இப்படி பல பெயர்களில் அவர்களுக்குப் பட்டம் கொடுத்து, வாழ்வில்  முன்னேற வேண்டும் என எண்ணம் கொண்டவர்களைக் கூட முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை போடுபவர்களும் பலர் உண்டு.
தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Add2-1இதற்கு மாறாக தமிழ்ச்சமூகத்தில் ஒன்பது, உஸ்சு,  பொட்ட, அலி, அஜக்கு போன்ற பெயர்களில் இங்கே அழைக்கப்படுவது யாரெனத் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள் இவர்கள் உருவில் ஆணாகவும், உணர்வில் பெண்ணாகவும் இருக்கும் திருநங்கைகளே. இவர்களுக்கு அரவாணி என்ற ஆதித்தமிழ் பெயரும் உண்டு. மேற்கண்ட பெயர்களைக் கொண்டு இவர்களை பலரும் மேற்கூறிய வார்த்தைகளால் அழைத்து அவமானப்படுத்தப் பழகிக்கொண்டனர். ஏன் இவர்கள் இப்படி ஆனார்கள்? இப்படி மாற வேண்டிய அவசியம் என்ன? என்ன நடக்கிறது இவர்களுக்குள்? என்று எவரேனும் ஒரு நிமிடம் யோசித்ததுண்டா? வாருங்கள் அவர்களிடமே கேட்டு இக்கேள்விகளுக்கு விடை காண்போம்..
ஆனந்தி:
தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Anandhiநான் பிறந்தது வடசென்னை கொருக்குப்பேட்டை.  தற்போது தண்டையார் பேட்டையில் வசிக்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன் இருக்கின்றனர். நான் சிறுவயதில் இருந்து பெண்கள் கூடவே சேருவேன், விளையாடுவேன்.அவ்வாறு இருக்கும் போது, அவர்கள் எவ்வாறு தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்களோ அது போலவே நானும்  பொட்டு,பூ வைத்துக்கொள்வேன். வீட்டில் ஆள் இல்லாத போது நான் என்னைப் பெண்ணாக அலங்கரித்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழ்வேன். இந்தச் செயலைக் கண்டு என் வீட்டில் உள்ள அனைவரும் என்னை வெறுத்தனர். இவன் பொட்டையாகிவிட்டான்.  இவன் மோசமானவன், நம்மை அசிங்கப்படுத்துகிறான் எனக் கூறி என்னை  அத்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்க்குமாறு என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவமானப்படுத்தினர். குறிப்பாக எனது அப்பாவும், அண்ணனும் என்னை மிக மிக அவமானப்படுத்தி தெருவில் போட்டு அடித்தனர், கையை உடைத்தனர், திராவகத்தை(ஆசிட்) எடுத்து முகத்தில் வீச வந்தனர் தாங்க முடியாமல் நான் ஓடி வந்துவிட்டேன்.
நான் அப்போது பெண் போல நீள முடி வளர்த்திருந்தேன். இளைஞனாக இருந்த என்னிடம் அப்பா கூறினார். “ நீ இந்தக் கூந்தலை வெட்டி விட்டு ஆணாக மாறி வீட்டிற்கு வந்தால் உனக்கு எனது சொத்தில் பங்கு, இல்லை என்றால் திருநங்கைகளோடு சேர்ந்து விடு. வீட்டுக்கும் வராதே என்றார். என்னால் அவர்கள் கூறும்படி ஆணாக மாறி வர  முடியவில்லை. எனக்குள் இருந்த மிகை மிஞ்சிய பெண் உணர்வு என்னை அவ்வாறு இருக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது.
இந்நிலையில் நான் வீட்டை விட்டு வெளியேறி, என்னைப் போல வாழும் திருநங்கைகளோடு இணைந்து விட்டேன். நான் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு இந்தப் பகுதியில் நானே உழைத்துச் சம்பாதித்து “அங்காள பரமேஸ்வரி” என்ற சிறு கோயில் கட்டி நானே அதில் பெண் பூசாரியாக உள்ளேன். குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் வேப்பிலை கொண்டு மந்திரித்து அனுப்புவேன். இதற்கு  11 ரூபாய் முதல் 51 ரூபாய் வரை பக்தர்கள் காணிக்கை போடுவர்.
கோவிலில் நான் இருக்கும் போது வழிபட  வரும் பொதுமக்கள் அனைவரும் ‘அம்மா’ என்றே என்னை அன்போடு அழைப்பர். ஆனால் பொது இடத்திற்கு நான் செல்லும்போது என்னையும், எங்களைப் போன்றவர்களையும் எவரும் மதிப்பதில்லை. கேவலமாகப் பேசவே செய்கின்றனர்.
தவிர எனது அம்மா சாலையோர உணவுக்கடை ஒன்றை  நடத்தி வருகிறார். அக்கடையில் என் அம்மாவுக்கு உதவியாக சமையல் செய்து, போதிய கூலியும் வாங்கிப் பிழைத்து வருகிறேன்.
இதற்கு முன்பு நான் ஒரு குளிர்பானக் கடையில் வேலை செய்தேன். குளிர்பானம் குடிக்க வந்தவர்களில் பலர் “இந்தப் பொட்டகிட்ட போய் நான் ஜூஸ் வாங்கிக் குடிக்கவா? எங்கெங்க போயிட்டு வந்தாளோ? இவ கையால ஜூசா வேணவே வேணாம்” எனக் கூறிப் பலர் சென்றதைப் பார்த்த கடை முதலாளி என்னை இந்த வேலையில் இருந்து நீக்கி விட்டார்.
நான் நன்கு பூ கட்டுவேன். அதனால் பூக்கடை போட்டு பிழைப்பு நடத்தினேன். பூ வாங்க வந்தவர்கள் “இவ கையில பூ வாங்கவா? ச்சீ” என என்னைக் கண்டு அருவருப்புடன் விலகிச் சென்றனர். எவரும் வாங்கவில்லை. அர்த்தநாரீசுவரனை தெய்வமாக வணங்குகிறார்கள், அந்த வடிவமாக பிறப்பெடுத்த எங்களைக் கண்டால் ஒதுங்குகிறார்கள். இந்த வேலையை துறந்த பிறகுதான் அங்காள பரமேஸ்வரி கோயிலைக் கட்டியும், என் அம்மா தொடங்கி இருக்கும் உணவுக் கடையில் வேலை பார்த்தும் வருகிறேன்.
“ஆனால் ஒன்று ” என்று என்னைப் பார்த்து ஆனந்தி சொன்னார்  எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு அப்பா, அண்ணன்களே இருக்கக் கூடாது. அவர்களால் தான் எங்களுக்கு தொல்லை என்றார். ஆணாதிக்கம் பெண்களை மட்டுமல்ல பெண்ணாக மாறிய திருநங்கைகளைக் கூட விட்டு வைப்பதில்லை என்று உணர்ந்தேன்.
திவ்யா:
தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Divyaஎனது சொந்த ஊர் சென்னை ஓட்டேரி. கூட பிறந்தது ஒரு அண்ணன். அப்பா கொத்தனார் வேலை செய்கிறார். அம்மா வீட்டில் இருக்கிறார். அம்மாவுக்கு பெண் குழந்தை இல்லாத காரணத்தால் வீட்டிற்கு இளையவனான என்னை சிறு வயதில் இருந்தே என் அம்மா எனக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து, கண்மை இட்டு, கொலுசு போட்டு, தலையில் ஜடை போட்டுப் பூ முடித்து அழகு பார்ப்பார்.  இப்படியே பழக்கப்பட்ட நான் பெரியவன் ஆனபோதும் கூட இந்தப் பழக்கத்தால், அம்மா வீட்டில் இல்லாதபோது பெண் போல என்னை நானே அலங்கரித்துக் கொள்வேன்.
இந்த நிலையைக் கண்டு என் அம்மா அடித்தார்கள். இப்படி பல நாள் வாங்கிய அடியால் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. புரசைவாக்கத்தில் ELM பள்ளியில் 10 வது படித்துக் கொண்டிருந்த போது மும்பை மாநிலத்திற்கு நானாக ஓடிவிட்டேன். மும்பையில் எங்கே திருநங்கைகள் இருக்கிறார்கள் என நானே தேடி அலைந்து கண்டுபிடித்து அவர்களோடு என் வாழ்வை தொடங்கினேன். அன்றாட உணவு, உடை, மற்ற தேவைகளுக்காக பாலியல்  தொழில் செய்தேன். இதற்காக எங்கள் இல்லத்திற்கு வரும் நபர் (டோக்கன்)முன்தொகை 50 ரூபாய் கட்ட வேண்டும். எங்களிடம் 30 ரூபாய் தருவார்கள். இத்தொழிலுக்கு சம்பளமும் எங்களுக்கு இந்த முப்பது ரூபாய் மட்டுமே. இந்த முப்பது ரூபாய் கொண்டு என்னைப் போன்ற அரவாணிகளுடன் இணைந்து  மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.
திடீரென தமிழ் நாட்டிலிருந்து என் அம்மா ஒரு நாள் எனக்கு அலைபேசியில் அழைத்தார். வா உன்னை ஏற்றுக்கொள்கிறேன், உன்னைப் பார்க்கணும்போல இருக்கிறது என அழைத்தார். என்ன திடீர் பாசம்? எனக் கேட்டதற்கு அம்மா கூறினார். ‘காஞ்சனா’ என்ற படம் பார்த்தேன், அதில் திருநங்கைகளுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் மேடையில் பேசி அழுது நடித்த காட்சியைக் கண்டதும் உன் நினைவு வந்தது. தயவு செய்து வீட்டிற்கு வா என அழைத்தார்.
நானும் ஆசையோடு தமிழ் நாட்டிற்கு வந்தேன். அப்போது எனது அண்ணன் திருமணம் நடந்தது. அம்மா கூறினாள், நீ திருமணத்திற்கு வராதே வீட்டில் இரு, வந்தால் எங்கள் மானம், மரியாதை போய்விடும் என்று கூற என் நெஞ்சே நொறுங்கிப் போனது. நாளடைவில் என்னை வீட்டிலும், சுற்றத்தாரும் ஏளனம் பேசினர். வீட்டில் வளர்க்கும் நாயை மதிக்கும் அளவிற்குக் கூட என்னை மதிப்பதில்லை என்னைப் பார்க்க என் தோழிகளான அரவாணிகள் என் வீட்டிற்கு வரும்போது அக்கம், பக்கம் உள்ளவர்கள் அசிங்கமாகப் பேசினர். என் அண்ணன் குடித்து விட்டு “அடே பொட்ட உன்னால இந்தக் குடும்ப மானமே போச்சு”, எங்கேயாவது போய் செத்துத் தொல” எனப் பேசும் பேச்சைக் கேட்டு என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி என்னைப் போன்ற திருநங்கைகள் இருக்கும் பகுதியில் தங்கினேன்.
எனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கடைக்கேட்டல், கடை வசூல் தொழில் செய்து வருகிறேன். அதாவது கடை கடையாக ஏறி இறங்கி கை தட்டி இரத்தல் (பிச்சை) கேட்பதே இதன் பொருள். இதன் மூலம் ஒரு நாளை 100  கடைகள் ஏறி இறங்கினால் 300 ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தைக் கொண்டே வீட்டு வாடகை, உணவு, மின்சாரக் கட்டணம், உடை, மற்ற பொருட்கள் வாங்கிக் கொள்கிறோம். இதில் பாசஉணர்வுடன் காசு கொடுப்பவர்கள் 10% பேர் மட்டுமே. மீதமுள்ள 90% சதவீதம் பேர் ஆளை விட்டால் போதும் முதலில் இடத்தைக் காலி பண்ணுங்கள் என்பது போல 2 ரூபாய் கொடுத்து விடுவார்கள். இதில் பலர் கை, கால் நல்லாத்தானே இருக்கு உழைத்துப் பிழைக்க வேண்டியது தானே என்பார்கள். நான் உழைக்கத்தயார் நீ வேலை கொடுக்கத் தயாரா? என்றால் கப்சிப் ஆகிவிடுகிறார்கள் அல்லது நகர்ந்து விடுகிறார்கள்.
மும்பையில் நான் இத்தொழிலைச் செய்தபோது  90% பேர் எங்களை மதிப்பு மரியாதையுடன் பார்த்தனர், நடத்தினர். 10% சதவீதம் பேர் மட்டுமே எங்களைக் கண்டு ஒதுங்கினர் அவதூறாகப் பேசினர். ஆனால் தமிழ் நாட்டில் 1௦௦% மக்களும் எங்களைப் பழித்து ஒதுக்குகின்றனர். தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டி காயப்படுத்துகின்றனர். இதுமட்டுமன்றி  கை கால் ஊனமானவர்களும், மன நோயாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள்  போன்றோர்களும் அரவாணியாக இருக்கின்றனர். இரண்டு கால் இல்லாத திருநங்கைகள் கூட இங்கே பாலியல் தொழில் செய்து பிழைத்து வருகின்றனர் எனக்கூறி தன்னோடு இருக்கும் ஒரு மனவளர்ச்சி குன்றிய திருநங்கையைக் காட்டினார் நானும் கண்டேன்.பாவம் அப்பெண் வெக்கத்தால் எனைக்கண்டு தலை குனிந்தது.
சௌந்தர்யா கோபி:
தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Soundarya-kopiஎனக்கு சொந்த ஊர் சென்னை ராயபுரம். என் அப்பா மின் பணியாளர் (எலக்ட்ரீசியன்). அம்மா வீட்டில் இருக்கிறார். ஒரு தங்கை, ஒரு அண்ணன் உடன்பிறந்தவர்கள். எனக்கு 12 வயது இருக்கும் போதே எனது வீட்டில் கூட்டிப் பெருக்குதல், பாத்திரம் துலக்குதல் போன்ற வேலைகளைச் செய்ததோடு பெண்களுடனே சேர்ந்து பேசுவேன், விளையாடுவேன். எனது பொன்னான நேரங்கள் பெண்களுடனே கழிந்தது. இதனால் அவர்கள் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் செயல்களைக் கூர்ந்து கவனிப்பேன். அவர்களைப் போல  நானும் அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் துளிர் விட்டது.
வீட்டில் யாரும் இல்லாத போது கண்ணாடி முன் நின்று உதட்டுச்சாயம், கண் மை, நெற்றியில் பொட்டு போன்ற அலங்காரங்களைச் செய்து கொள்வேன். இதைக் கண்ட என் அப்பா “ஏன் இப்படி பண்ணி குடும்ப மானத்த வாங்குற” என என்னைச் சரமாரியாக அடித்தார்.
இந்நிலையில் நான்  10ம் வகுப்பு படிக்கும் போது ‘சகோதரன்’ என்ற தொண்டு நிறுவனம் திருநங்கைகளுக்காக இயங்குவதை அறிந்த என் தோழி என்னை அங்கு கொண்டு சேர்த்தாள். அங்கே என்னைப் போன்றவர்களும் பல பேர் இருக்கிறார்களே! என வியந்தேன், மகிழ்ச்சியடைந்தேன். பிறகென்ன புடவை கட்டினேன், ரவிக்கை அணிந்தேன். என் மனம் போல வாழ்ந்தேன்.
1998 –ல் என் பாட்டி இறந்ததற்காக என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் என்னை எவரும் சேர்க்கவில்லை. பின் மனம் நொந்து போய் மும்பை சென்றேன். அங்கு என் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல வீட்டு வேலைகள் செய்து பிழைத்தேன். ஒரு நாள் முழுதும் இடைவிடாத வேலைகள் செய்யச் சொல்வர். நானும் செய்வேன். சம்பளமும் போதவில்லை. பிறகு மும்பையிலுள்ள கோலிவாடா என்ற இடத்தில் உள்ள காளி கோவிலில் கூட்டிப் பெருக்கும் வேலை கிடைத்தது. அந்த வேலையில் போதிய வருமானம் இல்லை என்று கடைகளில் கைதட்டி வசூல் செய்தேன். அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொண்டு என்னைப் பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பிறகு சென்னை வந்து ஜெய் என்பவர் நடத்தும் திரைப்பட நடனக் குழுவில் கவர்ச்சி நடன நடிகையாக ஆடி பிழைப்பு நடத்தி வருகிறேன். இதோ இவர்தான் ஜெய். அண்ணா  இவரோடு என்னையும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுங்களேன் என்றார். நீங்கள் காண்பது அந்தப் புகைப்படமே.
ரம்யா:
தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகளின் இன்றைய நிலை Ramyaaஎன் இயற்பெயர் மாபு. நான் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்தவன். சொந்த ஊர் சென்னை வண்ணாரப்பேட்டை. அப்பா சிறு வயதில் தவறிவிட்டார். அம்மா இருக்கிறார். இரண்டு அண்ணன்களும், ஒரு தங்கையும் என் உடன்பிறந்தவர்கள். எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது அதிகப் பெண் தன்மை உடையவனாக நான் இருந்தேன். இதனால் பள்ளியில் ஆண், பெண் எனப் பிரிந்து வகுப்பில் அமரும் போது நான் பெண்கள் பக்கமே அமர்வேன். ஆசிரியர் இதைக் கண்டு அடித்தார், திட்டினார். நான் ஆண்களோடு அமர மறுத்து பெண்களோடே அமர்ந்தேன். ஒரு நாள் என் அம்மாவை பள்ளிக்கு வரவழைத்து எனது பள்ளி மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) கொடுத்து அனுப்பி விட்டனர்.
என் அம்மா மேலும் என்னைப் எப்பள்ளியிலும் சேர்க்கவில்லை. இதனால் எங்கள் தெருவில் உள்ள பெண்களுடன் பேசுவேன், விளையாடுவேன். இதைக் கண்ட மற்றவர்கள் என் அண்ணனிடம் “என்னடா உன் தம்பி பொம்பள மாதிரி பொம்பளைகளோடவே வெளயாடுறான் உங்களுக்கு இது அசிங்கமா தெரியல?” எனக்கேட்க கடுங்கோபம் கொண்ட என் அண்ணன் என்னை அடித்தான், துணி தேய்ப்புப்பெட்டி (அயன் பாக்ஸ்) கொண்டு என் கையில் தேய்த்தான் இருந்தாலும் என் பழக்கத்தை, எனக்குள் மிகை மிஞ்சி நிற்கும் பெண் உணர்வையும்  நான் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்? நான் ஒரு பெண் என மட்டுமே உணர்ந்தேன். இவ்வுணர்வுக்கு முன் இவர்களின் சித்ரவதைகள் என்னை என்ன செய்துவிட முடியும்?
பெண் போல் கூந்தல் வளர்த்து பெண்களுடன் பொழுதைக் கழித்த என்னை அம்மாவும், அண்ணனும் சேர்ந்து என் கூந்தலை வெட்டி பேண்ட், சட்டை அணிவித்து “ஒலிம்பிக் கார்டு” என்ற பத்திரிக்கை நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்பினர். ஒரு நாளைக்கு அங்கு 18 ரூபாய் சம்பளம். என்னதான் நான் ஆண் போல பேண்ட் சட்டை அணிந்தாலும் எனக்குள் இருக்கும் பெண் தன்மை துளியும் மாறவில்லை. நான் ஒரு பேண்ட் சட்டை போட்டப் பெண் போலவே நடந்து கொண்டேன். இதனால் அந்த வேலையை விட்டு துரத்தினர்.
17 வயதில் டி.சர்ட், லுங்கி அணிந்த போது இது எனக்கான உடை அல்லவே, இதை ஏன் நான் அணிய வேண்டும்? என என் மனதிற்குள் கேள்வி எழுந்தது. இந்த உடையை அணியவே வெறுப்பாக இருந்தது. நான் பெண்ணாயிற்றே! ஏன் இந்த உடையை நான் அணிய வேண்டும்? என என் மனம் உறுத்தியது. கோயிலுக்குச் செல்லும் போது பெண் போல நெற்றியில் பொட்டு வைத்துச் செல்வேன். வரும் போது எடுத்து விடுவேன். இப்படியாக ஒரு நாள் என் தங்கை உடையை எடுத்து ஆசை ஆசையாக அணிந்து கொண்டேன். எனது பெண் வேடத்தைக் கண்ட என் அண்ணன் “இவன் சரிப்பட்டு வரமாட்டான் வா டாக்டர் கிட்ட போகலாம்” எனக் கூறி சென்னை பாலியல் மருத்துவரான மாத்ருபூதம் என்ற பிரபல மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றான். என்னைச் சோதித்த அவர் என் அம்மா, அண்ணனிடம் சொன்னார் “இந்தப் பையலுக்கு பிறப்பிலேயே ஹார்மோன் மாறியதன் விளைவாகவே இவன் இப்படி இருக்கிறான் இது அவனது குறையல்ல. இதற்காக அவனை நீங்கள் வெறுப்பதும் முறையல்ல உங்கள் வீட்டில் ஊனம் உள்ள குழந்தைப் போல அவனை பாவித்து ஏற்றுக் கொள்ளுங்கள். இவனுக்குள் ஏற்ப்பட்டிருக்கும் பெண் உணர்வை உங்களால் மாற்ற முடியாது” என்றார்.
அதற்கு மாறாக வீட்டிற்கு வந்ததும் என் அண்ணன் என்னை அடித்து மிகவும் துன்புறுத்தினார். என்னை இனியும் வீட்டில் வைத்து வளர்க்க முடியாது என உணர்ந்த என் அம்மா, தன் மூக்குத்தியை 1000 ரூபாய்க்கு அடகு வைத்து ஒரு திருநங்கையை வீட்டிற்கு அழைத்து வந்து அவரிடம் ரூ.500 கொடுத்து, என் மகனை நீங்கள் எங்காவது அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
என்னை  அழைத்து வந்த அந்தத் திருநங்கை மூலம் எனது 18 வயதில் மும்பை சென்றேன். அங்கே 6 மாதம் கடை கடையாக ஏறி இறங்கி ‘கடைவசூல்’ செய்து பிழைத்தேன். பின்பு ஒரு காலகட்டத்திற்குப் பின் நான் இவ்வாறு உழைத்து சேர்த்த பணத்தைக் கொண்டு பெண்ணாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு மும்பையில் பாலியல் தொழில் செய்து  பிழைத்தேன். ஓரளவு இதன் மூலம் பணம் சேர்த்து இருந்தாலும் சிலரின் பிடியில் அங்கு சிக்கி இருந்தேன். இதிலிருந்து திவ்யா என்ற திருநங்கை என்னை மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார்.
என் வீட்டிற்கு நான் முழுப்பெண்ணாக மாறி வந்ததைக் கண்ட அம்மா அழுதாள். சரி இங்கு ஏதாவது வேலை செய்து பிழைப்போம் என்று எண்ணி இரும்பு லோடு ஏற்றும் நிறுவனத்திற்குள் சுத்தம் செய்யும் பெண்ணாக வேலை செய்தேன். பின் அவ்வேலையை விட்டு கடல்சார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக (பெண்ணாக) வேலை செய்தேன். இந்த வேலைகளில் இரண்டு மூன்று நாட்கள் என்னை வைத்து விட்டு அனுப்பிவிட்டனர். பின்பு பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன் எங்கும் வேலை கொடுக்கவில்லை. வீட்டில் அம்மாவின் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடவும் மனதில்லை.
பின்பு கடை வசூல் செய்யச் சென்றேன். ஒரு நாளுக்கு 300 ரூபாய் கிடைக்கும். அம்மாவோடு இதைக் கொண்டு மகிழ்வோடு இருந்தேன். அப்போது என்னிடம் அடைக்கலமாக 4 திருநங்கைகள் வாழ வழியில்லாமல் ஏன் வீட்டிற்கே வந்தனர். இதனால் மைதிலி, மணிமேகலை, நர்மதா, சுவேதா என வந்த நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு தனி வீடு எடுத்து வாழ்கிறேன். என்னைத் தாயாக பாவித்த என் மகள்களான இவர்கள் கடை வசூல், பாலியல் போன்ற வேலைக்குச் சென்று வருகிறார்கள். நான் தற்போது கட்டியக்காரி என்ற நாடகக் குழுவில் நடிகையாக மேடையில் வலம் வருகிறேன்.
இந்த தகவல்களைக் கூறிய ரம்யா என்ற திருநங்கையின் தற்போதைய பெயர் தாயம்மா. இவர் தற்போது இருக்கும் கட்டியக்காரி நாடகக் குழுவில் நானும் இருக்கிறேன். இந்த அம்மா நடிக்கும் மொளகாப்பொடி என்ற நாடகத்தை எழுத்தாளர் பாமா அவர்கள் எழுதியுள்ளார்.
இவர்கள் விடுத்த கோரிக்கைகளாவன:

  1. சமூகத்தில் எங்களையும் சக மனிதராக மதிக்க வேண்டும்.
  2. நாங்கள் விரும்பி இப்படி வரவில்லை. இது எங்களின் ஹார்மோன் மாற்றமே என அனைவரும் உணர வேண்டும்.
  3. அரசு நடத்தும் “அம்மா உணவகத்தில்” மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேலை கொடுத்தது போல் நன்கு சமைக்கத் தெரிந்த எங்களுக்கும் அதில் வேலை கொடுக்க இந்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  4. எங்களுக்கு குழந்தை இல்லாததால் அரசு வேலை தர வேண்டும்.
  5. எங்களுக்கு இங்கே எவரும் வாடகைக்குக் கூட வீடு தருவதில்லை. அப்படியே தந்தாலும் ஒரு குடும்பம் தங்கினால் 3000  வசூலிப்பவர்கள் எங்களுக்கு என்றால் 6000 ரூபாய் என்கின்றனர். ஆதலால் நாங்கள் நிம்மதியாக வாழ அரசு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.
  6. அரசால் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட நலவாரியத்தில் எங்கள் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்களுக்கு வந்து சேரவில்லை. அந்த நிதி தடையில்லாது கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
  7. ஓட்டுப்போட மட்டும் அனுமதிக்கும் இந்த அரசு எங்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். முதலில் தங்குவதற்கு வீடு கொடுக்கக் வேண்டும். வீடு இருந்தால் தான் (ரேசன்கார்டு)அடையாள அட்டை  தருகிறார்கள். இந்த அட்டை இருந்தால் தான் எங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை நாங்களும் வாங்கி பயன்பெற முடியும். எங்களுக்கு வரும் வருமானத்தைக் கொண்டு வெளிக்கடைகளில் பொருட்களை வாங்கி உண்டு காலத்தைக் கழிக்க முடியவில்லை.

[color][font]
இவ்வாறு குடும்பத்தாலும், சமூகத்தாலும் புறந்தள்ளப்பட்டு வாழும் இது போன்ற திருநங்கைகளுக்கு நாம் உதவாவிட்டாலும் கூட அவர்களை பொது இடங்களில் உதாசீனப்படுத்தாமல், அவர்களை ஒதுக்காமல் இருப்பதே  நாம் அவர்களுக்குச் செய்யும் பெருந்தொண்டு என்பதை உணர்ந்து இனியாவது செயல்படுவோம்.[/font][/color]

சித்திர சேனன் 

http://siragu.com
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum