தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இயல் – ஒன்று - தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

2 posters

Go down

இயல் – ஒன்று -  தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்  Empty இயல் – ஒன்று - தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 12, 2012 7:48 pm

இயல் – ஒன்று
தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழர் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டு மாற்றங்களே அடிப்படையாக அமைந்தன. கிறிஸ்துவ மதப் பிரசாரமும், எதிர் பிரசாரமும், புதிய அரசியல் அமைப்பின் நிருவாகத் தேவை, அச்சு எந்திரங்களின் வருகை, பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற காரணிகள் தமிழில் நவீன உரைநடையின் தோற்றத்துக்கு அடிப்படையாய் அமைந்தன எனலாம்.

தமிழில் நாவல் இலக்கியம் தோன்றிய 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை வளர்ச்சியடைந்திருந்த நவீன தமிழ் உரைநடை பெரும்பாலும் ‘பண்டைய உரையாசிரியர்களின் உரை நடையை அடியொற்றி, வித்துவச் சார்பான, மரபு ரீதியான, அறிவுத் துறைக்குரிய உரைநடையாகவே அமைந்திருந்தது. ஆறுமுக நாவலர் இத்தகைய உரைநடையின் சிறந்த பிரதிநிதியாவர். இவரது உரைநடை பேச்சு மொழியில் இருந்து முற்றிலும் விலகி இலக்கிய வழக்கோடு முற்றிலும் நெருங்கியதாகவே அமைந்திருந்தது. நாவலர் மறைந்த 1879ஆம் ஆண்டிலே தான் முதல் தமிழ் நாவலும் வெளிவந்தது என்பது தற்செயலானது எனினும் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் உடையது. நாவலர் விட்ட இடத்தில் இருந்து புதிய மரபு ஒன்று தொடங்குவதை அது குறிக்கின்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலே நாவலர் காலம்வரை வளர்ச்சியடைந்திருந்த நவீன உரைநடையை அடிப்படையாகக் கொண்டே முதல் தமிழ் நாவல் தோன்றியது எனினும் நாவலர் விட்ட இடத்தில் இருந்து நாவல் இலக்கியம் தமிழ் உரைநடையை வெகுதூரம் கொண்டு சென்றது. இடைக்காலத்தில் ஐரோப்பாவில் வீரர்களின் வீரதீரச் செயல்களையும், அவர்களின் காதலையும் கூறும் கதைகள் நிறைய எழுதப்பட்டன. ஆனால் இக்கதைகளும் கவிதை வடிவிலேயே தோன்றின. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலிக் கலைஞர்கள் ‘நூவேல்’ என்னும் பெயர் கொண்ட பல கதைக் கொத்துக்களை வெளியிட்டனர். இவை கவிதை வடிவில் வெளிவந்தவை. பிற்காலத்தில் உரைநடையின் வாயிலாகக் கதை சொல்லும் மரபு ஏற்பட்டதும் இதுவே நாவல் எனும் புதிய இலக்கிய வகைத் தோன்றப் பின்புலமாக அமைந்தது.

நாவல் விளக்கம்
இத்தாலியில் தொடக்கத்தில் நாவல்லா (Novella) என்று அழைக்கப் பட்டு, பின்னர், நாவல் என்று அழைக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆங்கில இலக்கிய அகராதி கூறுகிறது.1 மேலும், அந்த அகராதி, உரைநடையில் கதை கூறுவதே நாவல் என்றும் கூறுகிறது. கிளாரா ரீவி என்பவர் ‘எழுதப்பட்ட காலத்தின் உண்மையான வாழ்க்கையினையும், வாழ்வின் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியம்தான் நாவல்’ என்று கூறுகிறார்.2 ‘குறிப்பிடத்தக்க ஒரு செய்தியைப் பற்றியதாகவும், மாந்தர்களையும் ஆழ்ந்த நோக்கினையும் அடித்தளமாக உடையதாகவும் உரைநடையில் அமைகின்ற புனைகதை தான் நாவல்’ என்று, சேம்பர் கலைக்களஞ்சியம் (Chamber's Encyclopedia) கூறுகின்றது.3

வசன காவியம் என்ற சொற்றொடர் ‘Prose Epic’ என்னும் தொடர் மொழியின் தமிழாக்கமாகும். புதினத்தின் கருத்து வடிவம் ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில நாவலுலகில் சிறந்து விளங்கியவருள் ஒருவரான ஹென்றிபீல்டிங் என்பாரை ஆங்கில வசன காவியத்தின் தந்தை என்றழைப்பர். இவர் தனது படைப்புக்களான ‘A Comic Epic Poem in Prose’ என்றே எழுதுவார். வசனத்தில் எழுதப்படும் வேடிக்கையான காவியம் என்று பொருள் மீதுயர் கருத்தும் விழுமிய நடையுங் கொண்ட பழைய காவியங்களின் வேறுபட்ட தன்மையைப் புதினம் பெற்றிருக்கும் உண்மையைக் குறிப்பிடவே ‘வேடிக்கையான காவியம்’ என்றார்.4 மேலை நாட்டார் புதினத்தைப் பண்பு விளக்கப் புதினம், நிகழ்ச்சிப் புதினம் என இரண்டாகப்பகுப்பர்.

புதினம் என்னும் இவ்வுரைநடை இலக்கியத்தைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகையில்,
“பாட்டிடைவைத்த குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடையே நான்கென மொழிப”5
பாவின்றி எழுந்த கிளவி என்று ஆசிரியர் குறிப்பது உரைநடைநூல் ஆகும். பொருளோடு புணராப் பொய்ம்மொழி பொய்ப்புதினம் எனவும், பொருளோடு
புணர்ந்த நகை மொழி புதினம் என்றும் வழங்கப்பெறுகின்றன.

உரைநடையில் அமைந்த, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட கதையே நாவல் என்றும், அது படிப்பவர்களை ஒரு கற்பனையான உண்மை உலகிற்கு அழைத்துச் செல்கிறது என்றும், படைப்பாளன் உருவாக்கியதால் அந்த உலகம் புதியது என்றும் காதரீன்லீவர் தம்முடைய நாவலும் படிப்பாளியும்6 என்ற நூலில் கூறுகிறார்.

தமிழில் முதன் முதலில் நாவல் முயற்சியில் ஈடுபட்ட தமிழறிஞர்களும் நாவல் பற்றிய தத்தம் கருத்துகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆதியூர் அவதானி சரிதம் எழுதிய தூ.வி.சேஷய்யங்கார் தம் நாவல் முன்னுரையில் ‘இது பொய்ப் பெயர்ப் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ என்று குறிப்பிடுகின்றார்.7 மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம்முடைய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவலின் முன்னுரையில் நாவலை வசன காவியம் (Prosaic Epic) என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.8

ஆர்.எஸ்.நாராயணசாமி அய்யர் தாம் எழுதிய மாலினி மாதவம் என்ற நாவலின் முன்னுரையில் நாவல் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்:
‘இனிய இயல்பான நடையில், சாதாரணமாய் யாவரும் அறியும் வண்ணம், பிரகிருதியின் இயற்கை அமைப்பையும், அழகையும், அற்புதங்களையும், ஜனசமூகங்களின் நடை, உடை, பாவனைகளையும், மனோ (Thought), வாக்கு (Words), காயம் (Deeds) என்னும் திரிகரணங்களாலும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வித்தியாசங்களையும் பிரத்யட்சமாய் உள்ளபடி கண்ணாடி மேல் பிரதி பிம்பித்துக் காட்டுவதே நாவல் எனப்படும்.’9 ஒரு நல்ல நாவல்தான், நாவல் பற்றி நமக்கு எடுத்துக் கூறும் ஆற்றலும், தன்மையும் உடையதாகும்.

நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்ற பொருள் இருந்ததால் நாவல் இலக்கியப் பெயரினைத் தமிழில் கூறத் தமிழறிஞர் சிலர் புதினம் என்ற சொல்லை உருவாக்கிப் பயன்பாட்டில் வைத்தனர். ஆயினும் நாவல் என்ற பெயரே தமிழிலும் பயன்பாட்டில் இன்றும் நின்று நிலவுகின்றது.
எனவே, நாவல் என்பது,
1) உரைநடையில் எழுதப்படும் ஒரு படைப்பிலக்கியம்.
2) ஒரு பெருங்கதையை விவரமாக எடுத்துக் கூறும் இலக்கியம்.
3) வாழ்வியலைக் கூறுவது.
4) பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவோ, செயல்பாடுகள் மூலமாகவோ கதை ஓட்டம் நிகழ்த்தப் பெறும் இலக்கியம்.
என்ற நான்கு கருத்துக்களை உள்ளடக்கியது10 நாவல் இலக்கியம் எனலாம்.

நாவலின் தோற்றம்
நாவலின் தோற்றம் பற்றி ஹென்றி லாரன் என்ற ஆய்வாளர் கீழ்க்கண்டவாறு கூறுவதாகப் இரா. தண்டாயுதம் எடுத்து உரைக்கிறார்.
‘நாடகத்தின் ஒளியானது மிக வேகமாக இலக்கிய வானில் குன்றிடவே, புதிய விண்மீன் வரவை எதிர் நோக்கினர். புதிய இலக்கிய வடிவம் ஒன்றைத் தருவதால் வேடிக்கை உணர்வைத் தருவதுடன் அறக்கருத்தைத் தந்து முன்னேற்றும் தன்மை உடையதாகவும் எளிமை உடையதாகவும், அந்தக் காலத்தின் தேவையை நிரப்பக் கூடியதாகவும் ரிச்சர்ட்சன் புதிய இலக்கியம் படைத்தார்.’11
எனவே, நாவலின் தோற்றம் என்பது இலக்கிய உலகில் புதிய விடிவெள்ளியாக அறிஞர்களால் கருதப்பட்டது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாக உரைநடையில் தோன்றியதுதான் நாவல்.

நாவல் என்ற இலக்கிய வடிவம் தோன்றவில்லை என்றால் அவ்வக்கால மக்களின் சமூக வாழ்க்கை, வர்க்க வேறுபாடு, காதல் நிகழ்வுகள், உரையாடல் மொழி ஆகியவை பதிவு செய்யப்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு.

நாவலில் இடம் பெறும் எந்த ஒரு கதை மாந்தரும் தனித்து இயங்கி வாழ்வதில்லை. கதை மாந்தர் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழ்வதால் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செய்கின்றனர். சமூகம் கதை மாந்தரைப் பாதிப்பதால் சமூகம் நாவலில் முக்கியப் பங்காற்றுகின்றது. எனவே, நாவல் இலக்கியம், தான் தோன்றிய காலத்துச் சமூக வாழ்வை முழுமையாகப் பதிவு செய்கிறது. எதிர்கால வரலாற்று ஆய்விற்கு முக்கியப் பங்காற்றுவதாகவும் நாவல் இலக்கியம் பயன்பட்டு வருகின்றது.

நாவலின் வகைகள்
நாவல்களைப் பொதுவாக இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
(1) சமூக நாவல்
(2) வரலாற்று நாவல்
நாவலின் கதைப் பின்னணி அடிப்படையில்தான் இப்பிரிவுகள் அமைகின்றன. சமூகவியலாளர் மனிதனைச் சமூக விலங்கு என்றே கூறுவர். அச்சமூக விலங்கு கூடி வாழும் பொழுது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் சமூகத்தில் மக்களுக்குள் உணர்வு அடிப்படையில், வாழ்வு அடிப்படையில் ஏற்படும் சிக்கல்களைச் சமூக நாவல்கள் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. காதல், வறுமை, பொருளாதாரச் சிக்கல்கள், சாதியச் சிக்கல்கள், மத அடிப்படைச் சிக்கல்கள் முதலியவற்றைச் சமூக நாவல்கள் புலப்படுத்த கூடும். ஒரு படைப்பாளி, தான் வாழும் சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளைக் கொண்ட செய்திகளைச் சற்றுக் கற்பனையை இணைத்துச் சமூக நாவல்களாகப் படைப்பர். சமூக நாவல்களில் வரும் கதைப் பாத்திரங்களின் பெயர் மட்டும் கற்பனையாக இருந்து கதை உண்மையாக நடந்த நிகழ்ச்சியாக இருக்கக் கூடும். சமூக நாவல்களைப் பண்பு அடிப்படையில்,
(1) எதார்த்தம் அல்லது நடப்பியல் நாவல்
(2) போலி எதார்த்த நாவல்
என்று பிரிப்பர்.12 இந்த அடிப்படையில் சமூக நாவல்களைப் பிரித்தால் நாவலில் யதார்த்தமும், யதார்த்தம் போல் கற்பனையும் அமைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.

நாவல்களைக் கீழ்க்கண்ட முறையில் மேலும் பிரித்துக் காண்பர் ஆய்வாளர்கள்:
(1) வட்டார நாவல்
(2) குடும்ப நாவல்
(3) சமுதாய நாவல்
(4) குறுநாவல்
(5) பெரு நாவல்
(6) புதுமை நாவல்
(7) உளவியல் நாவல்
(8) ஆன்மிக நாவல்
(9) துப்பறியும் நாவல்
இவ்வாறு வகைப்படுத்தினாலும் இன்னும் மார்க்சிய நாவல், அறிவியல் நாவல், அங்கத நாவல், கடித நாவல், பின் நவீனத்துவ நாவல் என்றும் இதன் வகைப்பாடு விரிந்து செல்கிறது.

வட்டார நாவல்
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் வாழும் மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நாவல்வட்டார நாவல் எனப்படும். அம்மக்களின் உரையாடல் நடையிலேயே அந்நாவல் எழுதப்பட்டிருக்கும்.

இராஜம் கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்’ மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரின் ‘கரிப்பு மணிகள்’ தூத்துக்குடி பக்கத்தில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வை வெளிப்படுத்துகிறது. தங்கர்பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ பண்ருட்டி பகுதி மக்களின் வாழ்வைக் காட்டுகிறது. மேலும், பொன்னீலனின் ‘கரிசல்’, கி.ராஜ நாராயணனின் ‘கோபல்ல கிராமம்’, ஹெப்சிபா ஜேசுதாசின் ‘புத்தம் வீடு’ ஆகிய நாவல்களும் வட்டாரத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

குடும்ப நாவல்
குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை அக்குடும்பப் பாத்திரங்களைக் கொண்டே வெளிப்படுத்துவது குடும்ப நாவல் ஆகும். குடும்ப நாவல்களை எழுதுவதில் லஷ்மி தலைசிறந்து விளங்கினார். அவரின் பெரும்பாலான நாவல்கள் குடும்பப் பின்னணி நாவல்களே ஆகும். அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற பெண் எழுத்தாளர்களே குடும்ப நாவல்கள் எழுதுவதில் முன் நின்றனர். ஆனாலும் தமிழில் அவ்வளவாக அறியப்படாத தஞ்சை பிரகாஷ் எழுதிய ‘கரமுண்டார் வீடு’ குடும்ப நாவல்களுள் சிறந்ததாக விளங்குகின்றது.

சமுதாய நாவல்
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அல்லது சமுதாய மக்களின் வாழ்க்கை முறை, செயல்பாடுகள், அவர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றை ஆராய்வது சமுதாய நாவலாகும். சு.சமுத்திரத்தின் ‘கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை இதற்குச் சான்றாகக் கூறலாம். அகிலன் அவர்கள் எழுதிய ‘பால்மரக் காட்டினிலே’ என்ற நாவல் மலேயா இரப்பர்த் தோட்டத் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை முழுவதுமாக வெளிப்படுத்தியது.

குறுநாவல்
மிக அதிகமான பாத்திரங்களோடு நிறையப் பக்கங்களோடு இல்லாமல் குறைவான பாத்திரங்களைக் கொண்டு, சிறுகதையை விடச் சற்றுப் பெரிதாக அமைந்து விளங்கும் நாவல் குறுநாவலாகும்.13 எம்.வி.வெங்கட்ராமின் ‘உயிரின் யாத்திரை’, ‘இருட்டு’, ச.கலியாணராமனின் ‘பஞ்சம் பிழைக்க’ப் போன்றவை இதற்குச் சான்றாக அமையும்.

பெரு நாவல்கள்
அளவில் பெரியதாக, மிக அதிகமான பாத்திரங்களுடன் நிகழ்வுகள் அதிகமாக உள்ள நாவல் பெரு நாவலாகும். பெரு நாவல்கள் பல பாகங்களாகக் கூட வெளி வரலாம். தொடக்கக் காலத்தில் பெரிய நாவல்களைக் கல்கி தமிழில் எழுதினார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை சில பாகங்களாக வெளிவந்த பெருநாவல்களாகும்.

புதுமை நாவல்கள்
நாவல்கள் கதையைத் தொடங்கி அதனை இன்ப முடிவாகவோ, துன்ப முடிவாகவோ முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. சமூகத்திலும், வாழ்வுப் போக்கிலும் பல்வேறு புதிய முயற்சிகள் செய்து பார்க்கப்பட்டு அம்முயற்சிகள் வெற்றி பெறுவதை அல்லது தோல்வி அடைவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நாவல் படைப்பிலும் புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, புதிய முறையில் கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. க.நா.சுப்பிரமணியம் எழுதிய ஒரு நாள்,எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘காதுகள்’ போன்றவை புதிய முறையில் படைக்கப்பட்ட நாவல்களாகும். ஒரு நாள் காலை முதல் இரவு முடிய ஒருவனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு ‘நாள் நாவல்’ படைக்கப்பட்டுள்ளது. தன் காதுகளில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு எம்.வி.வெங்கட்ராம் ‘காதுகள்’ எனும் நாவலை எழுதினார். கதைகளில் இவ்வாறு புதுமையை ஏற்படுத்துவது தற்காலத்தில் வழக்கத்தில் வருவதைப் புதிய நாவல்கள் படிக்கும் சூழலில் நாம் அறிந்து கொள்ளலாம். சுந்தர ராமசாமியின் ‘ஜெ.ஜெ. சில குறிப்புகள்’ எனும் நாவல் தமிழில் தோன்றிய புதுமை நாவல் வகைகளுள் முதன்மையானது. கற்பனை மாந்தராகிய எழுத்தாளரின் குறிப்புகளாக, உண்மை மாந்தரைக் கூறுவதுபோல் அமைந்தது இந்நாவலாகும்.

உளவியல் நாவல்
மனிதரின் உளமெய்ம்மை (Psychic Reality) சார்ந்த நிலையில் வெளியாகும் நாவல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. மனிதனின் வாழ்க்கை அவன் செய்யும் செயல்களால் நடப்பது இல்லை. அவன் எண்ணுகிற எண்ணங்களால்தான் நடக்கிறது. உடலோடு உயிர் ஒட்டியுள்ள வரை மனமும் எண்ணங்களால் அலைகிறது. அவ்வெண்ணங்களின் அடிப்படையில் நாவல் பாத்திரங்கள் செயல்படுவதே உளவியல் நாவல்களின் அடிப்படையாகும். எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு இந்நாவல் வகையைச் சார்ந்ததாகும்.

ஆன்மிக நாவல்
ஆன்மிக எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு அவ்வான்மிகக் கருத்துகளை மக்கள் மனத்தில் பதிப்பதற்காக எழுதப்படும் நாவல்கள் ஆன்மிக நாவல்களாகும். எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘இருட்டு’, ‘உயிரின் யாத்திரை’ போன்றவை ஆன்மிகத்தின் சிறப்புகளை உணர்த்த எழுதப்பட்டவை. ‘இருட்டு’ நாவலில் தீய சக்திகள் ஒருவர் உடலில் நுழைந்து கடவுள் மறுப்புக் கொள்கைகளை அவர் மூலம் பிரச்சாரம் செய்யச் சொல்லுகின்றன என்று கூறுகின்றார். இத்தீய சக்திகள் எவ்வித நோயுமில்லாத மனிதர்களை இறுதியில் மரணத்தில் கொண்டு செலுத்திவிடும் தன்மை கொண்டவை என்று உரைக்கின்றார்.14 நாத்திகர் தீயவர் என்றும், ஆத்திகர் நல்லவர் என்றும் இந்நாவல் கூறுகின்றது.

துப்பறியும் நாவல்
ஒரு கொலையோ அல்லது சதிச் செயலோ நடந்தால், அதனைக் கண்டு பிடிக்க முயலும் ஒரு துப்பறியும் நிபுணரின் நுண்ணியத் துப்பறியும் அறிவை விளக்குவது இவ்வகை நாவல்கள். தமிழில் தொடக்கக் காலத் துப்பறியும் நாவல்கள் சர் ஆர்தர் கானன்டாயில், ரெயினால்ட்ஸ் போன்ற ஐரோப்பியத் துப்பறியும் நாவலாசிரியர்களின் படைப்புகளின் தழுவல்களாகவே வெளிவந்தன. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு, கோதை நாயகி அம்மாள் போன்றவர்கள் இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டனர். துப்பறியும் நாவலில் ஆர்தர் கானன்டாயிலின் கற்பனைப் பாத்திரமான ‘ஷெர்லாக்ஹோம்ஸ்’ என்ற பாத்திரத்தின் மறுபதிப்பாகச் ‘சங்கர்லால்’ என்ற பாத்திரத்தை உண்மைப் பாத்திரம் போல் படைத்துப் புகழ் பெற்றவர் தமிழ்வாணன்.

வரலாற்று நாவல்கள்
வரலாற்று நாவல்களுக்கும் சமூக நாவல்களுக்கும் சில ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. வரலாற்று நாவல்களில் கதையும், கதை மாந்தர்களும் வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். வரலாற்று நாவல்களில் வரலாற்று உண்மைகளைப் புள்ளிகளாக ஆங்காங்கே அமைத்து அவற்றைச் சுற்றித் தம் புனைவுகளை இழைகளாக இணைத்து நாவலாக்குகின்றனர்.15

வரலாற்றுச் சூழல்கள் இந்நாவல்களில் மையமாக இருக்கும். நிகழ்வுகளும், பாத்திரங்களும் நாவல்களை நடத்திச் செல்வனவாக இருக்கும். உண்மைப் பெயர்களில் கற்பனை நிகழ்வுகளும், வரலாற்று நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு நாவல்கள் எழுதப்பட்டிருக்கும்.

பழங்கால மக்களின் வாழ்வு முறை, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழில் வரலாற்று நாவல்களை எழுதியதில் முன்னோடியாகத் திகழ்பவர் கல்கி. அவரைத் தொடர்ந்து அகிலன், நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் போன்றோர் வரலாற்று நாவல்களை எழுதிப் புகழ் பெற்றனர். சாண்டில்யன் தமிழில் மிகுதியான வரலாற்று நாவல்களை எழுதினார். வரலாற்று நாவல்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்,
(1) பழங்கால வரலாற்று நாவல்
(2) சமகால வரலாற்று நாவல்

இவற்றுள் பழங்கால வரலாற்று நாவல்களை எழுதுவது மிகச் சுலபமானது. பெரும்பாலும் பெயர்களை உண்மைப் பெயர்களாகக் கொண்டு, நிகழ்ச்சிகளைக் கதையின் சுவைக்காகக் கற்பனையாகப் படைக்கலாம். பாத்திரங்களுக்குப் பொய்ப் பெயர் கொடுத்து மெய்ப்பொருள் கூறுவதாகவும்; மெய்ப் பெயர் கொடுத்துப் பொய்ப் பொருள் கூறுவதாகவும் கதையை அமைத்துச் சுவை கூட்டலாம். ஆனால் சமகால வரலாற்று நிகழ்வுகளை நாவலாக்கினால் நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மைகளாக இருக்க வேண்டும். கற்பனைப் பாத்திரங்களைப் பயன்படுத்த முடியாது. கல்கியின் ‘தியாகபூமி’, ‘அலையோசை’ போன்றவை சமகால வரலாற்று நாவல்களாகும்.

வரலாற்று நாவலாசிரியர்கள்
தமிழ் நாவல் வரலாற்றில் கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் ‘வருகை’ இளஞாயிற்றின் உதயம் போன்றது. நாவலைப் பொதுமக்கள் இலக்கியமாக, எல்லார்க்கும் உரியதாக ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. கல்கி தாம் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த விகடன், கல்கிவார ஏடுகளின் மூலம் தொடர்கதைகள் பல எழுதிப் புதினத்தின் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தினார்.

மகேந்திர பல்லவன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டது பார்த்திபன் கனவு ஆகும். அடுத்த வரலாற்று நாவல் சிவகாமியின் சபதம். சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும் சிற்பியின் மகளான சிவகாமி என்ற ஆடற் கலையரசியின் - வளர்ச்சியும், வாழ்வுப் போராட்டமும்; இன்னலும், குறிக்கோளும் நாவலின் தரத்தை உயர்த்துவனவாக உள்ளன.16 நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத்திறமை, அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல்படும்போது கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது.

இராசராச சோழனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த இவரின் ‘பொன்னியின் செல்வன்’ கதையோட்டம் விறுவிறுப்பானது. கற்பனைச் சுவையிலும் இணையற்றதாக உள்ளது; பக்க அளவிலும் மிகப்பெரியது.

அகிலனின் சோழர் காலச் சூழ்நிலையை விளக்கும் ‘வேங்கையின் மைந்தன்’ சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற நாவலாகும். கயல்விழி, பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. வெற்றித் திருநகர் விஜயநகரஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று நாவல். ஜெகசிற்பியன் - இவர் படிக்கப் படிக்கச் சுவையும், திடீர்த் திருப்பமும் கொண்ட ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் நாவலைப் படைத்துள்ளார். இவர் நாயகி நற்சோனை, ஆலவாய் அழகன், மகரயாழ் மங்கை, பத்தினிக் கோட்டம் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார்.

சாண்டில்யனின் ‘மலைவாசல்’, ‘ராஜமுத்திரை’, ‘யவனராணி’, ‘கடல்புறா’ ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கவை. ராபர்ட் கிளைவ் பற்றிக் கூறும் வரலாற்று நாவலான ‘ராஜபேரிகை’ வங்க மாநிலத்தின் பரிசை வென்ற பெருமைக்குரியது. அரு. இராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’, ‘அசோகன் காதலி’; நா.பார்த்தசாரதியின் ‘பாண்டிமா தேவி’, ‘மணிபல்லவம்’; விக்கிரமனின் ‘நந்திபுரத்து நாயகி’, ‘காஞ்சி சுந்தரி’; பூவண்ணனின் ‘கொல்லிமலைச் செல்வி’; கலைஞர் கருணாநிதியின் ‘ரோமாபுரிப் பாண்டியன்’, ‘தென்பாண்டிச் சிங்கம்’; மு. மேத்தாவின் ‘சோழநிலா’; கி. ராஜேந்திரனின் ‘ரவி குலதிலகன்’; ஸ்ரீ வேணுகோபாலனின் ‘சுவர்ணமுகி’ ஆகியவை சில சிறப்பு வாய்ந்த வரலாற்று நாவல்களாகும்.

விடுதலை இயக்க நாவலாசிரியர்கள்
இந்திய மக்களின் தேசிய உணர்வும், அதன் விளைவாக எழுந்த விடுதலைப் போராட்டமும் இந்திய மொழிகளில் பல நல்ல நாவல்கள் பிறக்கக் காரணமாய் அமைந்தன. அவ்வழியில் தமிழிலும் தேசிய வீறு கமழும் நாவல்கள் பிறந்தன. இவ்வகை நாவல்களுக்கு உதாரணமாகக் கே.எஸ். வேங்கட ரமணியின் ‘தேசபக்தன் கந்தன்’, அகிலனின் ‘பெண்’, கல்கியின் ‘தியாகபூமி’, ‘அலைஓசை’, ர.சு. நல்ல பெருமாளின் ‘கல்லுக்குள் ஈரம்’, ராஜம் கிருஷ்ணனின் ‘வளைக்கரம்’, ந.பார்த்தசாரதியின் ‘ஆத்மாவின் ராகங்கள்’ முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

வேங்கடரமணி என்பவர் தென்னாட்டுத்தாகூர் என்று போற்றப்பட்டவர். இவரது ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவல் இந்தியாவின் விடுதலை, கிராமங்களின் மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்துவதால் இதனை முதல் காந்திய நாவல் என்றும் கூறுவர்.17 நாட்டின் விடுதலைக்குப் போராடி மடியும் கந்தனின் வீரச்செயல் இந்நாவலைப் படிப்போரை நெகிழச் செய்கிறது.

அகிலனின் பெண் என்ற நாவலும் தேசிய வீறு கமழும் நல்ல நாவலாகும். இக்கதையில் வரும் சந்தானம் தேசிய வீரனாக மாறி, நாட்டு விடுதலைக்காக உழைக்கிறான். கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களைத் தட்டியெழுப்பியதால் சிறைத் தண்டனை அடைகிறான். சந்தானத்தின் மனைவி வத்சலா மனத்திலும் சிந்தனைப் புரட்சி உண்டாகிறது. கிராம மக்களது இரங்கத்தக்க நிலை, அவளது மூடிக்கிடந்த விழிகளைத் திறந்து விடுகிறது.18

கல்கியின் அலை ஓசையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 1930-க்கும் 1947-க்கும் இடைப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளை இந்நாவலில் ஆசிரியர் சுவை குறையாமல் விளக்கிக் காட்டியுள்ளார்.

கல்லுக்குள் ஈரத்தில் திரிவேணி, தீக்ஷிதர் முதலிய கதைமாந்தர்களை வரலாற்றுத் தலைவர்களுடன் இணைத்துக் கதை நிகழ்ச்சிகளில் மெய்ம்மைத் தன்மையை நல்ல பெருமாள் திறம்பட உருவாக்கியுள்ளார். கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் ராஜம் கிருஷ்ணனின் ‘வளைக்கரம்’ சிறப்பானது. கோவா மக்களின் உள்ளத்தில் ஊற்றெனச் சுரந்து, பீறிட்டுப் பொங்கிய விடுதலை உணர்ச்சியையும், அதற்காக அவர்கள் செய்ய நேர்ந்த மகத்தான தியாகங்களையும் இந்நாவலில் அழகுற அவர் வெளிப்படுத்தி உள்ளார்.18 மேலே குறிப்பிட்டவை தவிர, வேறு பல நாவல்களிலும் விடுதலைப் போராட்டச் சாயல் படிந்திருப்பதைப் படிப்போர் உணரலாம்.

சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள்
தமிழ் நாவலாசிரியர்கள் சமுதாய விடுதலையை மனத்தில் கொண்டு பல கலைப்படைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழ் நாவல்களில் சமுதாயச் சீர்த்திருத்த நோக்குத் தொடக்கக் காலத்திலேயே அரும்பிவிட்டது. சமுதாயச் சீர்த்திருத்தத்திற்கு முதலிடம் கொடுத்தவர் மாதவையா. இத்தகைய நாவல்களில் பெண்ணுரிமை, சாதிபேத மற்றச் சமுதாயம், பழமையிலிருந்து விடுபட்ட பகுத்தறிவுச் சிந்தனை முதலியன மிகவும் வற்புறுத்தப்படுகின்றன. பெண்ணுரிமைக்காக வாதாடிப் போராடியவர் வ.ராமசாமி இந்நோக்கத்திற்காக எழுதப்பெற்ற புதினங்கள் ‘சுந்தரி’, ‘கோதைத்தீவு’ போன்றவை ஆகும்.

பி.எஸ்.ராமையாவின் ‘பிரேமஹாரம்’ நாவலில் கல்யாணி வரதட்சணைச் சிக்கலால் புகுந்த வீட்டாரால் நிராகரிக்கப்படுகிறாள். அவள் தங்கச் சங்கிலிக்காகத் தன்னை நிராகரித்த கணவனுடன் போக மறுத்துவிடுகிறாள். கல்யாணியின் தந்தை தன் மகளின் வாழ்வு மலர வேண்டுமே என்பதற்காக எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதையும் இவர்இந்நாவலில் சித்திரித்துள்ளார்.19

கலப்பு மணம்
இன்றைய சமுதாயத்தில் கலப்பு மணம் செய்து கொள்வோருக்கு எத்தனையோ சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக்கொண்டு இக்காலக்கட்டத்தில் சில நாவல்கள் எழுதப் பெற்றன. ஆர். வி.யின் ‘அணையா விளக்கு’ கலப்பு மணச் சிக்கலை எடுத்துப் பேசுகிறது. இலட்சியமும் நடைமுறை வாழ்க்கையும் முரண்பட்டு மோதிக் கொள்ளும் காட்சியைத் தஞ்சை மாவட்டப் பின்னணியில், கிராம வாழ்வின் உயிர்களைத் ததும்ப இந்நாவலில் எழுதிச் செல்கிறார்.

திசை மாறிய பெண்கள்
வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கை பல நாவல்களில் காட்டப்படுகின்றது. மு.வரதராசன் நாவல்களில் இவ்வாறு வழுக்கி விழுந்த பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களையும் மு.வ. வெளிப்படுத்தியுள்ளார். விந்தனின் ‘பாலும் பாவை’யும், டி.கே. சீனிவாசனின் ‘ஆடும் மாடும்’ ஆகிய இரு நாவல்களும்20 இதே சிக்கலைத் தான் ஆராய்கின்றன.

ஏழைகள், தொழிலாளர்கள், உழைப்பாளிகளின் சிக்கல்கள்
நாடு விடுதலை பெற்ற பின் உழைக்காமலேயே சுகபோகங்களை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்களை ஏமாற்றி வாழும் போக்கும் மக்களிடையே உருவாகி விட்டது. மு.வ.வின் கயமையில் கயவர்களின் செல்வாக்கும், போலி அரசியல் வாதிகளின் முன்னேற்றமும் விளக்கப்படுகின்றன. பேராசையும், வாய்ப்பும் கொண்டவர்கள் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகளையும், உரிமைகளையும் பறித்துக் கொள்ளும் கொடுமையைப் ‘பொன்மல’ரில்21 அகிலன் சித்திரிக்கிறார்.

அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள், அல்லலுக்கு ஆளாகி, அழுது மடிந்ததைப் ‘பஞ்சும் பசியும்’ நாவல் காட்டுகிறது. தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனையை அதன் அடி ஆழம் வரை சென்று, கண்டுணர்ந்து வெளிப்படுத்துகிறார் ரகுநாதன். செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் விவசாயிகளின் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சிப் படிகளைச் சித்திரிக்கும் நோக்கில் எழுதப்பட்டது நாவல் ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’ நாவல் ஆகும். சங்கரராமின் ‘மண்ணாசை’, லா.ச.ரா.வின் ‘அபிதா’,கி.ராஜநாராயணனின் ‘கோபல்லபுரம்’, சுந்தரராமசாமியின் ‘ஒருபுளியமரத்தின் கதை’, மணியனின் ‘ஆசை வெட்க மறியும்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’, சூரியகாந்தனின் ‘மானாவாரி மனிதர்கள்’ முதலியன சிறந்த சமுதாயப் புதினங்கள் ஆகும்.

குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்
வாழ்க்கையின் அடிப்படை அலகு - குடும்பம் என்ற கட்டமைப்பு ஆகும். மனித வாழ்க்கை நின்று கொண்டிருக்கும் அடித்தளம் குடும்பம். மனிதனுக்கும், புறவுலகிற்கும் தொடர்பு குடும்பத்தின் மூலம் ஏற்படுகின்றது. குடும்பம் - தனி மனிதன் என்ற இரண்டிற்கும் இடையேயான தொடர்பும், சிக்கலும் குடும்ப நாவல்களில் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.

ஆண் - பெண் உறவுச் சித்திரிக்கும் நாவல்கள்
ஆண் - பெண் உறவை, அதன் சிக்கலைக் கலைநோக்கோடு விமர்சிக்கும் தரமான நாவல்கள் பல தோன்றியுள்ளன. மு.வ. வின் ‘அல்லி’, ‘கரித்துண்டு’, தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மோகமுள்’, அகிலனின் ‘சித்திரப்பாவை’ முதலியவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம். மேலும், கிருத்திகாவின் ‘புதிய கோணங்கி’, ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’, ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘மனக்குகை’, ‘வேஷங்கள்’, ‘திரைக்கு அப்பால்’ ஆகிய நாவல்களில் இழையோடும் பிரச்சினை ஆண் பெண் உறவுகள் பற்றியதாகும்.

காதல் பற்றிப் பேசும் நாவல்கள்
காதல், தாய்மை என்னும் உணர்வுகள் உலகிலேயே மிக உயர்ந்த உணர்வுகளாகப் போற்றப்படுகின்றன. பல நாவல்கள் காதலைப் பற்றியே பேசுகின்றன. அகிலன், நா. பார்த்தசாரதி, மு.வ., சு.சமுத்திரம், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் காதலின் மாண்பினை நயம்பட எழுதிக் காட்டியுள்ளனர். நா. பார்த்தசாரதியின் ‘பொன்விலங்கு’ என்ற நாவலும் நிறைவேறாத காதலைச் சித்திரிப்பதே. நா.பா.வின் பெரும்பாலான நாவல்களில் நிறைவேறாக் காதல் சித்திரிக்கப் படுகின்றது.

சு. சமுத்திரத்தின் ‘ஊருக்குள் ஒரு புரட்சி’, ‘வேரில் பழுத்த பலா’ போன்றவை நல்ல நடையும் புரட்சி நோக்கமும் உடையவை. வாசவனின் ‘வாழ்வின் ராகங்கள்’, ‘அந்திநேரத்து விடியல்கள்’ போன்ற நாவல்களும் காதலைச் சித்திரிக்கின்றன. காதல் உணர்வு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதையும், காதலுக்காக ஒருவர், மற்றவர் களுக்கு விட்டுக் கொடுப்பதையும், காதலில் ஆண் - பெண் இருபாலருள் ஒருவர்தோல்வி அடைந்தவர்களாகக் காட்டுவதையும் கருப்பொருள்களாகக் கொண்ட நாவல்கள் பல தமிழில் உள்ளன. அவை விரித்தால் பெருகும் இயல்பின.

வட்டார நாவலாசிரியர்கள்
வட்டாரம் என்ற சொல் நிலவியலோடு தொடர்பு உடையது. ஒருகுறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் நோக்குடன் எழுதப்படும் நாவல்களையே வட்டார நாவல்கள் எனப்படுகின்றன. இவ்வகை நாவல்களில் கதை ஒரு சிற்றூரிலோ, அல்லது சிறிய நகரத்திலோ நடப்பதாகக் காட்டப்படும், வருணனைக் கூறு நிறைய இடம்பெறும்.
தமிழில் இப்போக்கைத் தோற்றுவித்த முன்னோடிகளாகக் கே.எஸ். வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோரைக் குறிப்பிடலாம்.

பின்வரும் நாவல்கள் வட்டார நாவல்களில் குறிப்பிடத்தக்கன: ஆர்.சண்முகச் சுந்தரத்தின் அறுவடை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, நீல. பத்மநாபனின் தலை முறைகள், பொன்னீலனின் கரிசல், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், தோப்பில் முகம்மது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இயல் – ஒன்று -  தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்  Empty Re: இயல் – ஒன்று - தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 14, 2012 11:17 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum