தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமானுஷியக்கதைகள்

2 posters

Go down

அமானுஷியக்கதைகள் Empty அமானுஷியக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 3:21 pm

குறளி 
                                                                       -----------------

கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு.

“ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில விட்ட்டேன்” என்று கரகரத்தான் மாந்த்ரீகன்.

“ம்ம்ம்’ என்றது குறளி.

ஒரு கிழிந்த புடவைதுண்டைக் கொடுத்தான். “ இது நீ பழிவாங்கப் போகும் பெண்ணுடையது. முகர்ந்து கொள். தவறு நேரக் கூடாது. அதோ அந்த வீடு தான். புழக்கடையில் மரங்கள் இருக்கிறது” என்று சொல்லி “போ” என்றான்.

குறளி அனிதாவின் வீட்டில் நோக்கி நடந்தது. நீங்கள் யாரேனும் அந்தக்காட்சியைப் பார்த்திருந்தால், ஒரு கிழிந்த புடவைத் துண்டு ஒன்று காற்றில் ஆடி ஆடி செல்லும் காட்சியைப் பார்த்து இருப்பீர்கள்.

மாந்த்ரீகன் சொன்ன மாதிரி வீட்டின் பின்பக்கம் ஒரு புளிய மரம் இருந்தது. குறளி அதன் மீது ஏறி ஒரு கிளையில் வசதியாக உட்கார்ந்தது. வீட்டின் பின் பக்கம் மட்டுமல்லாமல் முன் வாசல் கூட அந்த மரத்தின் மேலிருந்து நன்றாகத் தெரிந்தது.

அந்த மரமும் அந்த வீட்டின் அமைப்பும் குறளிக்கு பழைய நினைவுகளைத் தூண்டியது.

அதனுடைய வீடும் இப்படித்தான் இருந்தது. அழகாக. சின்னதாக. அவர்கள் குடும்பத்தைத் போல . அப்பா அம்மா அவள். (குறளி பெண் என்பது தெரியாதா?) எவ்வளவு சந்தோஷம் அவர்கள் வாழ்க்கையில்! அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள் அவள் பெற்றோர். ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் அவள் பள்ளிக்குப் போகும் வரையில் தான். அவளுக்கு ஆறு வயதானபோது பள்ளியில் போட்டார்கள். அப்போது தான் அவளுக்கு தனது குறுகிய வளர்ச்சி ஒரு கேலிக்குரியது என்று புரிந்தது.

ஆமாம் கமலிக்கு ( இன்றைய குறளி அன்றைய கமலி) சற்று குறுகிய வளர்ச்சி. குள்ளம். ஆனால் அவள் பெற்றோர் அதை ஒரு குறையாகச் சொல்லாமலேயே வளர்த்திருந்தார்கள். ஆனால் பள்ளிக்குச் சென்றபின்னர் உடன் படிக்கும் மாணவ மாணவியரின் கேலிப்பார்வை அவளுக்கு உலகம் என்ன என்பதை உணர்த்தியது.

உடல் ஊனத்தை இவ்வளவு வெறுப்பார்களா? ஆமாம். அதுதான் நிதர்சனம்.
ஆசிரியர்களிடம் முறையிட்டும் பலன் எதுவுமில்லை. உதட்டளவில் அவர்கள் ஆறுதல் சொன்னார்களே ஒழிய அவர்கள் கண்களிலும் ஒரு ஏளனம் இருக்கத்தான் செய்தது.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போன்ற சம்பவம் கோடைக்கானலில் நடந்தது. அப்போது அவள் பனிரெண்டாம் வகுப்பு. அந்த வருடத்துடன் பள்ளிப்படிப்பு முடிந்து விடும் என்பதால் ஒரு சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இவளும் சென்றாள்.

அங்கே தான் இவள் முடிவு காத்திருந்தது.

இவளுடன் யாரும் அதிகம் பழகாத காரணத்தால் இவள் மட்டும் தனியாக அந்தக் காலையில் இவர்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸை விட்டு வெளியே மலைப்பாதையில் ஒரு நடை சென்று வரக் கிளம்பினாள்.

ஒரு இருவது நிமிடம் நடந்திருப்பாள். ஒரு அரவமில்லாத ஒதுக்குபுறமாக இருந்த மரங்களின் பின்னாலிருந்து “ ஸ்ஸ் சீய்ய்ய் விடுறா” என்ற பெண்குரலும் அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் காமம் தோய்ந்த ஒரு முனகலும் கேட்டது.

கமலிக்குப் புரிந்து விட்டது. ஆனால் ‘விடுறா” என்றாளே? இவர்கள் குழுவில் பெண்கள் மட்டும் தானே வந்திருந்தார்கள்? குழப்பதுடன் நின்று யோசித்தாள். ‘நமக்கென்ன போய்விடலாம்’ என்று நினைத்தவளை மனிதர்கள் இயல்பான ஆர்வக்கோளாறு வென்றது.

மெதுவாக, அடி மேல் அடி வைத்து, சப்தமின்றி அந்த மரத்தை நெருங்கினாள். ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று தலையை எட்டி அவள் பார்த்த காட்சி, அவள் செத்து இத்தனை வருடங்கள் ஆகியும் அவளால் மறக்க முடியவில்லை. அவள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி ஆடைகள் நெகிழ்ந்த நிலையில் படுத்திருக்க அவள் அருகில் அவர்கள் வகுப்பிலேயே படிக்கும் ஒரு மாணவன்!

‘ அவன் எப்படி வந்தான்?’ என்று அவள் யோசிக்கும் முன்னரேயே அவர்கள் இருவரும் இவளைப் பார்த்துவிட்டார்கள்.

அப்புறம் நடந்தவைகள் மிகவும் கோரமான சம்பவங்கள். அதனால் சுருக்கமாக. அவர்கள் இருவரும் தங்கள் ஆடைகளை சரிசெய்து கொண்டு எழுந்து வந்து இவளிடம் பேசினார்கள். தாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் மன்னித்து விடும் படியும் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் கமலி கேட்கவில்லை. டீச்சரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினாள். அந்தப் பெண் மிக அழகாக இருந்ததும் அந்தப் பையன் கம்பீரமாக இருந்ததும் அவளை ஒரு விதமாக படுத்தியது என்பது என்னவோ உண்மை. அது தான் அவர்களைக் காட்டி கொடுக்க அவள் பிடித்த பிடிவாதத்துக்கும் அடிப்படை என்பது அவளுக்கே புரிந்தது.

அந்தப் பெண்ணும் பையனும் மிகவும் பயந்து போய்விட்டார்கள். அப்போது அந்தப் பெண் அவன் காதுகளில் ஏதோ சொன்னாள். பயத்துடனும் குழப்பத்துடனும் அவன் அவளைப் பார்த்தான். அவள் ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள்.

அதற்கப்புறம் நடந்தவை மின்னல் வேகத்தில் நடந்தேறின. அந்த இருவரும் கமலி சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் சரேலென்று அவளை நெருங்கி ஆளுக்கொருப் பக்கம் பிடித்துத் தூக்கி ஒரு பொம்மையை எறிவது போல அவளை அந்த மலையுச்சியிலிருந்து எறிந்தார்கள்.

கமலி செத்துப்போனாள்.

அப்புறம் அது ஒரு விபத்து என்றும், கமலி கால் தடுக்கி விழுந்திருப்பாள் என்றும் யூகிக்கப்பட்டு அந்த கேஸ் மூடவும் பட்டது. இதற்கிடையில் அந்தப் பையன் காலையிலேயே அங்கிருந்து ஓடி விட்டான். இதெல்லாம் கமலிக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்டால், அவள் செத்தபின் உடனே எங்கும் போகாமல் அங்கேயே சுத்தி வந்ததால் தெரிந்து கொண்டவை.

அங்கேயே சுத்தி வந்ததால் தான் அந்த மாந்த்ரீகனிடம் மாட்டியும் கொண்டாள். அவள் இறந்தபிறகு குறளி ஆனாள். அதிலும் அவளுக்கு ஒரு கோபம். ஒரு மோகினி ஏன் ஆகமுடியவில்லை அவளால்? இறந்த பிறகும் உயரம் குறைந்த பேயாகத் தான் ஆனாள்.

அவளுடைய விதி முடிய இன்னும் நாற்பது வருடங்கள் உள்ளது என்றும் அதுவரையில் அவள் குறளியாகத்தான் இருக்கமுடியும் என்றும் மாந்த்ரீகன் சொல்லித்தான் அவளுக்குத் தெரியும்.

அவன் நல்லவன் இல்லை. மந்திரத்தால் அவளைக் கட்டிப்போட்டவன் அவளை பல குற்றங்கள் செய்ய ஏவினான். அவளுக்குத் தெரியும் தான் செய்வதெல்லாம் தவறு என்று. அவனிடமிருந்து தப்பித்துப் போக அவளுக்குத் தைரியமில்லாமல் அவன் சொன்னதைச் செய்தாள்.

அப்படிப்பட்ட குற்ற வாழ்வு வாழ்ந்து வந்தவளுக்குத் தான் இன்றைக்கு இந்த வேலை.

பாவம் அந்தப் பெண் என்று பரிதாபப்பட்டாள். இப்படி அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்து குறளி அதிர்ந்தது. கோடையில் இவளைத் தள்ளி விட்ட அதே பையன்! காரின் டிரைவர் பக்கக் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். குறளிக்கு இன்னும் அதிர்ச்சி. அந்தப் பையனுடன் இருந்த அதே பெண்!

குறளிக்கு கோபம் கொப்பளித்தது. இருந்தும் மாந்த்ரீகன் சொன்னதுக்குக் கட்டுப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறளிக்கு அவ்வளவு தூரத்தில் இருந்தும் தெளிவாகக் கேட்டது.

“டேய்! இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருக்கறது? பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணித் தொலைன்னாலும் கேக்க மாட்டேங்கற. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க?” என்றாள் அவள்.

“ஏய்! இன்னும் கொஞ்ச நாள் பொறு. நான் எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன். ஒரு மந்திரவாதியப் பிடிச்சு என் மனைவிக்கும் குழந்தைக்கும் ஏவல் செய்யச் சொல்லியிருக்கேன். நாம சம்பந்தப்படாம அவன் அவங்களக் கொன்னுடுவான். சொத்தும் நம்ம கையில. கொஞ்சம் பொறுமை தேவைடா” என்றான் அவன்.

குறளிக்கு கோவம் அதிகமானது. இவர்கள் இன்னுமா மாறவில்லை?

“சரி” என்று சொல்லி அந்தப் பெண் காரில் ஏறி சென்று விட்டாள். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.

அப்போது வீட்டின் பின் பக்கக் கதவு திறந்தது. இறுகிய முகத்துடன் ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் வந்ததும் குறளிக்கு அவளுடை வாசம் வந்துவிட்டது. இவளைத் தான் கொல்லவேண்டும்.

குறளி தயாரானது.

அப்போது திடீரென்று “அம்மா” என்று ஒரு சிறு பெண்ணின் குரல் கேட்டது.

“என்னடா செல்லம்? அம்மா கெணத்தடில இருக்கேன். இங்க வா” என்றாள் அந்தப் பெண்.

“இதோ வரேன்” என்று சொல்லி வீட்டின் உள்ளே இருந்து ஓடி வந்த பெண் கமலியைப் போலவே உயரமில்லாத உடல் வளர்ச்சி குன்றியவள்.

மறுநாள் காலையில் அந்தக் குழந்தையின் அம்மா கிணற்றடிக்கு வந்தபோது அங்கே தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்த தன் கணவனைப் பார்த்து அலறினாள்.

போலீஸ் வந்தது. கிணற்றடியில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டது என்று ரிப்போர்ட் எழுதிச் சென்றார்கள்.

ஆனால் அந்த ஊரின் எல்லையில் இருந்த மயானத்தில் இறந்து கிடந்த மாந்த்ரீகனின் மரணத்தில் மட்டும் ஏதோ மர்மம் இருப்பதாகப் போலீஸ் சந்தேகப்பட்டது.

குறளி அந்த ஊரைவிட்டுப் போவதற்கு முன்னால் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து அந்த அம்மாவையும் குழந்தையையும் ஒரு முறை பார்த்துவிட்டு சென்றது. போகிற போக்கில் அந்தக் கொடைக்கானல் பெண்ணின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து, கராஜில் நின்று கொண்டிருந்த அவள் காரின் பின் சீட்டில் போய் உட்கார்ந்து மறு நாள் விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தது. 


கதையாசிரியர்: சி.ஆர்.வெங்கடேஷ்
நன்றி ;சிறுகதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அமானுஷியக்கதைகள் Empty Re: அமானுஷியக்கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 21, 2014 3:26 pm

புளியமரத்து பேய்கள்   
                                                                            -------------------------------

அது ஒரு மிக வயதான புளியமரம்தான். இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத்தண்டில் எக்கச்சக்கமான ஆணிகள் திசைக் கணக்கின்றி அடித்து இறக்கப் பட்டிருந்தன. பாரதி அக்கா, சியாமளா, சௌம்யா, ஹேமா சகிதமாக ஜானா பள்ளிக்கு நடந்து போகையில் பாரதி அக்காவிடம் பலமுறை இந்தப் புளிய மரத்தை பற்றி வித விதமான கதைகளை காது விரைக்கக் கேட்டிருக்கிறாள். பகலில் இறுக்க போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து மூடி போதாக் குறைக்கு பாட்டியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்கினாலுமே பெரும்பாலும் பயத்தில் உடம்பும் மனமும் உதறிக் கொண்டே தான் இருக்கும். அந்த மரத்தின் கதைகள் அப்படி!

இப்படிப் பட்ட புளிய மரத்தை நண்பர்கள் புடை சூழக் கடப்பதில் ஜானாவுக்கு பிரச்சினை எதுவும் இருந்ததில்லை, இன்றைக்குப் பார்த்தா இவளுக்கே இவளுக்கென்று இந்த மெட்ராஸ் ஐ வந்து தொலைக்கும்? பள்ளியில் இருந்து இன்று காலை காட்சியாக “திக்குத் தெரியாத காட்டில்” படத்திற்கு கூட்டிப் போயிருந்தார்கள். படம் பார்க்கப் போகாமல் லீவுலெட்டர் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டில் இருந்திருக்கலாம், படம் பார்த்து விட்டு வந்தது தான் தாமதம், இந்தக் கூட்டாளி கழுதைகள் “டீச்சர் டீச்சர்.. ஜானகிக்கு கண் வலி டீச்சர்” என்று போட்டுக் கொடுத்து எட்டப்பியானார்கள். அந்தக் கழுதைகளை விடுங்கள் இந்த டீச்சரை படத்தில் பார்த்த முதுமலை காட்டுக்குள் தனியே அனுப்பி தொலைந்து போக வைக்க வேண்டும் அந்தக் கடவுள். கண் வலி எல்லோருக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று இந்த மிளகா மூக்கு பியூலா டீச்சர் கிளாசுக்குள் கால் வைக்கும் முன்னே “அடி, லீவு லெட்டர்லாம் கண் வலி சரியானப்புறம் தந்தா போதும்டி, கெளம்பு.. கெளம்பு எடத்தக் காலி பண்ணு..” என்று துரத்தாத குறையாக வெளியில் அனுப்பி விட்டாள்.

அந்த டீச்சருக்கு என்ன தெரியும் இந்தப் பாடாவதி புளிய மரத்தின் கதையைப் பற்றி.? ஒற்றையாய் அதைக் கடப்பதை நினைத்தாலே ஜூரம் வரும் போலிருந்தது ஜானாவுக்கு. ஜானாவின் வீட்டுக்கு வலப்பக்கம் சின்னதாய் ஒரு கிளப்புக் கடை
இருக்கிறது. அதில் முன்பக்கம் கிளப்புக் கடை பின்பக்கம் வீடு என்று வைத்துக் கொண்டிருந்தார்கள் அந்த கடைக் காரர்கள்.

கடைக்காரப் பெண் நல்ல சிவப்பி, புருஷனோ நல்ல கருப்பன் . ஆம்பிளைகளாகப் பிறந்த ரெண்டும் ரெண்டு விதமான ஜாடையில் அம்மையையும் அப்பனையும்
உரித்துக் கொண்டிருந்தன. ஜாடை ஒழிகிறது குணத்தில் அப்பனின் அச்சுக்கள். லேசு பாசாக அந்த வீட்டு ஆண்களின் குரல் காதில் விழும் போதேல்லாமும் ஒரே அதட்டல் மயமாகத் தான் இருக்கும். ஒத்தை ஆளாய் அந்தப் பெண் புருஷ அதிகாரம் பிள்ளைகள் அதிகாரம் ரெண்டுக்கும் எப்படியோ ஈடு கொடுத்துக் கொண்டு வாய் மூடி ஊமைச்சி போல இருந்து வந்தாள்.

அந்த சிவத்தப் பொம்பளைக்கும் இந்தப் புளிய மரத்துக்கும் ஆயுசுகால பந்தமிருக்கிறது, அதைச் சொல்லத்தான் இதைச் சொல்லியாக வேண்டியிருந்தது.

கேளுங்கள் அந்தச் சிவப்பியம்மாள் ஒவ்வொரு அமாவாசைக்கும் கழுத்துச் சுளுக்கு மட்டும் கனத்த கல்லைச் சுமந்து கொண்டு இந்தப் புளிய மரத்துக்கு கொண்டு செல்லப்படுவாள். கூட கோடாங்கி மாத்திரம் உடுக்கை அடித்துக் கொண்டு அந்தம்மாவைச் செலுத்திக் கொண்டு போய் உச்சந்தலை முடியில் சிலதைப் பிடுங்கி புளியமரத்து நடுத்தண்டில் ஆணி அடித்து அறைந்து விட்டு வருவான். அதற்கப்புறம் ஓரிரு நாட்கள் அந்தம்மாள் தன் கிளப்புக் கடைக்கு பக்கவாட்டில் ஒதுக்கமாய் இருக்கும் சிமென்ட் திண்ணையில் அயர்வாய் நாளின் முக்காலமும் படுத்தேக் கிடப்பாள்.

பள்ளிக்கு போகையில் ஒருநாள் பாரதி அக்கா தான் சொன்னாள், இந்தம்மாளுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று, தொத்திக் கொண்ட நாட்களில் இருந்தே பிடித்த பிடியில் போவேனா என்கிறதாம் அந்த ரயில் தண்டவாளத்துப் பேய். ஒவ்வொரு அமாவாசைக்கும் ஆணி அடித்து மாளவில்லையாம். பேய் பிடித்து ஆட்டும்
நாட்களில் புருஷனைக் கிட்டக் கண்டால் சங்கைப் பிடித்து கடித்து ரத்தம் உறிஞ்சாக் குறையாக ஆத்திரப் படுவாளாம் அந்த சிவத்தம்மாள்.

பாரதி அக்காவுக்கு மட்டும் எப்படியோ எல்லாமும் தெரிந்து விடுகிறது. பியூலா டீச்சர் வீட்டுக்குப் போடி என்றதும் ஜானா ஒன்பதாம் வகுப்பு பி செக்சனில் இருக்கும் பாரதி அக்காவை தான் துணைக்கு தேடிப்போனாள், கூப்பிட்டால் பாரதி அக்கா மறுக்கமாட்டாள் தான், ஆனால் அன்றைக்கென்று அவளுக்கு மத்தியானப் பீரியடில் கிராப் பரீட்சை வந்து தொலைக்க கணக்கு டீச்சர் எசக்கி கூப்பிடப் போன ஜானாவை வயிற்றைப் பிடித்துக் கிள்ளி,

“ஏண்டி இந்தப் பட்டப் பகல்ல மெயின் ரோட்டோரமா நடந்து போக உனக்கு துணைக்கு ஆளு வேணுமாக்கும், தோலை உருச்சுப் போடுவேன், உன்னோட சேர்த்து அவளும் மட்டம் போடணுமோ? தனியாவே போய்க்கோ உன்ன ஒன்னும் பிசாசு பிடிக்காது..போ.. போ” என்று துரத்தி விட்டாள் கிளாசில் இருந்து .

சியாமளா, சௌம்யாவைக் கூப்பிடலாம், யாராவது ஒருத்தர் கூட வந்திருப்பார்கள்தான். போனவாரம் ஒரு சின்ன பிரச்சினையில் இருவரோடும் சண்டை. இப்போது ஜானா கூப்பிட்டால் ரெண்டு கழுதைகளுமே மூஞ்சியைக் கூட திருப்பப் போவதில்லை. கேளாமல் இருப்பதே நல்லது என்றெண்ணிய மாத்திரத்தில் ஜானாவுக்கு மறுபடியும் புளிய மரத்துப் பேய்களின் ஞாபகம் வந்து மருட்டியது. கூடவே அங்கே நித்ய கடமையை ஆணி அடித்துக் கொண்டிருக்கும் சிவத்தம்மாள் ஞாபகமும் வந்து தொண்டை வறண்டது. கொண்டு போயிருந்த பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு மூடி கூடையில் வைத்துக்
கொண்டாள்.

இதொண்ணும் உச்சிக் காலமில்லை, அதனால் பேய்கள் உக்கிரமாய் ஒன்றும் இருக்கப்போவதில்லை. அதனால் தனியே போனாலும் பரவாயில்லை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்ளப் பார்த்தாள். அதற்குள் ரெண்டாம் மணி அடித்து கிளாசுக்குள் வந்த பியூலா டீச்சர், முகத்தை சுளுக்கிக் கொண்டு,

“ஏண்டி இன்னுமா நீ போகல? கிளாஸ்ல எல்லாத்துக்கும் கண்ணு வலிய ஒட்ட வச்சுப்பிடுவ போல இருக்கே. என்னடி அக்கப்போரு உன்கூட.. இப்போ நீ போகப்போறியா இல்லா பெரம்புல ரெண்டு சாத்து சாத்தனுமா?”

என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சொல்லவே ஜானாவுக்கு அவமானத்தில் லேசாகக் கண் கலங்கியது. இந்த டீச்சர் எப்பவுமே இப்படித்தான். பிள்ளைகள் மாட்டிக்கொண்டால் கிண்டிக் கிழங்கெடுக்காமல் விடவேமாட்டாள். என்று மனசுக்குள் வைது கொண்டே தன் புத்தகப் பை மதியச் சாப்பாட்டுக் கூடை
சகிதம் பள்ளியில் இருந்து வெளியில் வந்து வீட்டை நோக்கிப் போகும் மெயின் ரோடில் நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு அரைக் கிலோ மீட்டர் வரை எந்தப் பயமும் இல்லை, மிச்சமிருக்கும் முக்காக் கிலோ மீட்டரில் தான் அந்தப் புளிய மரம் வரும், அதை எப்பாடுபட்டாவது கடந்து விட்டால் பத்துப் பதினைந்து நிமிட ஓட்டத்தில் வீட்டை அடைந்து விடலாம். ஜானாவுக்கு எங்காவது உட்கார்ந்து அழுதால் என்னவென்றிருந்தது ஒரு நிமிடம். தேற்ற யாரும் இல்லை என்பதால் தயங்கிக் கொண்டே நடையை எட்டிப் போட்டு ரோட்டோரமாய் நடக்க ஆரம்பித்தாள்.

ஈசன் நோட்ஸ் கடை கடந்து போனது. அம்பாள் மெடிகல்ஸ், அய்யனார் லாரி செட், குருவி குளம் ஸ்பீக்கர் செட் கடை. ரோகினி பாத்திரக் கடை எல்லாம் ஒவ்வொன்றாய் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. மெயின் ரோட்டில் வாகனங்கள் விரைந்த படி இருந்தன. அப்பா இந்நேரம் இந்தப் பக்கம் டி. வி.எஸ் பிப்டியில் வந்தால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எத்தனை சந்தோசமாய் இருக்கும், ஒரு நிமிஷம் இப்படி நினைத்து விட்டு பிறகு அவர் எப்படி இந்நேரம் இந்தப் பக்கம் வரமுடியும்? என்ற ஏமாற்றத்தில் முகம் கசங்கினாள் ஜானா. பக்கத்து வீட்டு செக்யூரிட்டி அங்கிள் கூட சாயந்திரமாகத் தான் இந்தப் பக்கமாக வண்டியில் போவார். இப்போது தெரிந்தவர்கள் யாரும் போக வாய்ப்பே இல்லையே ஜானா யோசித்தவாறு போய்க் கொண்டிருந்தாள்.

ஜெருசலேம் சபை என்று போர்டு போட்ட சின்னக் குடில் ஒன்று வந்தது. அங்கிருக்கும் ஒரு ஊழியக்காரப் பெண்ணை ஜானாவுக்கு தெரியும் என்பதால் பயத்தில் இருந்து தப்பிக்க கொஞ்ச நேரம் அங்கே நுழையலாமா என்று யோசனை வந்தது. குடிலுக்கு அருகேப் போய் எட்டிப் பார்த்தால் அங்கே சின்னப் பூட்டு ஒன்று
தொங்கிக் கொண்டிருந்தது. கண்களில் ஏமாற்றத்துடன் ஜானா மேலே நடந்தாள்.

அடுத்து பத்தேட்டில் முத்து மாரியம்மன் கோயில் வரும். இந்நேரம் கோயில் பூட்டி இருக்கும். அடுத்து சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளிக்கூடம் ஒன்று வரும். அதைத் தாண்டினால் வெறும் பொட்டல்தான், கொஞ்ச தூரத்துக்கு வீடுகளே இருக்காது.

அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம். சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக் குஞ்சைக் காணோம் பள்ளி மைதானத்தில், மட்டமத்யானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போல
புத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்களாக்கும் தன்னைப் போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலமாக யோசித்துக் கொண்டு சாலையின் வலமும் இடமுமாகப் பார்த்துக்
கொண்டிருந்தாள்.

தூரத்தே ஒரு லாரி தவிர்த்து வேறு எந்த அரவத்தையும் காணோம் சாலை நெடுக..

கூப்பிடு தூரத்தில் புளியமரம், சுற்றுப் புறம் பெருத்த அமைதியில் உறைந்திருந்தது. வெயிலில் உறங்கும் பாவனையில் மரங்களின் இலைகள் கூட அசையக் காணோம். புளிய மரம் நெருங்க நெருங்க கிளைகளில் காய்ந்து சருகாகிப் போன செவ்வந்தி மாலைகள் கண்ணுக்குப் புலனாகின. இசக்கிக்கு படைத்திருக்க கூடும் யாரோ! உடைந்த பாட்டில்கள் ஒரு பக்கம் ஓரமாகக் கிடந்தன. இன்னும் கொஞ்சம் நெருங்க தண்டில் அடிக்கப் பட்டிருந்த ஆணிகள் கண்ணில் அறைந்தன. ஆணிகளைக் கண்டால் உள்ளபடிக்கு பயம் இருக்குமிடத்தை விட்டு பெருங்கொண்டதாய் எழுந்து ஆட ஆரம்பித்து விடுகிறது. என்னவோ ஆணி தன் உச்சந்தலையிலேயே அடித்தாற்போல.

சாலை விதிக்கொப்ப இடப்பக்கமாகவே சென்று கொண்டிருந்த ஜானா என்னவோ புளிய மரத்தின் கண்ணில் மண்ணைத் தூவிய பாவனையில் பதுங்கிப் பதுங்கி வலப்புறத்திற்கு மாறிக் கொண்டாள். வலப்புறத்து ரோட்டோரோம் ஒரு வற்றிப் போன ஓடை உண்டு, சில நேரங்களில் ஆடு மாடுகள் நாய்கள் அங்கு ஒதுங்கும். அதனருகே ஏதோ ஒரு தண்ணீர்த்திட்டத்தின் கீழ் பதிக்கப்படவேண்டிய பெரிய குழாய்கள் கிடந்தன. பேய் பயத்திலும் பெரிய பயமாக இப்போது நாய் பயம் வேறு. தெரு நாய்கள் பெருத்துப் போன நாட்கள் அவை. ஜானா அந்த ஓடை விளிம்பு வரை போகாமல் அதை ஒட்டிக்கொண்டே தன் வீட்டைப் பார்த்து சலனத்தோடு நடக்கையில் சலனமே இல்லாமல்தான் ஓடும் வெயிலும் காய்ந்து கொண்டிருந்தன.

வியர்த்து வழிந்த முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு எட்டு குயர், பத்து குயர் நோட்டுகளும் புத்தகங்களும் திமிறிய தன் பையை திணறலுடன் தோள் மாற்றிப் போட ஒரு நிமிடம் நின்றவள் தனக்குப் பின்புறமிருந்து முன்னோக்கி நீண்ட பெரிய நிழலைக் கண்டு சன்ன விதிர்ப்புடன் திடுக்கிட்டுப் போனாள்.

ஐயோ பேய்தான் வந்துடுச்சா..! கழுத்தின் ஓம் சக்தி டாலரை கை இருக்கப் பற்றிக் கொள்ள கண்களை இருக்க மூடிக் கொண்டு,

“ஓம் சக்தி பரா சக்தி
ஓம் சக்தி பரா சக்தி ”

என்று முனு முணுத்துக் கொண்டே அழாக்குறையாக ஆணி அடித்தாற்போல அசையாது நின்றவள் இமைகளின் மேல் நிழல்நீங்கி வெள்ளை வெயில் சுடவும் மீண்டும் கண்ணைத் திறந்தாள் பேயும் முனியும்தான் உள்ளே சதா எட்டி எட்டிப் பார்த்து அரட்டிக் கொண்டிருக்கின்றனவே. ஆனால் அந்த நிழல் பேயுமில்லை.. முனியுமில்லை. பக்கத்து கிளப்கடையின் சொந்தக்காரி அந்த சிவத்தம்மாவின் கருத்த புருஷன்தான் ஜானாவை தாண்டிக் கொண்டு ரோட்டில் போய்க் கொண்டிருந்தான். போன மூச்சு திரும்பி வந்தது. வீட்டுக்குத்தான் போகிறான் போலும் .இந்த ஆளைத் தொடர்ந்து போனால் போதும் வீடு வரை. அப்பாடா என நிம்மதி பெருமூச்சுடன் அவன் பின்னே நடையை எட்டிப் போடப்போகையில் பின்னால் மறுபடி கொலுசுச் சத்தம்.

ஏதடா துன்பம் என்றெண்ணும் முன் ஓடைப்புறத்து குழாய் ஒன்றில் இருந்து நைலக்ஸ் சேலை இழுத்து விட்டுக் கொண்டவளாய் பெட்டிக் கடை மீனாட்சி ஜானாவுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடி இனி பயமே இல்லை. ஒற்றைக்கு ரெண்டு பேர் துணை கிடைத்த பின் என்ன பயம்? முன்னால் போய்க்கொண்டிருந்த கருப்பன் ஒரு நிமிஷம் திரும்பி ஜானாவைப் பார்த்து சிரித்தான். பதிலுக்கு ஜானாவும் சிரித்து வைத்தாள். ஒரு வழியாய் வீடு வந்தது .

புத்தகப் பையை மூலையில் கடாசி விட்டு ஓட்டமாய் போய் அம்மாவிடம் தான் புளிய மரத்தைக் கடக்கப் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னால் தான் மனசாறும் போலிருந்தது அவளுக்கு.

துவைக்கும் கல் மேடையில் சாய்ந்து கொண்டு அம்மா சோப்பு போட போடப் நுரைக்குமிழிகளை கிள்ளிக் கிள்ளி உடைத்துக்கொண்டே இவள் சொல்லச் சொல்ல சன்னப் புன்னகையோடு கேட்டுக் கொண்டே வந்த அம்மா கடைசியில் கருப்பனையும் மீனாட்சியையும் பற்றிச் சொல்லும் போதுமட்டும் களுக்கென சிரித்து;

“ம்ம்…அப்போ நிஜப்பேய்க கூட பயமில்லாம நடந்து வந்தன்னு சொல்லு ” என்றவாறு பிழிந்த துணிகளை உலர்த்த கொடிப் பக்கமாக நகர்ந்தாள் .

“நிஜப் பேய்களா.. ஏம்மா?” ஜானாவின் முதிராத குழந்தை முகம் கேள்வியில் அம்மா யோசனையுடன் , ”அதொண்ணுமில்லை பாட்டி கேப்பமாவுச் சீடை பண்ணிருக்கா போய்த் தின்னுட்டு கண்ணுக்கு மருந்து வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாக்கு போனப் போடு போ.” என்று பிளாஸ்டிக் வாளியுடன் கிணற்றுப் பக்கம் குளிக்க தண்ணீர் இறைக்கப் போய் விட்டாள்.

அன்றைக்கு அமாவாசை. சிவத்தம்மாள் வழக்கம் போல் புளிய மரத்தில் ஆணி அடிக்கக் கிளம்பிக் கொண்டிருகிறாளென உடுக்கை சத்தம் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தது ஊருக்கும் ஜனாவுக்கும்.

கதையாசிரியர்: கார்த்திகா வாசுதேவன்
நன்றி ;சிறுகதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அமானுஷியக்கதைகள் Empty Re: அமானுஷியக்கதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Aug 22, 2014 10:58 am

அருமையான கதை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அமானுஷியக்கதைகள் Empty Re: அமானுஷியக்கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum