தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்

2 posters

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 11:17 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

4. தத்துவம்
என்றைக்கும் மாறாமல் நிற்கும் உண்மைகளே தத்துவங்கள் எனப்படுகின்றன. அவற்றை நாம் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். ஆயினும் உண்மைகளைத் தள்ளிவிட முடியாது. அவைகள் கசப்பாகக் கூட இருக்கலாம். அவைகளைப் புரிந்து கொண்டு செயற்பட்டோமானால் வாழ்வுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். அத்தகைய கருத்துக்களைப் பல இடங்களில் பலபடியாகப் பாடியுள்ளார் கவிஞர் வைரமுத்து அவர்கள்.
ஒரு மலர் மலராவதற்கு முன் கடந்து வந்த பல பருவங்களையும் காம்பாகிய ஆதாரத்தைப் பற்றியே வளர்ந்து வந்தது. ஆனால் மலர்ந்த பின் அம்மலர்கள் காம்பிலிருந்து விலகி விடுகின்றன. மனித வாழ்க்கை இன்று அப்படித் தானே இருக்கிறது, வளர்ந்து விட்ட பின் அதற்கு ஆதாரமாக இருப்பவர்களை மறந்து விடுகிறார்களே.
கள்வடியும் பூக்கள் தங்கள்
காம்பை மறக்கும். (1 - 3)
சைவ சித்தாந்தம் உள்பொருள்களாக மூன்றைச் சொல்லும். அவை பதி, பசு, பாசம் எனப்படும். பதி என்பது இறைவன், பசு என்பது ஆன்மா, பாசம் என்பது ஆன்மாவைப் பற்றி இருக்கும் மலர்களின் தொகுதி. அவை ஆணவம், கன்மம், மாயை என முன்றாக விரையும். இவற்றுள் மாயை என்பது தூமாயை, தூவாமாயை என மேலும் விரியும். ஆகவே உள் பொருள்கள் இந்த ஆறு மட்டுமே. முன்னர்க்கூறிய பதி, பசு, பாசம் என்பவைகளோடு ஞானம் தொடர்பு படுகிறது. பதியின் அறிவு முழுமையானது. அது அறிவு மயமான சோதி, பதியைப் பற்றி நின்று அறிகின்ற அறிவு, பதிஞானம். அதே போல பாசத்தால் கண்டுண்ட ஆன்மா அந்நிலையில் அறிகின்ற அறிவு குறைபாடு உடையது. அதுவே பசுஞானம் எனப்படுகிறது. இனி இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டுப் பாசம் எனப்படுவது வெறும் ஜடம். அதற்கு அறியும் ஆற்றல் இல்லை. அந்நிலையில் கீழ்ப்பட்டுப்போன அறிவுரையே பாசஞானம் என்பர். இம்மூன்று ஞானங்கள் உள்ளன என்பதைக் கவிஞர் எடுத்துக்காட்டுவதன் மூலம் அவர் சைவ சித்தாந்தத்தில் பயிற்சி உடையவர் எனத் தெரிகிறது.
வீரம் ஒன்று மானம் ரெண்டு ஞானம் மூன்று
(1 - 21)
உள்பொருளாகச் சொல்லப்பட்ட மூன்றில், பாசம் என்பதை ஆணவம், கன்மம், மாயை என மூன்றாக விரித்துப் பார்த்தோம். அவற்றுள் கன்மம் என்பது கடந்த பிறவிகளில் நாம் செய்த நல்வினை; தீவினை ஆகிய இருவினைகளின் பயன் பிறவிதோறும் நம்மைத் தொடர்ந்து நின்று துய்க்கச் செய்வதாகும். அதையே கவிஞர் பாவத்திற்குச் சம்பளம் வட்டியுடன் தரப்படும் என்று கூறுகிறார்.
பாவத்திற்குச் சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய். (1 - 22)
இவ்வுலக வாழ்வில் எல்லாவற்றையும் நிலையானதாக நினைக்கும் மாய உணர்வு நமக்கு உண்டு. நிலையில்லாதவற்றை நிலைபெற்றனவாகக் கருதுகிறோம். எனில் நிலையாக இருப்பது அன்பு ஒன்று தான். அன்பு என்பது தான் சிவம். ஏனெனில் அவன் உயிர்கள் மாட்டு அன்பு மிகவுடையவன். இதைத்தான் கவிஞர் குறிப்பால் உணர்த்துகிறார்.
கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தால்
வாழ்வில் அன்பே மிஞ்சம் (1 - 45)
இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என நிலையாமைத் தத்துவத்தை மூன்றாகச் சான்றோர் கூறுவர். பழந்தமிழகத்தில் மன்னர்கள் வெற்றி பெற்று மமதை பெறும் போது புலவரிகள் இந்நிலையாமைகளை எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தினர். இதுவெல்லாம் பழங்கதையாகி விட்ட போதிலும், நம் கவிஞர் யாக்கை நிலையாமையை எடுத்துப் பேசுகிறார்.
இது என்ன மேடை
மரணத்தின் வாடை
இவன் தேகம் நாளை
கிழிகின்ற ஓலை. (1 - 55)
இதையே வேறொரு பாடலில் சற்றே மாற்றிப் பாடுவார். முதுமை உறுதியாக ஒரு நாள் வந்துவிடும். இரண்டு கால்களால் ஆட்டம் போடுகின்ற நாம் மூன்றாவது காலைத் துணைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். இது உதிர்வதற்கு முன் நிலைதானே.
முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும். (1 - 58)
இப்பாடலில் கவிஞர் பயன்படுத்தியிருக்கும் ‘தீண்டும்’ என்ற சொல்லே நல்ல பொருளைத் தருவதில்லையே.
மனித வாழ்க்கையை நீர்மேல் குமிழியாகக் கூறுவது மிகப் பொருத்தமானது. நீர்க்குமிழ் நீரலையில் அலைந்தலைந்து கரையில் வந்து மோதிய போது உலகைத் துறக்கிறதே. அது போலத்தான் மனித வாழ்க்கை. அவனுக்கு எல்லை ஒரு கரை; கரைந்து விடுகிறான்.
அலையில் குமிழி அலைகின்றதே - அது
கரையில் வந்து கலைகின்றதே. (1 - 91)
அடுப்பாங்கரையில் தான் அமைதி தொடங்குகிறது. வயிறு நிறையாத போது, அதுவும் தனிமானத்தோடு நிறையாத போது வயிற்றில் எழும் புரட்சித் தீ நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது. அடுப்பாங்கரையில் - சமையல் கட்டில் அமைதியானள போக்கு இல்லை என்றால் அது படுக்கையறைக் கட்டிரைப் பாழாக்கி விடுகிறது.
அடுப்பான் கரைகள் சரியாய் இருந்தால்
படுக்கை அறைகள் சரியாகும்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
படுக்கை அறையோ இரண்டாகும். (1 - 102)
உலக வாழ்வு என்பது ஒரு நாடகம். அந்த மேடையில் நாம் வருகிறோம், போகிறோம். உறங்குவது போல இறப்பதும், உறங்கி விழிப்பது போலப் பிறப்பதும் என்று வள்ளுவன் கூறுவது போல வாழ்வின் முடிவு முடிவன்று. அது மற்றொன்றின் தொடக்கம் ஆகும். தொடங்குவதும் முடிந்து தானே ஆக வேண்டும். அலையில் அலையும் நீர்க்குமிழ் மனிதன் என்பது தெரிந்து கொண்டபின் ஏன் கலங்க வேண்டும்?
உலக வாழ்க்கை நடனம் - நீ
ஒப்புக்கொண்ட பயணம் - அது
முடியும்போது தொடங்கும் - நீ
தொடங்கும்போது முடியும்.
மனிதன் தினமும் அலையில் அலையும் குமிழி
தெரியும் தெிரிந்தும் மனமே கலங்காதிரு நீ.
(1 - 103)
நம்பிக்கை ஒன்றை மட்டுமே அடிப்படையாக வாழ்ந்து கொண்டு வருகிறான் மனிதன். மரணம் என்பது மனிதனின் தலைக்கு மேல் நின்று கொண்டே இருக்கிறது. ‘தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு, சுழிமாறிப் போனானம் போச்சு’ எனச் சித்தர்கள் பாடுவதும் இதைத் தானே. ஆனால் மனிதன் செய்கின்ற சதிகளுக்கு அளவில்லையே. புதைப்பதெல்லாம் மீண்டும் முளைப்பதற்காக விதைப்பது என்பதை மனிதன் ஏன் அறியாமல் இருக்கிறான்? நமக்கு மீறிய ஆற்றல் ஒன்று யாரும் அறியாமல் சதி செய்யும்போது சதி செய்பவன் தப்பிப்பதென்பது நடக்கக் கூடிய செயலா?
மரணத்தை முதுகில்
சுமக்கின்ற மனிதா
சதிகள் நூறு செய்வாய்
புதைப்பது கூட
விதைப்பது ஆகும்
முளைத்தால் என்ன செய்வாய்?
அட விதி ஒரு சதி செய்யும்
திரை மறைவாய். (1 - 118)
நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறு ஒன்று நினைக்குமாமே. நாம் நினைப்பது போல எல்லாம் நடந்துவிட்டால் இந்த மனிதனைப் பின் கையால் பிடிக்க முடியாது. இப்போதைய நிலையிலேயே மனிதன் அளவின்றி முறையின்றி ஆட்டம் போகிறான். அவன் நினைப்பதெல்லாம் நினைத்தபடி நடந்துவிட்டால் இந்த உலகம் நரகத்தில் மூழ்கிவிடும். பிறந்தது முதல் இறக்கின்ற வரையில் மனிதன் கட்டுத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவனே. இதை உணர்ந்து நியதியை அடியொட்டி வாழ்பவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
நினைப்பது வேறு
நடப்பது வேறு
இது தான் உலக நியதி
கருவறை தொடங்கிக்
கல்லறை வரைக்கும்
மனிதன் ஆயுள் கைதி
இதை உணர்ந்தவன் ஜெயிப்பது
மிக உறுதி. (1 - 116)
இம்மண்ணில் தோன்றிய அனைத்துமே ஏதோ ஒரு வகையில் பயன்கொடுத்தே மறைகிறது. பயனற்றதாகக் கருதும் கந்தல் துணியும் திரியாகத் தன் வாழ்வைத் தியாகம் செய்யும். அறுத்து எறிந்த கோரைப் புல் கூடக் காய்ந்து மனிதனுக்குப் பாயாக மாறிப் பயணம் செய்கிறது. இந்த மனிதனுக்கு உரிய நியாயங்கள் மட்டும் வேறு வேறாகவே இருக்கிறது. எல்லாவற்றையும் தாங்கி ஆதரவளிக்க வேண்டிய மனிதன் தன் கடமையிலிருந்து தவறிவிட்டால், ஆதரவு அளிக்கப்பட வேண்டியவர்கள் நிலை என்று கவிஞர் கேட்பது அவர் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து எழுவதாகும்.
கிழிஞ்சாலும் சாயச்சேல விளக்குக்குத் திரியாகும்
அறுத்தாலும் கோரப் புல்லு அழகான பாயாகும்
மனுஷநாதி நியாயம் மட்டும் வேறு வேறு
சொம தாங்கி மண்ணுல சாஞ்சாத் தாங்கவதாரு? (1 - 142)
இவ்வுலகின் உறவு, பந்த பாசம் என்பவை எல்லாம் வெறும் வெளிவேடமாகத் தானே இருக்கின்றன. நீர் வற்றிய குளத்திலிருக்கும் பறவைகள் பறந்தோடி மறைகின்றன. அப்படித் தான் மனிதனும் பயன் குறைந்தால் மறைந்து ஓடிப் போகின்ற நன்றி கெட்ட பிறவி என்பதை கவிஞர் உள்ளத்தில் உறைக்குமாறு -- கன்னத்தில் அறைந்தது போல எடுத்துக்காட்டுகிறார்.
தண்ணி உள்ளவரைக்கும் கொக்கு இருக்கும்
கொளம் வத்திப்போனாக் கொக்கு பறக்கும்
ஒறவெல்லாம் பகல் மோசம்
அடிபோடி எல்லாம் வேஷம். (1 - 142)
இன்றைய சமதாய உறவு இப்படித்தானே இருக்கிறது.
இம்மனிதக் கூட்டத்துக்குக் கவிஞர் நல்ல அறிவுரையை வழங்குகிறார். வாழ்க்கை என்பது சில ஆண்டுகளே நடக்கும் நாடகம். எனவே கானல் நீரில் படகு செலுத்தும் கற்பனைத் துன்பத்தில் உழலும் மனிதனே நீ சில நொடிகளாவது உள்ளம் என்னும் கரையைத் தேடி வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
கானல் அலைகளிலே
போகும் படகுகளே
வாழ்ககை இங்கே சில வருஷம்
கரையைத் தேடுங்களே. (1 - 153)
‘வானவில்லைப் போல மாயத்தோற்றம் கொண்ட வாழ்க்கையை வாழப் பிறந்து வாழ்வெனும் சிறு குமிழிக்குள் வசிக்க வந்த மனிதனே, விதியினை வென்றதாக எந்தச் சாதகமாவது இருந்ததுண்டா? இனி வருவதும் ஆகுமா? மரணத்துக்கு மரணம் என்பது இல்லை. ஏன்? மரணத்தக்கு மரணம் இல்லாவிட்டால் இங்குத் துன்பங்கள் மட்டுமே நிறைந்து நிற்கும்’ எனக் கவிஞர் கூறுவது அவரை ஒரு பழுத்த பழமாகவே காட்டுகிறது.
வானவில் நாடகம் நடத்த வந்தோம்
வாழ்வெனும் குமிழிக்குள் வசிக்க வந்தோம்.
விதியினை வெல்லும் பிள்ளை
ஜாதகம் எங்கும் இல்லை
சாவு ஏன் சாவதில்லை.
தெரிந்தால் சொல்லுங்களே. (1 - 153)
விதியின் மீது கவிஞர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை இப்பாடல் காட்டுகிறதோ?
இலைகளின் மீது அழகுற அமைந்து ஜாலம் செய்யும் பனித்துளி உருண்டு விழுந்து மண்ணிலே மறைந்து போகிறது. அவை தங்கிய இலைகளும் கூடப் பழுத்தபின் உதிர்ந்து அதே மண்ணில் மறைந்து போகின்றனவே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீழ்ந்து கொண்டிருக்கும் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்தப் பூமி அவற்றை எங்கே மறைந்து மாய வேலையைச் செய்கிறது? காலம் என்பதொன்று அவற்றையெல்லாம் அழிந்து விளையாடுகிறதா? ‘தோன்றிய எல்லாம் அழியும்’ என்ற சைவ சிந்தாந்தத்தைத் தான் கவிஞர் பாமரனுக்கு இவ்வாறு புரிய வைக்கிறார்.
இலைகளின் பனித்துளி உருண்டு விழும்
இலைகளும் பழுத்தபின் உதிர்ந்து விடும்
பூமியே மாய வேலை
பொய்களின் பாடசாலை
காலமே என்ன லீலை?
தெரிந்தால் சொல்லுங்களே. (1 - 153)
இங்கு எல்லாமே வேடந்தான் என்று கூறிய கவிஞர் சொந்தங்கள் என்பவைகள் கலைந்தோடும் பகல் மேகங்கள் போன்றவைகளே என்பதோடு மட்டுமல்லாமல், உலகமேடையில் நடிப்பவர்கள் முகங்கள் எல்லாம் பொய்யான வைகளே. அவற்றில் உண்மையைக் காண முடிவதில்லை -- என வேதனைப்படகிறார்.
இங்கு நாம் காணும் பாசம்
எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும்
பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள்
எல்லாம் பொய் முகங்கள். (1 - 172)
ஒளிதந்து இருளை விரட்டும் விளக்கின் அடியிலே வட்டம் போட்டு நிற்கிறது. அப்படியானால் மேலே ஒரு முகம், கீழே ஒரு முகம், விளக்கக்கு இரண்டு முகங்கள் தான் உள்ளன. ஆனால் மனிதர்க்கு உரிய முகங்களை அளக்க முடியவதில்லையே.
எரிகின்ற தீபம்
ஒளிதரும் போதும்
விளக்கின் அடியில்
இருள் வட்டம் போடும்
தீபத்திற்கே ரெண்டு முகங்கள்
மனிதர்க்கிங்கே எத்தனையோ? (1 - 172)
மனிதனின் பொய் வாழ்க்கை, கவிஞரின் உள்ளத்தை ஊடுருவித் தாக்கயிருக்கிறது எனபதை அறிய முடிகிறது.
இன்பமும் துன்பமும் இங்கே ஒன்றுதானே. ஏனோ மனிதன் இன்பத்தைத் துன்பமாகவும் துன்பத்தை இன்பமாகவும் எண்ணி இறுதியில் துன்பத்தையே சார்கிறான். இங்கே பிறப்பையும் சாவையும் ஒன்றாகக் கருதினால், இன்பத்தையும் துன்பத்தையும் வேறுபட்டவையாகக் கருதாமல் இருந்தால் சோகத்துக்கு இங்கே இடமில்லையே. இவ்வாறு கவிஞர் கூறும்போது ‘இடும்பைக்கு இடும்பை படுப்பவர்களாக’ இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
கருவறை கூடக்
கல்லறை தானே
கல்லறை கூடக்
கருவறை தானே
வாழ்வும் சாவும் ஒன்றே என்றால்
சோகம் இங்கே வாராது (1 - 172)
வசதியோடு வாழும் போது கூட்டம் போட்டுக் கலாவிக் கும்மாளம் போட்டவர்கள் சாவில் பங்கு கொள்ள வருவதில்லையே. எனவே வாழும் வாழ்க்கை வானவில்லைப் போல மயக்கம் தருவது. அது நிலையானது அன்று என்பதை நாம் உணர்ந்து கொண்டால் மனிதன் பற்று என்னும் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான் என்பதைக் கவிஞர் குறிப்பால் உணர்த்துகிறார்.
வாழும்போது குழும் சுற்றம்
சாவில் வந்து சேராது
வந்து வாழ்ந்த வாழ்க்கையே
வானவில்லைப் போன்றது. (1 - 172)
மனிதன் பிறக்கும் போதே பெயர் வைத்துக் கொண்டா பிறக்கிறான்? இறக்கும்போது பெயரை விட்டுவிட்டுத் தானே போகிறான். தோற்றமும் முடிவும் ஒரே மாதிரி -- ஒன்றுமில்லாத நிலை. இடையில் அவன் ஆடுகின்ற அட்டம் - அப்பப்பா நினைக்கும் போதே மயக்கம் வருகிறது. இதென்ன அறியாமை?
பிறக்கும் போதும் பேரில்லை
இறக்கும்போதும் பேரில்லை
இடையில் தானே குழப்பங்கள்
வாழ்க்கையோடு வழக்குகள். (1 - 179)
சில இழி பிறவிகள், காற்றடித்த போது கோபுரத் கலசத்தில் ஏறிக் கொள்ளும் எச்சில் இலைகள் போல, திடீரென உயர்ந்த இடத்துக்குப் போய் விடுகிறார்கள். எங்கே இருந்தாலும் எச்சில் இலை, இலை தானே. ஆனால் அதை அவை உணர்வதில்லை. இதே கருத்தைத் தான் கவிஞர் அழுக்கு எங்கே இருந்தாலும் அழுக்குத் தான் என்று கூறுவார்.
கோவணத்தில் இருந்த பொழுதும்
கோபுரத்தில் இருந்த பொழுதும்
அதுக்கொரு மதிப்பு இல்லை அழுக்கு அழுக்குத்
தான்.
(1 - 196)
பிறத்தல் என்ற சொல்லில் கூட, பகரம் நீங்க இறத்தல் தானே நிற்கிறது. இது சொல்லில் மட்டும் அல்லாமல் வாழ்விலும் அப்படித்தானே இருக்கிறது. ஆசை, ஆணவம், உறவுகள் என்பதெல்லாமே பொய்யாகப் போகின்ற வாழ்வில் பிறவி பெற்றவர்கள் மட்டும் எப்படி நிலைத்த நிற்கும்? இந்த உடம்போடு பிறந்துவிட்ட பின் வாழ்க்கை முழுவதும் கனவுகளோடு தானே கழிக்கிறோம். ஆகவே இவ்வுடம்பைக் கனவுகளில் இருப்பிடம் என்றாலும் மிகையில்லை என்பதைக் கவிஞர் பேசுவார்.
பிறக்கின்ற போதே
இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய்தானே
ஆசைகள் என்ன
ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
உடம்பு என்பது
உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பைதானே. (1 - 199)
இளமை நிலையாதது என்பதைக் கவிஞர் எடுத்துக்காட்டி, கடமையை ஒழுங்காகச் செய்தில் தான் உண்மையான ஆனளந்தம் இருக்கிறது என்று உணர வைக்கிறார்.
காலங்கள் மாறும்
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
.....
கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம். (1 - 199)
பணம் என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான். பிணத்தைப் புதைப்பதற்கும் கூடப் பணமே தேவை. பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை என்று வள்ளுவன் கூடச் சொல்லியிருக்கிறானே. ஆனால் பணம் ஒன்று மட்டுமே வாழ்வாகிவிட முடியாது. எனினும் உணராத மக்கள் பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பழமொழி ஒன்றினை மாறுபடுத்தி அமைத்துக் காட்டுவார்.
பணங்காசக் கண்டபுட்டாப் புலிகூடப் புல்லைத்
தின்னும்
கலி காலமாச்சுதடி கண்மணி என் கண்மணி.
(2 - 12) மதங்களிலே ‘உலோகாயதம்’ என்றொரு பிரிவும் உண்டு. அம்மதத்தின் கடவுள், விதி என்பவற்றையெல்லாம் நம்புவதில்லை. கண்ணால் கண்டதைத் தான் உண்மை எனச் சத்தியப் பிரமாணம் கொள்வார்கள். நேற்று என்பதும் நாளை என்பதும் அவர்களுக்கு இல்லை. இன்றைக்கு துய்ப்பதே உண்மை எனக் கூறுவர். அந்தக் கொள்கையைக் கவிஞர் எடுத்துக் காட்டுகிறார்.
நேற்று என்பது ஏட்டில் உள்ளது
நாளை என்பதும் பொய்யடா
இன்று ஒன்றே மெய்யடா. (2 - 21)
அவர்கள் மீது அனுதாபப்படத் தான் வேண்டும்.
சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் கன்மம் என்ற இருவினைப் பயன்தான் நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைகிறது. பிறந்தவன் இருவினைகளை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே போகிறான். அவனுக்கு விடிவு ஏது? இதையே கவிஞர் விதிக்குக் கரை இல்லை என்பார். எல்லையே இல்லாதது தானே விதி.
நதியோடு போனால் கரை உண்டு கண்ணே
விதியோடு போனால் கரை ஏது? (2 - 29)
ஆகவே தான் மணிவாசகரும் ‘தாவர சங்கமத்துள் எல்லாம் பிறப்பும் பிறந்தினைத்தேன்’ என்பார். அப்படியும் பிறவி அறுவது இல்லையே.
மனிதன் மனிதனாக வாழ வேண்டும். அவன் தேவனாகக் கூட மாறத் தேவையில்லை. அன்புடையவர்கள் தம் எலும்பு கூடப் பிறருக்கு உரிமையாகுமாறு வாழ்வார்கள் என்று வள்ளுவன் கூறவானே. ஒரு புறாவைக் காப்பதற்காகத் தன்னையே அளிக்க முன் வந்த தமிழ் மன்னனை நாம் அறிந்துள்ளோம். அன்பு ஒன்றே வாழ்க்கை, அதை உடையவனே மனிதன்.
பிறருக்காகக் கண்ணீரும்
பிறருக்காகச் செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே
மனிதன்! மனிதன்! மனிதன்! (2 - 36)
ஆனால் மனிதன் எனப்படுபவன் பிற உயிரினங்களின் செந்நீரையும் தசைகளையும் ஏன் எலும்பைக் கூட விட்டு வைப்பதில்லையே.
ஒரு பெண்ணுக்குச் சரியான காவல் கணவன் தான். கணவன் தான் ஒரு உறவு அமைந்துவிட்டால் மேற்கொண்டு கேலிக்கு இடமில்லாமல் போய்விடும்.
கணவன் எந்தன் வேலியே
இனிமேல் இல்லை கேலியே. (2 - 50)
இளமை நிலைப்பதில்லை, உண்மை தான். இளமை கழிந்து பின்னும் ஆசை என்பது மாறுவது இல்லையே. பல்லெல்லாம் தேய்ந்து போய்விட்ட மாடு வைக்கோற் போரிலே தலையைப் புதைத்துக் கொள்வது போல வயதான நிலையிலும் ஆசைப்படுகிறார்களே என்று கவிஞர் வருந்துகிறார்.
இளமைக் காலம் எங்கே?
என்று திரும்பும் இங்கே?
.........
மீசை கொஞ்சம் வெள்ளை
வேறு ஒன்றும் இல்லை
அந்தக் காலப் பிள்ளை
ஆசைதீரவில்லை. (2 - 52)
தன் தாயை இழந்துவிட்ட ஒருவன் தாங்கமாட்டாத சோகத்தில் ஆழ்கிறான். ஆனால் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை. பாலூட்டி மகிழ்ந்த அன்னைக்கு, அரிசிச் சோற்றை வக்கனையாகச் சமைத்துப் போட்ட அன்னைக்குப் பாலூற்றும் சடங்கையும் வாய்க்கரிசி போடும் சடங்கையும் மட்டும் தானே ஒருவன் செய்ய இயலும். அருள் கைவரப் பெற்ற பட்டினத்தடிகள் கூடத் தாய்க்கு அரிசியிட்டு ‘அள்ளியிடுவதரிசியோ’ என வருந்தினாரேயல்லாமல் அன்னைக்கு மீண்டும் உயிரளிக்கவில்லையே.
உயிர் தந்த தேவிக்கு
உயிர் இல்லையோ?
பாலூட்டிப் பாத்தியே
பாலூத்தலாமோ?
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன்
என்னை நானே நொந்தேன். (2 - 53)
‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரம். நாம் செய்த இருவினையின் பயனை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதில் விதி விலக்கு என்பதற்கு இடமே இல்லை. ‘மன்னிப்பு’ என்பது தமிழ்ச் சொல்லே இல்லை. ஆகவே தமிழர் தம் மதமாகிய சைவசித்தாந்தம் சொல்லுவது போல, ஒருவனின் வினைப் பயனை அனுபவித்தே ஆக வேண்டும். மன்னிப்பு என்பதற்கு இடமே இல்லை. இந்தத் தத்தவத்தைத் தான் கவிஞர் உவமையோடு பொருத்தி அழகாகச் சொல்லுவார். உப்பைச் கமனப்படுத்த நீர்குடித்தே தீர வேண்டும். அதுபோலத் தப்புச் செய்தவன் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று சைவ சித்தாந்தத்தை எடுத்துப் பேசுவார்.
உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும்
தப்புச் செஞ்சவன் கம்பி எண்ணணும். (2 - 71)
உலகியலில் பெரிய பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் அழிவதற்குப் பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். பெண்கள் இல்லாமல் உலக வாழ்வை நினைத்தும் பார்க்க இயலாது. அமைதி நிலவுவதற்கும் போர் எழுவதற்கும் - சிறிய அளவிலாயிலும் பெரிய அளவிலாயிலும் -- பெண்ணே காரணமாக இருந்து வந்திருக்கின்றனர் என்று அனைவரும் அறிந்த தத்துவத்தையும் கவிஞர் எடுத்துக் காட்டுவார்.
ஆவதும் பெண்ணாலே - மனுஷன்
அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணலே - அவனே
தாழ்வதும் பெண்ணாலே. (2 - 77)
திருமணத்தில் தாலி என்பது முக்கியமான சடங்குக்கு உரிய கரு. அதனை ஆண் பெண்ணின் கழுத்தில் கட்டும்போது மூன்று முடிச்சுப் போடுவான். அவர்கள் வாழ்க்கை தொடங்குகிறது. அவளுக்குத் தாலி என்பது வேலியாக - பாதுகாப்பாக அமைகிறது. மூன்று முடிச்சு ஆறு முடிச்சாக மாறுமானால் அதாவது பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் - (கணவன் இருக்கும் போதே) -- அது அவளுக்கு பெருமை அளிக்காது. அவள் வாழ்வையே சிறுமைப்படுத்திவிடும்.
பெண்ணுக்கு தாலி எதுக்கு?
மூணு முடிச்சு வெகுமானம்
ஆறு முடிச்சு அவமானம். (2 - 80)
ஆசை என்பது துன்பத்துக்கு விதை. ‘ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்’ என்று திருமூலர் சொல்லுவாரே. சைவ சித்தாந்தம் கூறும் கன்ம வளர்ச்சிக்கு ஆசைத் தான் வேர். விட்டில் பூச்சி விளக்கில் மடிவதும், மீன் தூண்டிலில் சிக்கி மாள்வதும் ஆசையினால் தானே. இதைத்தான் கவிஞர்,
புழுவுக்கு ஆசைப்பட்டப் போகும் மீனே!
தூண்டியிலே மாட்டிக்கிட்டா சோகம் தானே?
(2 - 80)
என்று பாடுவார்.
இந்த வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்துவன மூன்றே மூன்று தாம் என்று அறுதியிட்டுச் சொல்லி விட்டார் கவிஞர். வீடு மனைவி மக்கள் மாயையான இவ்வுறவையே நிலை என்று நினைப்பதனால் தானே இத்துன்பம்.
வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல். (2 - 93)
பல ஆண்டுகளாக இங்குப் பலரும் ஓடி ஓடி உழைத்தார்கள். என்னென்னவோ ஈட்டினார்கள். எப்படி எப்படியோ ஆட்டம் போட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து முடித்த போது அவன் எடுத்துச் செல்ல வைத்திருந்தான் - ஒன்றுமில்லையே.
வாழ்ந்து முடிச்சவன் கட்டிக் கழிக்சாக்
கொண்டு போக இங்கு மிச்சமில்லை. (2 - 112)
எதையும் கொண்டு போக முடியாது என்பது அனைவரும் அறிந்த தத்துவம் தானே.
ஆண்மையும் பெண்மையும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கும். இது தான் இயற்கை நியதி. ஆனால் ஆணுக்குள் தான் பெண் அடங்கும் என்று கூறும் போது மற்றொன்றை ஏன் சொல்லாமல் விட்டு வைத்தார் என்பது புரியவில்லை.
ஆண்மையில் தானே
பெண்மையடங்கும். (2 - 112)
ஆற்றிலே விடப்பட்ட ஓடங்கள் நீர்போகும் போக்கிலே போய்க் கொண்டிருப்பது போல இவ்வான்மா விதி வழி போய்க் கொண்டிருக்கும் என்பதையே கவிஞர் இங்கே வலியுறுத்துகிறார்.
நீர் வழிப் போகும் ஓடங்கள் போலே
விதி வழி போகிறேன். (2 - 15)
மீண்டும் அதே தத்தவத்தை - நீர்வழிப்படும் புனைபோல ஆருயிர் விதி வழிப்படும் என்பதை எடுத்துச் சொல்வதால் விதி வலியது என்பதை வற்புறுத்துகிறார் என்பதை அறிவோம்.
ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே. (2 - 159)
பகலென்று ஒன்று இருந்தால் இரவென்று ஒன்று இருக்கத் தானே செய்யும். இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. துன்பமே வேண்டாமென மறுத்தால் இன்பத்திற்கு இடமில்லாமலே போய்விடும்.
துன்பம் வேண்டாம் என்றால் இங்கே
யாருக்கும் இன்பங்கள் இல்லை. (2 - 167)
வாழ்வின் துன்பங்களால் துவண்டுவிட்டவன் வெற்றி பெறவே முடியாது. வேக வைத்த நெல் எங்கேணும் முளைக்குமா?
அமுத புள்ள ஜெயிக்காது
அவிச்ச நெல்லும் மொளைக்காது. (2 - 168)
எப்போதாகிலும் நல்ல வாய்ப்புகள் வந்தே தீரும். எனவே, சேர்ந்திருந்து நழுவிப் போகுமாறு விட்டு விடாதே; விழிப்பாயிரு என்பது கவிஞர் தரும் அறிவுரை.
காலம் வந்து கதவைத் தட்டும்
தூங்கிவிடாதே
காலில் வந்து புதையல் கிட்டும்
கடந்து விடாதே. (2 - 177)
எனவே நமக்கென்று ஒன்றுமில்லையே என வாளாவிருந்து விடாமல் எதிர்நீச்சல் போட வேண்டும். முட்டைக்குள்ளும் குஞ்சுக்கு இறைவன் காற்றை வைத்திருக்கிறான். எனவே முயன்றால் முடியததில்லை.
முட்டையோடு குஞ்சு
வாழக்காற்று உள்ளது.
முட்டிப்பாரு - நீயும் வாழ
வாழ்க்கையுள்ளது. (2 - 177)
அன்பு ஒன்றே நிலையானது என்பதை மீண்டும் வற்புறுத்துகிறார். பாறை போன்ற மனத்தைக் கூட அன்பு பழமாகக் கனிய வைத்து விடும். வாழ்வின் பாதையை அன்பு ஒன்றே திறந்துவிடும். அன்பே சிவமாகுமல்லவா.
பாதையை அன்பே திறந்தவிடும்
பாறையும் பழமாய்க் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும். (2 - 178)
அன்னையாகிய மண்ணின் மடியில் மறைகிறோம். உயிருக்குள் உயிர் தோன்றினாலும் அது மடிந்து தானே ஆக வேண்டும். தோன்றியவெல்லாம் ‘அழியும்’ என்னும் தத்துவத்தைக் கவிஞர் இங்கே மீண்டும் வலியுறுத்துகிறார்.
அன்னை மடியில் கண் திறந்தோம்.
மண்ணின் மடியில் கண் மறைந்தோம்.
உயிரில் உயிர்கள் ஜனனம்
ஜனனம் இருந்தால் மரணம்
இயற்கை தானடா ஏன் சரனம்? (2 - 186)
பகைவனுக்கும் அருள் காட்ட வேண்டும் என்பதே தமிழர் தம் சித்தாந்தம். அத்தெய்வ உணர்வினால் தான் தமிழன் தாழ்ந்துவிட்டானோ என்று கருதிய கவிஞர் வெறுப்புக் கொண்ட உள்ளத்தோடு புதிய தத்துவத்தையே படைக்கிறார். பகைவனை அழிப்பது தான் முறையாகும். பகைவனுக்கு அருள் காட்டுவது புழுக்களின் குணமாகும். அது துன்பத்தையே தரும் என்று பாடுவார். இந்தத் தத்துவத்தை நாம் ஒதுக்கித் தள்ளியிடுவதற்கில்லை.
ஏ... பகைவனுக்கருள்வது பிழையே
வா... பகைவனை அழிப்பது முறையே
பொறுப்பது புழுக்களின் இனமே
அழிப்பது புலிகளின் குணமே. (2 - 187)
மற்றவர்களை எப்போது புரிந்து கொள்ளலாம் என்பதற்கு ஒரு பட்டியலையே தருகிறார்.
நண்பர்களைத் துயரத்தில் கண்டு கொள்ளலாம்
நல்லவரை வறுமையிலே கண்டு கொள்ளலாம்
வஞ்சகரை வார்த்தையிலே கண்டு கொள்ளலாம்
மனைவியரை நோயினிலே கண்டு கொள்ளலாம்
உங்களை உறுதியிலே கண்டு கொள்ளலாம்
என்னை மட்டும் இறுதியிலே கண்டு கொள்ளலாம்.
வாழ்க்கையில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தத்துவங்கள் தாமே இவையெல்லாம்.
மும்மலங்களிலே ஒன்று ஆணவம் என்னும் பேரிருள். அதாவது அறியாமை. அத்தகைய அறியாமையில் இன்பத்துக்கு இடமில்லையே. அவன் தாளை வணங்குவதற்குக் கூட அவனருள் தேவையாயிற்றே. எல்லாம் அவனருளாலே என்பதை உணர்ந்து அவனிடம் சரணடைந்தவர்க்குத் துன்பமில்லை.
தானென்ற ஆத்மானின் இன்பமில்லை
சரணடைந்த ஜீவனுக்குத் துன்பமில்லை.
இவ்வுண்மையை உணர வைப்பதற்காகப் பாஞ்சாலியின் செய்தியை எடுத்துப் பேசுவார், கவிஞர். யான் எனதென்றும் செருக்கை அறுக்க வேண்டும் என்பதே கவிஞரின் கருத்து.
கவிஞர் தத்தவங்களை வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் வாரி வழங்கியிருக்கிறார். மூன்றாகப் பேசப்படும் நிலையாமை, எந்த நிலையிலும் விழிப்புடன் இருத்தல், தோன்றிய எல்லாம் அழியும், அன்பு ஒன்றே அழியாதது என்றெல்லாம் அவர் பலபடியாக எடுத்துக் காட்டியிருப்பது நம்மை வியக்க வைக்கிறது.

Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம் Empty Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 18, 2011 8:59 pm

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 3. வீரம்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 27. தொலைக்காட்சித் தொடர்கள்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 36. பெருந்திணை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum