தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்ணதாசன் எனும் காவியம்

2 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:23 pm

First topic message reminder :

சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down


கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:37 pm

காற்று அடிப்பது தெரிகிறது, ஆனால் கண்னை மூடித் திறப்பதற்குள் அது எம்மைத் தழுவி ஒரு கணநேர இன்பத்தை அளித்து விட்டு, கடந்து விடுகிறது.

எமது பருவத்தைக் கூட அத்தகைய ஒரு அவசர ஓட்டத்திற்கு ஒப்பிடுகிறார் கவியரசர் கண்ணதாசன். அது மட்டுமே காதல் எனும் அந்த இனிமையான அனுபவத்தை ஒரு தேரோட்டத்திற்கு ஈடாக்குகிறார். தேரில் ஏறி இருந்து ஒரு பயணம் போய்ப் பாருங்கள்! அதன் இனிமை புரியும். அதிலே நிற்கும் போது ஒரு இராஜ கம்பீரமும், இனிமையாக ஆடி அசைந்து எமைக் கொண்டு செல்லும் போது ஒரு இன்பக் கிளுகிளுப்பும் கிடைக்கின்றனவே அப்படிப் பட்டது தான் காதல் வயப்பட்டவருக்குக் கிடைக்கும் இன்பம் என்கிறார்.

இத்தகைய ஒரு உறவினில் தம்மை இணைத்து ஆணும் பெண்னும் மகிழ்வார்களாம், அது மட்டுமா? அந்த இணைவின் பெறும் பேறாகச் சுகம் பெறுவார்களாம். இத்தகைய ஒரு இனிமையான பந்தம் கொடுத்த இன்பம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு அதிசயம் தானே!

பாவம் காதல் வயப்பட்ட அந்த உள்ளங்களுக்குத் தெரியுமா எத்தகையதொரு வாழ்க்கையைத் தாம் எய்தப் போகிறார்கள் என்று? அதை எத்துணை லாவகமாகக் குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்.

நாளை உலகின் பாதையை இன்றே
யார் காணுவார்?

இளம் உள்ளங்கள் சந்திக்கின்றன; காதல் வயப்படுகின்றன; ஆனால் அவர்களின் காதல் வெற்றியில் முடிவதும், அப்படியே வெற்றியடைந்த காதல் தொடர்ந்து இன்பகரமான வாழ்வாக அமைவதும், அந்த இருவரது கைகளில் மட்டுமா இருக்கிறது? இல்லையே சுற்றுப்புறச் சூழல்கள், சமுதாய அழுத்தங்கள், உறவினர்களின் நோக்கு என்பன சில வெற்றி பெற்ற காதலர்களின் வாழ்வைக் கூடத் திசை திருப்பி விடுகின்றன.

அதே சமயம், எந்த வகையிலுமே வெற்றியளிக்காது என்று எண்ணிய சிலரின் வாழ்க்கை, மற்றையோர் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு அழகாக அமைந்து விடுகிறது.

இந்தக் கருத்தை என்னே அழகாகக் கவியரசரின் மேலே குறிப்பிட்ட வரிகள் விளக்கி விடுகின்றன.

வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு
இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?

மிகவும் அவதானமாக எண்ணிப்பாருங்கள் நண்பர்களே !

எமது வாழ்வில் இன்பமான நாட்கள் செல்லச் செல்ல அது செலவு போலத் தானே இருக்கிறது! உதாரண்த்திற்கு நாம் சிறுவர்களாக இருக்கும் போது, பாடசாலை நாட்களில் வரும் ஆண்டு விடுமுறையை எடுத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுகிறது, பின்பு அடுத்த விடுமுறைக்காக எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதாகவுள்ளது? அந்த நாட்களில் உங்கள் மனதில் நீங்கள் அடைந்த உணர்வுகளைத் திரும்ப ஒரு முறை இரவல் வாங்கி அனுபவித்துப் பாருங்கள். நான் சொன்ன கருத்தின் யதார்த்தம் புரியும்.

நாம் அதை செய்யப் போகிறோம், இதைச் செய்யப் போகிறோம் என்று எமக்குள்ளே பல கணக்குகளை வகுத்துக் கொள்கிறோம், அதை நோக்கி எவ்வளவு சிரத்தையாக முன்னேறினாலும் காலத்தின் அனுக்கிரகம் இன்றி அது கை கூடுவதில்லை. இதைத் தான் கவிஞர் அழகாகக் காலம் போடும் கணக்கை யாரால் காண இயலும் என்று கேட்கிறார்.

தனது இளமைக் காலம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவுடனும், இலட்சியத்துடனும் வாழ்ந்து வந்த ஒருவன் அல்லது ஒருத்தி அதற்குத் தேவையான படிப்பில் எவ்வளவு திறமையாக இருந்தாலும், வேறு காரணங்களினால் தமது கனவை நிறைவேற்ற முடியாமல் போவதை எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் கூடக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோமே!

கவியரசர் கண்ணதாசன் ஒரு இலக்கியத் தடாகம். அவரது இந்தத் தடாகத்தினுள் குதித்து மலர்ந்திருக்கும் அழகிய இலக்கிய மலர்களைக் கொய்து வாசர்களாகிய உங்களது காட்சிக்கு வைப்பதுவே எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும் !
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:38 pm

தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. ஒன்றுமே இல்லை எனும் நிலையிலிருந்து எல்லாமே இருக்கிறது எனும் நிலையைத் தன்னம்பிக்கையின் உதவியோடு ஒரு மனிதன் அடைந்து விடலாம். கவிஞரின் வெற்றியின் ரகசியம் தன்னம்பிக்கை என்று சொல்லலாம்.

கவிஞர் கண்ணதாசன் குறைகளற்ற ஒரு மனிதன் என்று கூறி விட முடியாது, ஆனால் அந்தக் குறைகளுக்கெல்லாம் ஒரு மகுடம் வைத்து மக்களின் மனதில் ஏற்றி விடக் கூடிய வல்லமை



அவரிடத்தில் இருந்தது. தன்னிடம் உள்ள குறைகளைத் தானாகவே மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி அதை முன்னுதாரணமாக்கி அதன் அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு அறிவுரை அளிக்கும் துணிச்சல் இருந்தது. மனதில் ஆழப் பதிந்த வடுக்களை பாடங்களாக்கினார், அதை அர்த்தம் பொதிந்த மதத்தின் அடிப்படையில் நோக்கினார், தனது விளக்கங்களை அள்ளி மக்களுக்கு வீசினார். அதுவே கவியரசர் கண்ணதாசனின் படைப்புக்களுக்குக் கலசமாயிற்று.

ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்கள். நடுத்தர வர்க்கத்தின் அடையாள முத்திரையான ஆண், பெண் இருவருமே உழைக்க வேண்டிய நிலைக்கு இருவரும் தள்ளப் பட்டார்கள். தனது குடும்பத்தின் தேவைகளைத் தான் தனது மனைவி பொறுப்பேற்கிறாள் என்று அறிந்திருந்தும், மனைவியின் மேல் அனைவருக்கும் இருக்கும் அன்பையும், மதிப்பையும் கண்டு பொறாமை கொள்ளும் கணவன்.

என்ன நண்பர்களே! ஞாபகம் வருகிறதா? ஒரு அருமையான திரைப்படம் "சூரியகாந்தி", முத்துராமன், ஜெயலலிதா அவர்களின் சிறப்பான நடிப்பினால் மெருகூட்டப்பட்ட படம். அதிலே அந்தக் கணவனின் மனநிலையை விளக்கும் ஒரு பாடல், சமுதாயத்திலே ஆண்கள் தான் பெண்களை விட மேலான ஒரு நிலையில் இருக்க வேண்டும் என்னும் ஒரு சட்டமாக்கப்படாத விதிமுறை தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டது. இந்த 21ம் நூற்றாண்டில் கூட இப்படிப்பட்ட ஆண்களை நாம் காணலாம். கவிஞர் கண்ணதாசனின் மனதிலே இந்தக் காட்சி எப்படி வியாபிக்கிறது என்பதை, இந்தக் காட்சிக்காக அவர் எழுதிய பாடலில் இருந்து பார்ப்போம். இது டி.எம்.எஸ். தனது கணீரென்ற குரலினால் உயிர் கொடுத்த கவிஞரின் அருமையான பாடல்களில் ஒன்று.

பாம்புக்கும், கருடனுக்கும் உள்ள உறவு உங்களுக்குத் தெரியும் தானே! பாம்பைக் கண்டால் கருடன் உயிரோடு விட்டு வைக்க மாட்டான். அதே போல் கருடன் இருக்கும் இடத்திலே பாம்பின் நிழல் கூட இருக்காது,.
இதுதான் யதார்த்தம்.

இங்கே என்ன நடக்கிறது பாம்பு போய், உலகத்தின் காவலன் பரமசிவனின் கழுத்தில் அமர்ந்து கொண்டதாம். அமர்ந்து கொண்ட பாம்பு சும்மா இருந்திருக்கலாமே! கருடனைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் பாம்பு, அந்தக் கருடனைப் பார்த்துப் புன்னகையுடன் "செளக்கியமா?" என்கிறது.

“ம் .. இரு, இரு பரமசிவன் கழுத்தில் எப்போதுமே இருந்து விடலாம் என்ற எண்ணமா? பார்த்துக் கொள்கிறேன் " என்று கறுவிக் கொள்கிறது கருடன்.

இதை அழகாக எமது கவியரசரின் வரிகளிலே பார்ப்போம்!

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்கியமா? யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே, கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.

வாழ்க்கையின் யதார்த்ததை எமது தெய்வங்களின் வடிவங்களோடு சம்மந்தப்படுத்திச் சாதாரண மனிதனுக்கும் புரியக் கூடிய வகையில் கவிஞர் பாடல் தந்திருப்பதன் வகையைப் பார்த்தீர்களா? எங்கே அடுத்த பகுதியைப் பார்ப்போம்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஒளவை சொன்னது
அது ஒளவை சொன்னது
அதில் அர்த்தமுள்ளது

உண்மை தானே! ஒரு மனிதனின் நிலை உயர்ந்திருக்கும் போது தான் தனது தலையை உயர்த்தி இந்த உலகம் பார்க்கிறது! ஆனால் அதே மனிதனின் நிலை தாழ்ந்து வந்தாலோ அவனது நிழல் கூட அவனை மிதித்துத் தான் போகிறதாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:38 pm

அருமையாக எடுத்துக் காட்டுகிறார் எங்கள் ஏழிசைக் கவிஞர். அந்தக் காட்சியில் வரும் அந்தக் கணவனின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். அதாவது அவனது மனைவியின் நிலை அவனது நிலையை விட உயர்ந்து விடுகிறது, அப்போது அவனது குடும்பத்தினரே அவன் மனவியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அந்த மனிதனின் மனதில் வேதனை பொங்குகிறது. தான் தனது நிழல் போல எண்ணியிருந்த தனது குடும்பம் கூடத் தன்னை மிதிக்கிறதே என்று ஆதங்கப் படுகிறான். அடுத்த அடி எம் கவி எவ்வகையாய் எடுத்துத் தந்திருக்கிறான்?

வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?
உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும், தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது

பாதையிலே ஓடும் வண்டி, அதன் சக்கரங்களிலே ஒன்று சிறியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். தான் போக எண்ணிய இடத்தை அந்த வண்டி அடையுமா? இல்லை அதன் பயணம் தான் ஒரு சீரான பாதையில் போக முடியுமா?

எவரும் தமது அந்தஸ்து அறிந்து பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார் இந்தக் கவிராயர். உயர்ந்த நிலையில் இருப்போர்களும், தாழ்ந்த நிலையிலிருப்போர்களும் உறவாடும் போது அங்கே நிச்சயம் அவரவர் நிலமைகளில் இருக்கும் வேறுபாடு தலை தூக்கத் தான் செய்யும். இந்த யதார்த்தத்தை அழகாக எடுத்து இயம்புகிறார் கவியரசர் கண்ணதாசன்.

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே நான்
நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என்னுள்ளம் எனைப் பார்த்துக் கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது? இது
கணவன் சொன்னது இதில் அர்த்தமுள்ளது.

நிலவு இல்லா விட்டால் வானுக்கு அழகு இல்லை. அதே போல வான் இல்லா விட்டால் நிலவு தனது அழகை எங்கே ஊர்வலமாய் எடுத்துச் செல்லப் போகிறது? இவை இரண்டும் சேர்ந்திருக்கும் போது தான் இயற்கை அழகு கொடி கட்டிப் பறக்கிறது.

அதே போலத் தான் குடும்ப வாழ்க்கையும்; கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, சமமான பங்கோடு வாழ்வதை நிலவும் வானும் சேர்ந்த போது ஜொலிக்கும் அழகிற்கு ஒப்பாக்குகிறார் எமது ஒப்பற்ற கவி.

அப்போது அந்தக் கணவன் என்ன சொல்கின்றானாம்? தனது மனவியின் வளர்ச்சி, அவள் அடையும் புகழ் தன்னைச் சிறுமைப் படுத்துகிறது என்று அவனது உள்ளமே அவனைக் கேலி செய்கின்றதாம்.

இங்கே கவிஞர் தனது கருத்துக் குவியலினுள் புதைத்து வைத்துள்ள மற்றுமோர் உன்னதக் கருத்தைப் பாருங்கள். அவர் என்ன சொல்ல விழைகிறார் என்றால், அந்தப் பெண், அதாவது இந்தக் காட்சியில் குறிப்பிடும் மனைவி அடைந்த உயர்வினால் அவள் அவளது கணவனைச் சிறுமைப்படுத்தவில்லை. அவனது உள்ளம் தான் அவனைச் சிறுமைப்படுத்துகிறதாம்.

அதாவது, தன் உள்ளமே தனக்கு எதிரி என்று சொல்கிறார்களே, அப்படியானதொரு சூழ்நிலையில் தனக்குத் தானே அவன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறானாம். இங்கே தான் அந்தப் புரிந்துணர்வு அவர்களுக்கிடையில் முற்றுப் பெறவில்லை என்பதைச் சூட்சுமமாகத் தெரிவிக்கிறார் கவியரசர்.

நண்பர்களே கண்ணதாசனைப் பற்றி ஆராயும் போது அவரது திரைப்படப் பாடல்களை எடுத்துச் சிறிது பகுப்பதன் மூலம் அந்த ற்றல் மிக்கவரின் பன்முகங்களையும் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. இத்தனை ஆயிரம் பாடல்கள், இத்தனை ஆயிரம் நிலைமகளுக்கு அவரால் வடிக்க முடிந்தது என்றால், எத்தனை ஆயிரம் அனுபவ மைல்களைக் கடந்துள்ளார் என்பது புரியவரும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:38 pm

இரண்டு அடிகளில் ஒரு பொருள் தத்துவத்தை எடுத்தியம்பும், தமிழ்ப்பெரும் இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளை எவ்வாறு எமது கவியரசர் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு வருகிறார் என்று இப்போது பார்ப்போம்.

யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்

காதல் பருவமதில் காளையும், கன்னியும் எதிர் எதிரே. கன்னி மனமதில் குடிபுகுந்த காளையினைக் கண்டுவிட்டால், அம்பு போன்ற அவள் பார்வை அவனைத் துளைத்தெடுக்க விரும்பாதா என்ன? ஆனால் கன்னியவள் கூடப் பிறந்த நாணம் எனும் விலங்கு அவளைத் தன்னிச்சை போல நடக்க விட்டு விடுமா?





அவன் அவளைப் பார்க்க, அவள் தரை பார்க்க, அவன் விண் பார்க்க, அவள் அவன் முகம் பார்க்க, காதல் பாடத்தின் அரிச்சுவடி, ஆரம்பம் அதுதானே!

கவியரசர் இக்குறளைத் திரைகானமாக்கி எமக்கு விருந்தாக்குகிறார்.

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

எத்தகைய எளிமையான விளக்கத்தின் மூலம் தமிழால் எம்மைத் தாலாட்டி, வள்ளுவனை சமுதாயத்தின் அடிமட்ட மனிதன் வரை அழைத்து வந்து விடுகிறார் கவிஞர்.

அது மட்டுமா? அதிலே கலந்திருக்கும் கருத்தைக் கவனியுங்கள். அவன் அவளைப் பார்க்கும் போது அவள் எங்கே பார்க்கின்றாள்? தமிழ் நங்கையின் தனிப்பெருஞ் சீதனமான நாணம் தலையெடுக்க அவள் வதனம் கீழ் நோக்கி, கண்கள் மண்ணைப் பார்க்கின்றனவாம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! எம்மண் பெண்களின் பெருங்குணமே மண் பார்த்து நடப்பது தான்.

அப்போது எம் ஏறு போல் பீடு நடையிடும் காளை என்ன செய்கிறான்? மெதுவாக விண்ணைப் பார்க்கிறானாம். அடடா இந்த வேளைக்காகத் தானே காத்திருந்தேன் என்று அந்தப் பூமகள் தன் உள்ளங்கவர் கள்வனைப் பார்க்கிறாளாம்.

எங்கோ அடுத்தொரு முத்து பளிச்சிடுகிறதே!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:38 pm

அழுகுணிச் சித்தர் என்பவரின் பாடல்களில் ஒன்று. வாழ்க்கையை வெறுத்து, சித்தர்களுக்கே உரிய பாடல் ஒன்றிலிருந்து எடுத்த சில வரிகளை, நமது கவிஞர் எப்படித் தமது அனுபவம் எனும் தேன் தடவி எமக்கு விருந்தளிக்கிறார் என்று பார்ப்போம்.

பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து

நெய்யூரிலே போவதற்கு வேதாந்த வீடறியேன்

வாழ்க்கையின் ரகசியத்தை அப்படியே புட்டு வைக்கிறார் சித்தர். தத்துவத்தில் மிதந்து லெளகீகத்தை ரசித்துத் தனது அனுபவங்களைச் சேர்த்த கவிஞர் சித்தர்களுக்கெல்லாம் சித்தரல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன்

உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடிபுகுந்தேன்

மண்ணூரில் விழுந்து விட்டேன்

கவிஞர் கண்ணதாசன் சித்தரின் தத்துவத்தை நம் மத்தியில் சுலபமாய் உலவ விட்டுவிட்டாரே!

ஒரு குழந்தை பிறப்பதன் முன்னால் அது தனது தந்தையினதும், தாயினதும் இரத்த அணுக்களுடன் கலந்து அவர்களது உடலில் வாழ்ந்திருக்கிறது. பின்பு கணவன், மனைவி குடும்ப உறவு முறையில் மிதந்து வருகிறதாம். அத்தோடு அதனது தாயின் கருவறையில் பத்து மாதங்கள் குடியேறி வாழ்க்கை நடத்துவதும் நியதியாகிறது. இறுதியாக இந்தப் பாழும் புவியில் வந்து விழுந்ததை அழகாக மண்ணூரில் விழுந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

இதோ என்ன? ஏதோ பளிச்சிடுகிறதே! ஓ மற்றொரு முத்தா?

ஒரு மன்னனின் கடமை என்ன? தனது நாட்டுப் பிரஜைகள் அனைவரையும் சமமாகப் பாவித்து நீதி வழங்குவதே. ஒருவனுக்குக் கை நிறையப் பொன்னை அள்ளிக் கொடுக்கும் வேந்தன், மற்றொருவனை வெறுங்கையுடன் அனுப்புவது என்னே முறை என்று தனது தோழியிடம் முறையிடுகிறாளாம் இந்தப் பூச்சூட்டும் பூவை.

முத்தொள்ளாயிரத்தின் முதற் பாடல் இதை எவ்வாறு கூறுகிறது என்று பார்ப்போமா?

மண்ணுயிர்க் காவல் தனதான அவ்வுயிருள்

என்னுயிரும் எண்ணப்படுமாயின் - என்னுயிர்க்கே

சீரொழுகு செங்கோற்ச் செழியர்க்கே தக்கதோ?

தனது உள்ளங் கவர் கள்வன் ஒரு மன்னவன். ஒரு மன்னவனானவன் தன்னுடைய மண்ணிலுள்ள உயிர் களுக்கெல்லாம் காவலன் ஆவான். அப்படியிருக்க அவன் எவ்வண்ணம் தன்னைக் காக்காது விட்டான் என்று தன் தலைவனின் மீது பொய்க் கோபம் கொண்டு தோழியிடம் வினவுகிறாள் தலைவி.

இந்தப் பாடலின் கருத்தை ரசித்த கவியரசர் கண்ணதாசன் எப்படி மக்களிடம் இந்தப் பாடலை திரை கானத்தின் மூலம் கொண்டு வருகிறார் என்று பாருங்கள்.

என்னுயிர்த் தோழி கேளொரு சேதி

இது தானோ உங்கள் மன்னவன் நீதி

தன்னுயிர் போல மன்னுயிர் காப்பான்

தலைவன் என்றாயே தோழி!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:39 pm

கையிலே கதவு அடிக்கின்றது "அம்மா!" என்கிறோம். சில விநாடிகளில் வேதனை மறைந்து விடுகிறது. ஆனால் உற்ற நண்பன் எம்மை ஏமாற்றுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் துரோகத்தனம் கொடுக்கும் வேதனை இதயத்தில் வலியாகி விடுகிறது. அதே போல உயிராக மதித்த காதலனோ அன்றிக் காதலியோ காதலையே தூக்கி எறிந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம், அப்பப்பா! அது கூட இதயத்தை ரணமாக்கி விடுகிறது.




இந்தக் காயங்கள் இதயத்தில் ஏற்படுத்திய வடுக்கள் அனுபவம் எனும் தடமாகி விடுகிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையிலே அழகுத் தமிழுடன் சேர்ந்து கவிதைகளாகவும், திரைகானங்களாகவும் கவியரசர் எமக்களித்த அற்புதப் படைப்புகள் பல.

அதே வரிசையில் இந்த வாரம் மிகவும் அருமையாகக் கவியரசரினால் தீட்டப்பட்ட பாடல் ஒன்றை எடுத்துப் பார்க்க விழைகின்றோம்.

முத்து மண்டபம் என்னும் படத்திற்காகக் கவியரசரின் கற்பனையில் உதித்து, 'டி.எம்.எஸ்.' இன் குரலில் இசைத்த இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லலாம்.

சொன்னாலும் வெட்கமடா! சொல்லா விட்டால் துக்கமடா!
வெட்கமுமில்லாமல் துக்கமுமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா!

இந்த நிலைமை தமது வாழ்க்கையில் தோன்றாதவர்களின் எண்ணிக்கையை விரல்களில் எண்ணிவிடலாம். அடடா! என்னே அழகான மனநிலை விளக்கம். அந்த ஒருவனுக்கோ, ஒருத்திக்கோ வாழ்க்கையில் நடந்தது மிகவும் வெட்ககரமான விட(ஷ)யம், அதைச் சொன்னாலோ ஒரு சாரார் எள்ளி நகையாடப் போகிறார்கள், மற்றொரு சாரார் "சொன்னேன் கேட்டியா? இப்பப் பாரு நடந்ததை" என முற்றும் அறிந்தவர் போல விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் அதற்காக அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லையே என்று நாயகன் புலம்புகிறான்.

பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழுகிறேன்

ஜயோ! அந்த மனிதனைப் பாருங்கள், அவனிடம் இருக்கும் அழகான, விலையுயர்ந்த கார் போல என்னிடம் இல்லையே? அதோ அவன் எத்தனை அழகான வீடு வைத்திருக்கிறான், என் வீட்டையும் தான் பாருங்களேன்! எனத் தினமும் தமது வாழ்க்கையில் இல்லாத பலதையும் எண்ணி ஏங்கும் மானிடரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் சாதாரண மனிதர்கள் பார்த்து ஏங்கும் சகலத்தையும் தான் பெற்று விட்டேன் என்றும், அதனை ஓர் சுமையாகவும் ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் மனதில் ஓடும் சோக நீரோட்டம் ஒரு வெள்ளமாகத் தானே இருக்க வேண்டும்.

பாய்விரித்துப் படுப்பவரும் வாய்திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை

படுப்பது எங்கே என்பது கேள்வியில்லை ஆனால் படுப்பவனின் மனதில் தெளிவு வேண்டும். தனக்கு அளிக்கப்பட்டது இவ்வளவு தான் எனும் மனப் பக்குவம் வேண்டும். அதற்காகத் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளக்கூடிய வகையில் எந்த விதமான முயற்சிகளும் எடுக்கப்படக் கூடது என்பதல்ல. ஆசைகள் நியாயமானவைகளாக இருக்குமட்டும், பேராசைகளாக மாறாத மட்டும் மனதில் பக்குவம் நிலை கொள்ளும். இதையே கவியரசர் தெளிவாகத் தனது அனுபவ ஞானத்தின் மூலம் அவிழ்த்து விடுகிறார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:39 pm

கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
குத்திவிட்டுப் புத்தனைப்போல் சத்தியமாய் வாழுதடா

இது கூட மிகவும் அருமையான உவமானமே! கிளியைப் பார்த்ததும் எமது மனதில் கனிவு பொங்குகிறது அதன் அழகில், அதன் கிள்ளை மொழியில் எமது மனதைப் பறி கொடுக்கிறோம். ஆனால் அந்தக் கிளி மெள்ள மெள்ளத் தத்தி வந்து எமது அன்புக்குப் பாத்திரமாகிவிட்டு, நாம் சிறிது கண்ணயரும் போது கொத்தி விட்டுப் பறந்து போகிறது. அப்போது எமக்குப் புரிகிறது, ஓ! இது கிளியல்ல கிளி வேஷத்தில் வந்த பாம்பு என்று. மறந்து போய்ச் சும்மா இருக்குதா? இல்லையே அதைப் பற்றி அறியாத இடத்தில் சென்று புத்த போதனை செய்து மக்கள் மனதை மயக்குகிறதாம். கொத்து வாங்கிய நாம் போய் என்ன கத்தினாலும், அந்தக் கூட்டம் என்ன, நம்பப் போகிறதா?

நண்பர்களே, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரையாவது தெரிந்திருக்குமே? இது தான் கவியரசர். எமது உள்ளங்களோடு பேசுகிறார். எமக்குப் புரிந்த மொழியில் பேசுகிறார். எமது இதயவீணையின் நரம்புகளை ஒவ்வொன்றாய்த் தட்டி விடுகிறார்.

இல்லாத மனிதருக்கு இல்லையெனும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனசு தவிக்குதடா

அதோ பாருங்கள், தெருவோரத்திலே படுக்க இடமின்றி நிலவின் வெளிச்சத்தில் ஆகாயம் எனும் கூரையின் கீழ், பூமி எனும் பஞ்சணையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறானே, அவனைப் பார்த்துப் பொறாமை கொள்கிறான் இந்த "உள்ளவன்".

‘இருப்பவன் வாழ்க்கையில் இருப்பதெல்லாமே தொல்லை’ - சத்தியமான வரிகள்

வண்ணமுத்து மண்டபமும் வைரமணிப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

கலைத்து விட்டான் போங்கள். இத்தனை அமைதியின்மைக்கா நான் இத்துணை பொருள் சேர்த்தேன்? வேண்டாமப்பா! உன்னிடம் சகலத்தையும் கொடுத்து விடுகிறேன், உன்னிடம் இருக்கும் நிம்மதியை மட்டும் எனக்குத் தா என்கிறான்.

நண்பர்களே! இங்கு கவிஞர் சொல்ல விழைவது என்ன? பணம், பதவி, அந்தஸ்து இருப்பவர் எல்லாம் நிம்மதியாக வாழ்வதும் இல்லை, கஷ்டப்பட்டவன் நிம்மதியின்றி இருப்பதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் மனமும், முயற்சியுமே காரணம். நல்லவனாக மற்றவர்க்குத் துன்பம் விளைவிக்கா வண்ணம் வாழ்வது ஒன்றே இந்த உலகில் நிச்சயமாகிறது என்கிறார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:39 pm

குழந்தை அழுகிறது. தாய் தாலாட்டுகிறாள். அப்படியே சத்தமின்றிக் குழந்தை சயனித்து விடுகிறது. அது தான் தாலாட்டின் அற்புதம். எமது இலக்கியங்களிலே, தமிழ்க் காவியங்களிலே தாலாட்டுக்குக் கொடுக்கப்பட்ட இடம் மகத்தானது. இத்தகைய தாய்மை இலக்கியத்தைக் கவியசரசரை விட யாரொருவர் அழகாக எழுதிவிட முடியும்?

அவருடைய தாலாட்டுச் சிறப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

குழந்தையையும், தெய்வத்தையையும் ஒன்றாகக் காணுபவன் கவிஞன். குழந்தை மனதில் கள்ளமில்லை, தெய்வத்தின் மனதிலும் கள்ளமில்லை. குழந்தையைக் கண்டதும் மனது பூக்கிறது. தெய்வ சந்நிதியில் நுழைந்ததும் அதே பூரிப்பில் மனம் லயிக்கிறது. இதை எமது கவியரசர் அழகாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று

மற்றொரு கவிதையில் பின்வருமாறு குழந்தையைத் தெய்வத்திற்குச் சமமாக்குகிறார்.

கைகள் வீசும் கருணை நெஞ்சில்
மறைவதே இல்லை - துன்பம்
புரிவதே இல்லை - கண்ணில்
தெய்வம் வேறு பிள்ளை வேறாய்த்
தெரிவதே இல்லை - பாசம்
அலைவதே இல்லை

கவியரசருக்குத் தாலாட்டுப் பாடுவது கற்கண்டு சாப்பிடுவது போல. இயேசு காவியத்தின் ஆரம்பத்தையே இயேசுநாதருக்குத் தாலாட்டாக்கியவர் அல்லவா?

மழலை மொழியைப் பற்றி இந்த மண்ணின் கவிமகன் என்ன கூறுகிறானாம்?

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி

ஆமாம், ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும்போது கூறும் கா, மா, என்னும் சப்தங்கள் அனைத்து மொழிக் குழந்தைகளிடத்தும் இருந்து வருகின்றன. அப்படியாயின் அந்த மொழியின் பெயரென்ன? அது தான் தெய்வ மொழி என்கிறார்.

இதோ எம் கவித்தலைவன் தெய்வத்தையே குழந்தையாக்கித் தாலாட்டுப் பாடி மகிழ்கிறாரே பாருங்கள்:

ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகிறான்
தாலேலோ

கண்ணனின் தாசன் தனது இறைவன் கண்ணபிரானுக்கே தாலாட்டுப் பாடும் அந்த அருமையான தமிழ் எமது செவிகளிலே தேனாகிறது.

இசை என்கிறார்கள், பணம், பொருள் என்கிறார்கள். இவைகளெல்லாம் ஒருவனுக்கு நித்தியமா? ஒரு குழந்தைக்கு முன்னால் இவை எம்மாத்திரம்? எங்கே, எப்படி வடிக்கிறார் இந்த உணர்ச்சி ஓட்டத்தை?

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

என்ன அழகாக வார்த்தைகளால் பின்னிய ஒரு தமிழ்த் தோரணத்தினால் தாலாட்டை அலங்கரித்திருக்கிறார் எம் கவித் தலைவன்.

ஒரு ஏழைத் தந்தை, தனது மைந்தனை எப்படித் தாலாட்டுகிறான் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறார் கவிஞர் பின்வரும் பாடலில்,

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு - கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு.

தனது இல்லாமையை, தனது செல்ல மகனுக்குத் தாலாட்டாக எடுத்துரைக்கின்றான் அந்தக் காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஏழை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உனக்கு இனாமாகக் கிடைக்கும், அதையாவது அனுபவி என்கிறான். என்ன என்கிறீர்களா?

கண்ணை மூடித் தூங்கினால் பொன்னுலகம் கண்ணில் தெரியும் அதையாவது அனுபவி என்கிறான்.

நண்பர்களே கவிஞரின் பல தாலாட்டுப் பாடல்களிலிருந்து சில பகுதிகளைப் பார்த்திருந்தோம். கவிஞரின் பாடல்களிலேயே, தாலாட்டுப் பாடல்களின் பாணியே தனியானது. இது அவரது புகழ் எனும் மகுடத்தில் பதிக்கும் மற்றொரு வைரமாகும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:39 pm

காதலுக்கு இருக்கும் சக்தியை எப்படிக் கவிஞர் கண்ணதாசன் தனது வார்த்தைகளிலே வடிக்கிறார் என்று பார்ப்போம். காதலின் வேகத்தைப் புலப்படுத்தும் ஒரு பாடலை இப்போது எடுத்துப் பார்க்கப் போகின்றோம். இந்தப் பாடலின் கருத்து மட்டுமல்ல, அதில் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் எனது மனதில் ஆழப்பதிந்தவை.

தங்கை தன் காதலனைப் பிரிந்த சோகத்தை, அந்தக் காதலர்களின் காதலுக்கு ஒரே சாட்சியான தென்றலிடம் சோகத்துடன் எடுத்துக் கூறுகிறாள். அதைச் செவியுற்ற அவள் அண்ணணும் தனது தங்கையின் சோகத்தைப் போக்கும் வழியறியா ஒரு தவிப்புடன் அதே தென்றலிடம் தனது மனதைத் திறக்கின்றான்.

அந்தக் காதலின் ஆழம் அந்தத் தங்கையின் மனதில் அவளது அண்ணன் நினைவுகளைக் கூட மறக்கடித்து விடுகிறது. இந்தப் பாடல்களின் வரிகள் என் மனதினிலே என்னையே அறியாமல் எத்தனையோ தடவைகள் ஊர்கோலமாய் வருவதுண்டு.

இந்தப் பாடல் "போலீஸ்காரன் மகள்" என்னும் படத்திற்காகக் கவியரசரினால் வடிக்கப்பட்டு எஸ். ஜானகி, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் தேன் குரலினால் முத்துராமன், விஜயகுமாரி ஆகியோரின் அற்புத நடிப்புடன் திரைவிருந்தாகிய பாடல்.

"பெண் (எஸ்.ஜானகி)"

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ?

தன்னந்தனியளாக வழக்கமாகத் தன் காதலனைச் சந்திக்கும் மன்றத்திலே, நின்றிருக்கும் அந்தக் கன்னிகை, தென்றலிடம் தன் காதலனைப் பற்றி விசாரித்துவிட்டு

வண்ண மலர்களில் அரும்பாவாள், உன் மனதுக்குக் கரும்பாவாள்
என்று ஒரு மொழி கூறாயோ?

என்று அவனுக்குச் சேதியும் சொல்லி அனுப்புகிறாள்

உதாரணத்தைப் பாருங்கள். கரும்பு பார்க்கக் கடினமாக இருக்கும், ஆனால் சுவைக்கத் தெரிந்தவன் கைகளில் அகப்பட்டாலோ அதன் சுவையை அவன் மட்டுமே அறிவான். அப்படி, கடினமான கற்பைக் காக்கும் குலத்தில் உதித்த பெண், அவளது மனதைக் கவர்ந்த, அவளது தலைவனின் மனதினில் மட்டும் கரும்பாக இனித்திடுவாளாம்.

அத்தோடு அவள் சோகத்தையும் தென்றலோடு பகிர்ந்து கொள்கிறாள்

நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள் என்ற வேதனை கூறாயோ?
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:40 pm

அழகாக அந்தப் பெண்ணின் காதல் வேதனையைத் தென்றலுக்குக் கூறும் பாணியில் வடித்துக் காட்டிய கவியரசரின் கவியுள்ளத்தில், தன் தங்கையைக் கண்ணின் மணி போலக் காத்த அந்த அண்ணன் இதைக் கேட்டதும், அவனது மன நிலை என்ன என்பதை வடித்துக் காட்டும் எண்ணம் தலைதூக்குகிறது.

அதையும் பார்ப்போம்!

"ஆண் (பி.பி.எஸ்)"

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா?

அதே தென்றல் அண்ணனிடம் வரும் போது, தன் தங்கையின் சோகத்தை அவளிடமிருந்தே அறிந்து கொண்டவன், தென்றலைப் பார்த்துக் கேட்கின்றான், இவள் சொல்வது சரிதானோ? அதை நீ கூட சாட்சி கொண்டாயோ என்று

தன் கண்ணனைத் தேடுகின்றாள் மனக் காதலைக் கூறுகின்றாள்
இந்த அண்ணனை மறந்து விட்டாள் என்று அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா?

அந்த அண்ணணுக்கு மனம் வருத்தமாக இருக்கிறது. ‘ஏய் தென்றலே, நான் உயிருக்குயிராய் வளர்த்த அந்தத் தங்கை உன்னை நம்பும் அளவிற்கு அண்ணனை நம்பவில்லையே. உன்னிடம் தன் கண்ணனைத் தேடித் தரும்படி இறைஞ்சுகிறாள். தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் இந்த அண்ணனை மறந்து விட்டாளே! அவளுடைய காதலை வாழவைக்க நானிருப்பதை மறந்து இத்தனை சோகம் கொள்கிறாளே. இதைக்கூட அவளது காதலனைக் கண்டால் சொல்லிவிடு. என் தங்கையின் காதலின் ஆழம், அவளது அண்ணன் மீதான பாசத்தைக் கூட வென்றுவிட்டது என்று சொல்லிவிடு. அப்போதாவது தலைவன் அவளைத் தேடி வருகின்றானா என்று பார்ப்போம்.’ என்று தனது சோகத்தையும் அக்கறையையும் பகிர்ந்து கொள்கிறான் அதே தென்றலிடம்.

நண்பர்களே கவியரசரின் கற்பனைத் திறனுக்கு எல்லை கிடையாது. அவரது தமிழ் நடைக்கு அணை கிடையாது. அது இயற்கை அவர்க்களித்த வரப்பிரசாதம். நிச்சயமாக என்னைப்போல நீங்களும் அவரது கற்பனைவளத்தையும், கவித்திறனையும், தமிழாற்றலையும் ரசித்திருப்பீர்கள் என்பது திண்ணம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:40 pm

உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல, அனுபவங்களையும் திரட்டியவன். உலகம் புள்ளிகளால் ஆனது என்றால், அந்த ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்பதை நானறிவேன்"

என்று மிகவும் ஆணித்தரமாக, அடித்துச் சொன்னவர் கண்ணதாசன். இத்தகைய ஒரு தன்னம்பிக்கை நிறைந்த நிலையை கவிஞர் அடைந்தது எப்படி? வாழ்க்கை அவர் மீது எறிந்த அனைத்து சவால்களையும் ஒரு தத்துவ நிலையிலிருந்து நோக்கியமையால் தான். தான் நினைப்பவை நடக்காமல், தான் நம்பியவர்கள் தன்னை ஏமாற்றிய போது, தான் எனும் தன் நிலையிலிருந்து தனக்கும் அப்பாற்பட்ட சக்தியில் நம்பிக்கை வைத்த போது, அவருக்குத் தன்னம்பிக்கை வீறிட்டுக் கொண்டு வந்தது.

ஆன்மீகம் எனும் நிலையை உற்று நோக்கி அதை மதம் எனும் அடிப்படையில் மற்றவர் மீது திணிக்கும் பாணியைக் கைவிட்டு, சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஆன்மீகத்தின் பங்கை மதத்தின் அடிப்படையில் விளக்குவதன் மூலம் 'மதம் ஒரு மனிதனின் அணிகலனே தவிர ஆடையில்லை' என்பதனை அழகாக விளக்கியதில் கவியரசரின் பங்கு முக்கியமானது. சமய நூல்களை ஒரு பாடப் புத்தகம் போன்று, பரீட்சையில் சித்தியடைய மட்டும் படிப்பது என்ற ஒரு கலாச்சாரத்தினுள் இளைய தலைமுறை திளைத்த ஒரு காலத்தில், ஆன்மீகத்தை ரசித்துப் படிக்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்கியது கவியரசரின் "அர்த்தமுள்ள இந்துமதம்".

கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூல்களின் பதிப்பின் பின்னாலே, அது சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில்களைத் தினமணிக் கதிரிலே வெளியிட்டார். அதன் பின் சிறிது காலத்திற்குப் பின்னால் அது இடையே நிறுத்தப்பட்டது. அந்தக் கேள்வி பதில்களை அழகாகத் தொகுத்து, கவியரசரின் வலது கை போன்று விளங்கிய இராம. கண்ணப்பன் அவர்கள் ஒரு நூல் வடிவில் வெளியிட்டார்.

கவிஞரின் உள்ளத்து நிலையை விளக்க அதில் கேட்கப்பட்ட, என்னைக் கவர்ந்த இரு கேள்விகளையும் அதற்கு அவர் அளித்திருந்த விடைகளையும் குறிப்பிடுகின்றேன்.

கேள்வி: வடமொழி, பிறமொழிச் சொற்களைத் தவிர்த்துத் தூயதமிழில் எழுதினால் என்ன?

பதில்: காலத்தாலே தவிர்க்கவே முடியாத திசைச் சொற்கள் தமிழில் ஏராளமாகப் புகுந்து விட்டன. இன்றைய எஸ்.எஸ்.எல்.சி. மாணவனுக்குக் கூடப் புரியாத மொழியில் எழுதுவதானால் மொழி ஆர்வம் தான் மிஞ்சுகிறதே தவிர அற்புதமான கருத்துக்கள் வீணாகி விடுகின்றன. நான் தனித் தமிழின் விரோதியல்ல. ஆனால் என் கருத்துக்கள் கிராமத்து ஊருணிக்கரை வரை போகவேண்டுமென்பதில் கண்ணாக இருக்கிறேன்.

கேள்வி: கோவிலுக்குச் செல்வதனால் ஒருவனைப் பக்திமான் என்றும் கோவிலுக்குச் செல்லாத ஒருவனை நாத்திகன் என்றும் சிலர் முடிவு செய்து விடுகிறார்களே, இதைப்பற்றித் தங்கள் கருத்தென்ன?

பதில்: முடிவு செய்கிறவன் முட்டாள். இறைவன் உள்ளத்துக்குள்ளேயே இருக்கிறான். தாயைக் கும்பிடு. ஒழுங்காக இரு. நீ கோவிலுக்குப் போக வேண்டியதில்லை.

நண்பர்களே! எளிமையாகக் கவியரசரின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்களே போதுமானவை. அவர் ஒரு மொழி வெறியரல்ல, ஒரு மத வெறியருமல்ல. சாதாரண இல்வாழ்க்கையில் ஈடுபட்டு அதன் மூலம் தானடைந்த இடர்ப்பாடுகளின் மூலம் விளைந்த அனுபவம் எனும் அறுவடையை, குடும்பம் எனும் கடலில், வாழ்க்கை எனும் தோணியில் சிக்கி அல்லாடும் மக்களிடையே பகிர்ந்தவர்.

கவியரசரின் பெருமை என்னவென்றால், தீயது என்று அவரால் விவரிக்கப்பட்டவைகளைக் கூட ஒரு நாளில் அதுவே சொர்க்கம் என்று மூழ்கிக் கிடந்தவர் தான் கவியரசர்.

அதனால் தான் அவரிடமிருந்து வந்த மொழியில் ஒரு ஆத்மார்த்தம் இருந்தது, அனுபவத்தின் சாயல் இருந்தது. மதுவையும், மங்கையையும் ரசித்திருந்த காலத்தே தமிழ் அவர் வாயில் புரண்டபோது பிறந்த கவிதையைப் பாருங்கள்:

ஓர் கையில் மதுவும் ஓர் கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால் தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் கேட்பான்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:40 pm

அப்போது கூட முடிவில் தான் ஐக்கியமாகப் போவது ஆண்டவனோடு என்று முடிவு கட்டி விட்டார் பாருங்கள். ஆசைகளின் மத்தியில், போகத்தை விளக்கிக் கொண்டே அதை ஆன்மீகத்தில் முடிக்கும் திறன் கொண்டிருந்தவர் தான் கவியரசர்.

அது மட்டுமா? எல்லோரும்தான் சாகப் போகிறோம்; அதில் இப்படி வாழ்ந்த நான் பெரியவனா, இல்லை இதையெல்லாம் வெறுத்துப் பொய் என்று சொன்ன அந்தத் தத்துவ சன்மார்க்க வாதிகள் பெரியவரா? என்றொரு கேள்வியைக் கேட்டு ஒரு ஆழ்ந்த வாதத்திற்கே தலைப்பிட்டு விடுகிறார்.

காமுகனும் மாண்டான், கடவுள் நெறி பேசும்
மாமுனியும் மாண்டான், மாற்றத்திலே யார் பெரியார்?

இப்படியெல்லாம் மது, மங்கை என்று வாழ்ந்த ஒருவர் தனது வாழ்வின் மாற்றங்களிலெல்லாம் ஒரு புது அர்த்ததைக் கண்டு அதன் மூலம் தனது வெறுக்கத்தக்க பாகத்தைக் கூட வெளிப்படையாக எமக்குக் காட்டி, தமிழ் எனும் பூக்கொண்டு ஆராதித்தவர் தான் கவிஞர்.

இப்படி இன்பக் கடலில் நீந்திக் களித்தவர், களைத்து விட்டார் போங்கள்! சலித்துக் கொள்கிறார். பிறக்கிறது ஞானம். உதிக்கிறது கவிதை.

காதலெனும் போதையுற்று
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் - இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!

மேனி பட்ட பாடும் - பல
ராணி பட்ட பாடும் - என்னை
ஞானி எனச் செய்ததடி இன்று - எமன்
நாளை வந்த போதும் அது நன்று!

ஆடும் வரை ஆடி உடல்
ஆடுகின்ற காலம் வந்து
தேடுதடி தேவன் அவன் வீட்டை - அவன்
தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை!

நண்பர்களே இந்த இதழில் பலவற்றையும் கலந்து கவிஞரின் அனுபவத்தின் சேர்க்கை வந்த பாதையை ஓரளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளேன் என்று நம்புகிறேன். தன்னுடைய வாழ்வின் இருண்ட பக்கங்களையும் எமக்குத் துணிச்சலோடு வெளிச்சம் போட்டுக்காட்டி, தன்னால் மற்றவர் பயனடைய வேண்டும் என்னும் எண்ணம் கொண்ட அந்த இணையற்ற கவிதை நாயகனுக்குத் தலைசாய்த்து விடை பெறுகிறேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:40 pm

என்னுள்ளத்தின் தமிழ் விளக்குக்கு
எண்ணெய் வார்த்த தமிழ்க்கவியே
என்றும் என் தமிழ்வானில் ஒளிரும்
ஏற்றமிகு தமிழ் முழு நிலவே - தமிழ்
ஏழை என் கவியுலகில் தொடர்ந்து
எண்ண மழையாவாய் கண்ணதாசனே!

அப்படிக் கவியரசர் கண்ணதாசன் என்ன சாதித்து விட்டார், அத்தகைய பெரும் இலக்கியக் காவியம் எதைப் படைத்து விட்டார் என்ற எண்ணம் கொண்ட பலரைச் சந்தித்திருக்கிறேன். கண்ணதாசன் படைத்த படைப்புகளை விட உயர்ந்தது இந்த உலகில் ஒன்றுமில்லை என்பதினாலேயோ அன்றி அவரை விஞ்சிய தமிழ்ப்புலமை, கவித்துவம் கொண்டவர்கள் எவரும் இருந்ததில்லை என்பதனாலேயோ அவர் போற்றப்படவில்லை.

அவரைப்போல சாதாரண ரசிகர்களைச் சென்றடைந்தவர்கள் மிகவும் சொற்பம் என்னும் வரிசையிலேயே அவரின் புகழ் ஒளிருகின்றது. ஒருவன் காவியமானான் என்பதற்கு அவன் அற்புதங்கள் புரிந்திருக்க வேண்டியதில்லை, அற்ப மனிதர்களின் மனத்தைச் சென்றடைந்தால் போதுமானது.

தனது இளமைக் காலங்களிலே பல மேடைகளிலே நாத்திக வாதத்தை முன் வைத்து முழங்கியவர் கவியரசர் கண்ணதாசன். இறை நம்பிக்கையை எள்ளி நகையாடிக் கவிகள் படைத்தவர் கண்ணதாசன். அதனால் தான் அவர் ஆன்மீகத்தை உணர்ந்து கட்டுரைகள் படைக்கும் போது அது மக்களின் உணர்வுகளை மீட்டி விடக்கூடிய வல்லமை கொண்டவைகளாக இருந்தன.

ஆன்மீக விளக்கங்களைப் பள்ளிப் பாடப் புத்தகங்களிலே படிப்பது மட்டுமே தமது கடமை என்றொரு எண்ணம் கொண்ட இளம் தலைமுறையை ஆன்மிகத்தில் சுவாரஸ்யம் கொள்ளச் செய்தது அர்த்தமுள்ள இந்து மதத்தின் கட்டுரைகள். சொல்லப்பட்ட விதம் அப்படி! அக்கட்டுரைகளின் வடிவமும் யதார்த்தமும் முக்கிய காரணிகளாக அமைந்தன என்பது துல்லியமாகத் தெரிகிறது. நண்பர்களே! இதோ, அர்த்தமுள்ள இந்து மதத்தில், நான் ரசித்த சில வரிகளைக் கீழே தருகிறேன்:

கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம்.
கடவுள் அவதாரம் எடுப்பார் என்றே நம்ப வேண்டாம்.
பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப்பார்.
கீதையைத் தேவநீதியாக நீ ஏற்றுக் கொள்ளவில்லையானல், மனித நீதியாக
உன் கண் முன்னால் தெரியும்.
ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை
எதிர்த்துப் போராட வேண்டி வருகிறதா? அப்போது உனக்கு என்ன
செய்வதென்று தோன்றவில்லையா?
- கீதையைப் படி

இதை ஒரு மத அடிப்படையில் பார்க்காமல் மனிதத்துவ அடிப்படையில் பாருங்கள். கீதைக்குப் பதிலாக பைபிளையோ அன்றிக் குரானையோ எடுத்துக் கொள்ளலாம். இந்த வாக்கியங்களின் அடிப்படை 'எதை நம்புகிறோம் என்பதல்ல, நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆதாரம்' என்பதே. பெரிய விஷயம்தான். ஆனால் புரியும்படி சுருங்கச் சொல்லிவிட்டாரே. இது தான் கண்ணதாசன்.

தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி ஆன்மீக உணர்வுகளை விளக்கத் தலைப்பட்டார் கவியரசர். அதனால் தான் அவர் அனைத்து ரசிகர்களின் இதயத்தின் அடித்தளத்தைத் தொட்டார்.

என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உற்ற நண்பன், சொந்தச் சகோதரன் போன்ற உறவுடையவன் எனும் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டேன். வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி வந்தது. ஓரிரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும்போது, கவியரசரின் பாடல்கள் அடங்கிய ஒலிநாடா ஒன்றை எடுத்துப் போட்டு விட்டு படுக்கையில் விழுந்தேன். முதலாவது பாடல்:

உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா
கர்ணா வருவதை எதிர் கொள்ளடா!

ஐந்தாவது பாடல்,

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி

இந்த முதலாவது பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஐந்தாவது பாடல் முடியுமுன்னரே தூங்கி விட்டேன். அந்த நேரம், இந்த வருந்திய உள்ளத்திற்கு அன்னையின் தாலாட்டுப் போன்று ஒரு இதமளித்தன கவியரசரின் பாடல்கள்.

இதுதான் கவியரசரின் தனித்தன்மை. அவரைப் புரிந்து கொள்வதற்கு புலமை தேவையில்லை, அவருடன் கலப்பதற்கு அளப்பரிய கல்வி தேவையில்லை. ஒரு மனிதனாக இருந்தால் போதும். இதுவே கண்ணதாசன் காவியமாவதற்குக் காரணமாகிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:41 pm

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’என்று கேட்டான் பாரதி. ஆமாம், தனக்கு இருக்கும் சுடர்மிகு அறிவைக் கொண்டு, சமுதாயத்தை மாற்ற முடியாத அளவுக்கு அறிவற்றவர் மத்தியில் என்னைப் படைத்து விட்டாயே! என சக்தி மாதாவைக் கோபித்துக் கொண்டான் எமது பாரதி.

எமது கவியரசர் கண்ணதாசனோ தன்னால் படிக்க முடியவில்லையே எனும் வேதனையால் மாண்டார். அதை ஒரு கவிதையின் மூலம் எவ்வாறு கூறுகிறார் என்று பார்ப்போம்.

பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.

அறிவின் மிகுதியால் கவலைப்பட்டார் பாரதி, கல்வியின்மையால் வேதனைப்பட்டார் கவியரசர். தன்னுடைய வாழ்க்கையில் தான் எட்டாம் வகுப்பு மட்டும் படித்திருந்தாலும், பல புத்தகங்களை வாசித்துத் தானாகவே தனது திறமையை வளர்த்துக் கொண்டவர் கவியரசர் கண்ணதாசன்.

காதல் எனும் கடலிலே, தமிழால் தோணிகட்டி கரைகண்டவர் எமது கண்ணதாசன். அதனால் தான் எம்மைப் பார்த்துக் கேட்டார், "காதலில்லாத வாலிபமா?" என்று. கவியரசர் ஆண்களின் காதல் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட அதே அளவிற்குப் பெண்களின் மன ஏக்கங்களையும் புரிந்து கொண்டு அழகாக வார்த்தைகளில் வடித்துள்ளார்.

கண்திறந்து நானிருந்தேன்
கட்டழகர் குடி புகுந்தார்
கண்திறந்தால் போய்விடுவார்
கண்மூடிக் காத்திருப்பேன்

"கைராசி" எனும் படத்தில் வரும் பாடலின் ஒரு பகுதியிது. பெண்ணானவள் இப்படித் தன் கண்ணுக்குள் விழுந்த கள்வனைக் காக்கின்றாளாம், அந்தக் கள்வன் என்ன சொல்கிறான்?

தொட்டுத் தொட்டுச் சென்றன கைகள்
சுட்டு சுட்டுக் கொண்டன கண்கள்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு

அவனைக் கண்டவுடன் அவள் தன்னைத் தந்து விட்டாளா? இல்லை, அவளைக் கண்டவுடன் அவன் தன்னை இழந்து விட்டானா? எதுவாயினும் அவர்கள் காதல் வயப்பட்டது உண்மை. எப்படி எளிமையாகச் சொல்கிறார் கவியரசர்!

சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:41 pm

அப்படியான ஒரு சூழலில் தன்னை இழந்து விட்டவள், தன் உள்ளத்தினுள்ளே தன்னுடைய 'அவனுடன்' ஒரு சம்பாஷணை நடத்துகிறாள். எப்படி? தான் காதல் வயப்பட்டதுக்குக் காரணம் கூறி, அதனை ஒரு அலசு அலசுகிறாள். எங்கே பார்ப்போம்?

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்றுமுதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்!
நூலிலை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் ஆட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது?

'சாந்தி' எனும் படத்தில் இடம் பெற்ற பாடலின் ஒரு பகுதியைப் பார்த்தோம். கவியரசர் காதலெனும் கருவெடுத்து எம் கனவுகளோடு விளையாடுகிறார். இவ்வாறு ஒரு இனிய பெண்ணின் மென்மையான உணர்வுகளோடு எம்மை இணைத்து வழிநடத்திச் செல்வது கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே முடியும்.

இதோ மற்றுமொரு இனிமையான காதல் சந்தத்தினால் கவிஞர் எமைக் கட்டுவதைப் பார்ப்போம். இந்தப் பாடல் 'தேன்நிலவு' எனும் படத்தில் இடம்பெற்றது. அதில் ஒரு அழகான பகுதி, பார்வையோடு பார்வை பேச யாராவது தூது விடுவார்களா? காதலில் திளைத்துத் தன்னை மறந்த காதலன் என்ன கூறுகிறான்? இப்படி வருகிறது கவிஞர் கண்ணதாசனின் எண்ணக் கருவறையிலிருந்து,

மேகவண்ணம் போல மின்னும் ஆடையினாலே - மலை
மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே
பக்கமாக வந்தபின்னும் வெட்கமாகுமா? - இங்கே
பார்வையோடு பார்வை பேசத் தூது வேண்டுமா?

இந்த வாரம் கவிஞர் கண்ணதாசனின் காதல் மழையினில் தோய்ந்தோம். காதல் என்பது ஒரு நுட்பமான உணர்ச்சி. அது பருத்திப் பஞ்செடுத்து அணுவும் பிசகாமல் பின்னி எடுக்கும் புடவை போல! கன்னியும், காளையும் மனதால் கலந்து பின்னி எடுக்கும் ஒரு புனித உணர்வு. அந்த உணர்வை அதன் புனிதம் சிறிதளவும் குறையாமல், அதேநேரம் மனதின் மயக்கநிலையை, அந்தக்காதல் கணத்தை சற்றும் பிறட்டாமல் தமிழால் தாரைவார்த்துத் தரும் கண்ணதாசன் காவியமே!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:41 pm

நண்பர்களே! வாராவாரம் நான் இந்தப் பகுதியில் செய்ய முயல்வது , ‘கவிஞரின் திறமை’ எனும் அவரின் ‘ஒரு முகத்தை’க் காட்டும் கண்ணாடியாக விளங்குவதேயன்றி வேறொன்றல்ல. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில், பலரின் முன்னால் பல முகங்களில் காட்சியளிக்கிறோம். அதே போல கவிஞரும் வாழ்வில் பல முகங்களைக் கொண்டவர். அவரின் அனைத்து அம்சங்களையும் தொட்டுக்காட்டுவதற்குரிய ஆழ்ந்த அறிவாற்றல் கொண்டவனல்ல நான். அதே சமயம் அவரின் குணாதிசயங்களை அலசுவது என் நோக்கமும் அல்ல.

கவிஞரே தனது நிலையற்ற கொள்கைகளை, காலத்துக்குக் காலம் தனது மனதில் மாற்றமுறும் தனது நிலைப்பாடுகளைத் தெள்ளத்தெளிவாக ஏற்றுக்கொண்டவர். அவரது அந்தப் பக்கத்தைப் பார்ப்பதற்கு நான் தகுதியுடையவனல்ல.

அரசியல் எனும் ஆழமறியாச் சமுத்திரத்தில் காலை விட்டு, அதனால் தனக்குக் கிடைத்த அனுபவங்களால் உந்தப்பட்டு பல படைப்புகளை நமக்களித்தவர் கவிஞர். கவிஞரெனும் அந்த மகாசமுத்திரத்தில் ‘அல்லன’ , ‘நல்லன’ இரண்டுமே உள்ளது. அவற்றில் நான் அள்ளுவது 'நல்லன' மட்டுமே.

அதே தொனியில் இன்று நான் பார்க்க விளைவது அவரது அற்புதமான பாடலொன்று. அந்தப் பாடலின் வார்த்தையலங்காரம், அதன் எளிமையான நடை! சோகமெனும் உணர்வை ‘வார்த்தை நடை’ எனும் ஊஞ்சலிலே ஆட்டி, அழகாக நமக்கு விருந்தாக்குகிறார் கவிஞர்.

எமது தமிழிலக்கியத்திலே கேள்வி - பதில் என்பது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு நிகழ்வையும் பற்றிக் கேள்வி எழுவது இயற்கை. பதில்கள், மனதின் பல இன்னல்களுக்கு விடையாகவும் அமைவதுண்டு அல்லது நமது இன்னலை மேலும் அதிகரிப்பதாகவும் அமைவதுண்டு.

அத்தகைய ஒரு கலாச்சாரப் பின்னணியில் ஒரு ஆணும், பெண்ணும் கேள்வி பதில் அடிப்படையில் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதாக உருவகப்படுத்திக் கவிஞர் கண்ணதாசன் அமைத்திருக்கும் பாடல், அவரது திறமையை கொடிகட்டிப் பறக்க விடுகிறது.

அந்தப் பாடலைப் பார்ப்போமா!

கண்ணிலே நீர் எதற்கு?
காலமெல்லாம் அழுவதற்கு

நெஞ்சிலே நினைவெதெற்கு?
வஞ்சகரை மறப்பதற்கு

இன்பமெனும் மொழி எதற்கு?
செல்வத்தில் மிதப்பதற்கு

துன்பமெனும் சொல்லெதெற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு

கையிலே வளைவெதெற்கு?
காதலியை அணைப்பதற்கு

காலிலே நடையெதெற்கு?
காதலித்துப் பிரிவதற்கு

பாசமென்ற சொல்லெதெற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு

ஆசை கொண்ட வாழ்வெதெற்கு?
அன்றாடம் சாவதற்கு

பூவிலே தேனெதெற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு

வண்டுக்குச் சிறகெதெற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:41 pm

துயருக்கு ஆறுதல் சொல்வதற்காகச் சில சமயங்களில், ‘அந்தத் துயரத்தை நெஞ்சில் கொண்டவர் எதிர்பார்க்கும் சோகமான விளக்கத்தை அளிப்பதுவே சிறந்த மார்க்கம்' என்றொரு கருத்து உண்டு. இங்கே கவிஞர் அந்த உத்தியைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்.

தன்னை விட்டு விலகிச் சென்ற தன் தலைவனை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு அவளுக்கு நடந்தவைகளையே அவளது கேள்விகளுக்கு விடையாக்குவதன் மூலம் ஒருவகையான ஆறுதலை, அவள் நெஞ்சில் தடவுவது போன்ற ஒரு உளவியல் வைத்தியத்தை இங்கே கடைப்பிடிக்கிறார் கவிஞர்.

கேட்கப்படும் கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்கள், அந்தத் தலைவனின் கொடூரமான செய்கையைச் சுட்டிக் காட்டுபவையாகச் சுள்ளென்று தெறிப்பவையாக அமைந்துள்ளது, கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்தின் செறிவை எடுத்துக் காட்டுகிறது; இளம் யுவதிகளின் வாழ்க்கையில் காதலால் ஏற்படும் மனவேதனைகளைச் சித்தரிக்கிறது.

இதுவே நான் கண்ட கவிஞர் கண்ணதாசன், இவரே நான் ரசித்த கண்ணதாசன், இத்தகைய இன்பமான நினைவுகளை , அவரது ஆற்றலின் செறிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலே ‘அவர் ஒரு காவியம்’ என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:42 pm

அவளது மனம் முழுவதும் வேதனையின் நிழல். விடும் மூச்சு அவ்வளவும் வெப்பத்தின் கருவறை. என்ன செய்வாள் பேதைப்பெண்? காமன் விட்ட காதல் பாணத்தினல் அடியுண்டு, காதல் நோயால் பீடிக்கப்பட்டு விட்டாளே? உணவை எடுத்துக் கொண்டு உண்பதற்கு உட்கார்ந்தால், அப்படி ஒரு பசியின்மை! சோற்றுக் கவளம் வாயில் போய் ஒரு சுமையாக உருண்டு கொண்டிருக்கின்றதேயன்றி அவளால் உண்ண முடியவில்லை.

தாங்க முடியாது ஓடிச் சென்று படுக்கையில் விழுகிறாள். புரண்டு, புரண்டு படுக்கத் தான் முடிகிறதே ஒழிய அவளால் விழிகளை மூடித் தூங்க முடியவில்லையே! நெஞ்சினில் அவள் காதல் தலைவனின் சிரித்த முகம் ஊஞ்சலாடி, அவளது உள்ளத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது.

கொஞ்ச நேரம் விழிகளை மூடி நினைவுகளிலிருந்து தப்பலாம் என்று முயற்சித்தால், கனவுகளாய் வந்து அவள் கண்களைத் தழுவிக் கொள்கிறான் அவள் தலைவன். அதுவும் எப்படியான கனவு? கலர் கலரான கனவு, அழகிய பூங்காவிலே அவளை அணைத்துக் காதல் மழையில் தலைவன் தோய்க்கும் கனவு.

தாங்காதம்மா என்றவாறு எழுந்து, தோட்டத்திற்குள் வருகிறாள். தென்றல் அடிக்கிறது, அந்தத் தென்றல் எனும் தேரிலேறி அசைந்து வரும் வாசம் அவளை ஒரு பக்கம் இழுக்கிறது. தன்னையறியாமல் அவள் காலகள் இழுத்த பக்கம் சென்றவள், அந்த மலரைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

ஏன் என்கிறீர்களா?

அவளுடைய காதல் தலைவனுடன் சேர்ந்திருக்கும் வேளையிலே, அந்த மலர் அவளது கூந்தலைத் தழுவி சுகந்தத்தை அள்ளி வீசும் வேளையிலே, தனது மனதைப் பறிகொடுத்து அவள் தலைவன் அந்தக் கூந்தலின் அழகை வர்ணிப்பது போல அவளை வர்ணிக்கும் எத்தனை மாலைப் பொழுதுகளைக் கடந்து விட்டாள்.

அப்போது தான் அவளுக்கு அந்த எண்ணம் உதிக்கிறது. சந்தர்ப்பவசத்தால் தன்னைப் பிரிந்த அந்தத் தலைவன் இந்த மலரின் சுகந்தத்தை இன்னமும் ரசித்துக் கொண்டிருப்பான் தானே! அந்த மலரைப் பார்க்கும் போது தன் ஞாபகம் அவன் நெஞ்சையும் வாட்டும் தானே!

எங்கே, இந்த மலரையே தூது விடுவோமா?

சந்தர்ப்பம் அறிந்ததும், காட்சி துலங்கியதும் கவிஞரின் கற்பனைத் தேரின் தமிழ் வார்த்தைகளெனும் குதிரைகள் தட்டி விடப்படுகின்றன. பிறக்கின்றது ஒரு அருமையான பாடல்,

மலரே மலரே தெரியாதோ?
மனதின் நிலைமை புரியாதோ? - எனை
நீயறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னைக் காண வந்தால்
நிலையைச் சொல்வாயோ? - என்
கதையைச் சொல்வாயோ?

எங்கே ஒரு சமயம் தனது காதலன், தன்னை எண்ணி அந்த மலரைப் பார்க்கச் செல்வானோ? தனது எண்ணத்தை அவனது மனதிலிருந்து நீங்க விடாது இந்த மலர் காப்பாற்றக் கூடுமோ? அந்த இளம் நெஞ்சு வெம்பி ஏங்குவதை இத்தனை அழகாக எடுத்தியம்ப இத்தகைய காவியக் கவிஞனினால் தான் முடியும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:42 pm

மனதின் வேதனையை மறக்க, காதல் நினைவுகள் கொடுக்கும் கனமான உணர்வுகளின் வலியை மறக்க என்ன செய்யலாம் என்று எண்ணியவள், தன் தோழியுடன் நாடகக் கொட்டகைக்குச் செல்கிறாள். நாடகத்தைப் பார்க்க முடிந்ததா? கவலையை மறக்க முடிந்ததா? அங்கே கூட அவளின் நினைவுகளை நிறைத்தது தலைவனின் காதல் நினைவுகள் கொடுத்த இதய சோகமே!

காட்சிகள் மாறும் நாடகம் போல
காலமும் மாறாதோ? காலமும் மாறாதோ?
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ? பாதையும் மாறாதோ? - யார்
மாறிய போதும் பாவையெந்தன்
இதயம் மாறாது - என்
நிலையும் மாறாது.

இப்படித் தன் காதல் நினைவுகளில் இருந்து பல வழிகளில் தப்பிக்க முனைந்தவளுக்குக் கிடைத்தது தோல்வி தான். ஆனால் அவள் அதைத் தோல்வியாகக் கருதுவாளா? காதலையே இலக்கணமாக்கிய தமிழர் வழி வந்த பெண்ணல்லவா? அப்படியே தன் தலைவனின் நினைவுகளில் லயித்து விட்டாள். எந்த எண்ணங்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெறத் துடித்தாளோ? அந்த எண்ணங்களுக்கே தன் நெஞ்சைத் தாரை வார்த்து விட்டாள்.

அதை எப்படி எமது கவியரசர் கண்னதாசன் தனது வார்த்தையலங்காரங்களினால் ஜோடிக்கிறார் என்று பார்ப்போமே!

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்க்
கலந்தே நின்றாரே, கலந்தே நின்றாரே,
நினைவுகள் தோறும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே, நிறைந்தே நின்றாரே - இனி
அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ? - என்
மணநாள் வாராதோ?

நண்பர்களே இந்தப் பாடலினுள் நுழைத்து உங்களை எந்த வழியால் அழைத்துச் செல்ல இந்தக் காவியக் கவிஞர் எண்ணினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரது அர்த்தமுள்ள திரைகானங்கள் எனும் கானகத்தின் வழி நுழைந்து நான் சென்ற வழி உங்களை அழைத்து வந்துள்ளேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:42 pm

எத்தனையோ எழுதினார். எதை எதையோ எழுதினார். எண்ணங்களாய் எழுதினார். அத்தனையும் மனதினில் ஆழப்பதியக்கூடிய பொக்கிஷங்களே! ஆமாம் நான் இங்கே குறிப்பிடுவது கண்ணதாசனின் ஒப்பற்ற படைப்புக்களைத்தான்.

சோகங்களாய் சுமந்தவை, கனவுகளாய்க் கலைந்தவை, இன்பங்களாய் நீந்தியவை; அந்த உணர்ச்சிப் பிரதிபலிப்புக்கள் அனைத்தும் அவர் திரைகானங்களில் எதிரொலித்தன.

கவிஞர் கண்ணதாசனின் மனதினிலே நீங்காத வேட்கை ஒன்றிருந்தது. அதை அவருடைய கட்டுரைகள் பலவற்றில் ஆங்காங்கே காணலாம். தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான, சுருங்கக் கூறி பெரு அறிவு புகட்டும் அந்த அற்புதப் படைப்பான திருக்குறளுக்குத் தான் விளக்கவுரை எழுதவில்லையே என்பதுதான் அது.

ஆனால் அது கனவாகவே இருந்து விடவில்லை. தன்னுடைய சொந்த இதழான கண்ணதாசனில் தொடராக, காமத்துப்பாலுக்குத் தான் ஆசைப்பட்டபடியே விளக்கவுரை எழுதியிருந்தார். அதைப் பின்பு அவரது மகன் ‘காந்தி கண்ணதாசன்’ ஒரு புத்தகமாகக் கூட வெளியிட்டிருந்தார்.

இந்த வாரம் அந்தக் காமத்துப்பாலின் விளக்கங்கள் சிலவற்றைப் பார்க்க விழைகின்றேன். அதில் உள்ள சிறப்பம்சம் அதன் எளிமையான உரைநடையே ! இந்த விளக்க உரையின் முன்னுரையில் சிறிய கதை ஒன்றைப் புகுத்தி இருந்தார் நமது கவிக்கோமகன். அந்தச் சம்பவக் கதையை இந்த இதழில் கூறி, சில குறள்களையும் அதற்குக் கவிஞர் கொடுத்த விளக்கத்தையும் அடுத்த இதழில் பார்க்க விழைகின்றேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:42 pm

இதோ அந்தச் சம்பவக் கதை,

இது நடந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!

“தென்றல் இளங்காற்று சில்லென்று வீசிவரும் பச்சை மலைச்சாரல்.

அந்தப் பச்சைமலை முகட்டுக்குப் பாவாடை போர்த்தியது போல் மேகக் கூட்டங்கள்.

மலையடிவாரத்தில் ஓர் அழகான சிற்றூர்.

ஒழுங்காக அமைக்கப்பட்ட சாலைகள்.

ஓடு வேய்ந்த வீடுகள்.

அற்புதமான கற்கட்டுக்களோடு அமைந்த அழகான குளங்கள்.

வானோங்கி நிற்கும் தென்னை மரங்கள்.

பறிப்போர் இல்லாமல் பழங்களை பூமியில் உதிர்க்கும் மாமரங்கள்.

நகரின் மூலையில் ஒரு சிவன் கோவில். மற்றொரு மூலையில் சமணர் கோயில்.

இன்னுமொரு பகுதியில் பெளத்தப் பள்ளி.

தெள்ளு தமிழை மண்ணிலே எழுதிப் பழகும் சிறார்கள் பள்ளி.

ஏடெழுதித் தமிழ் படிக்கும் குருகுலம்.

சாலைகளில் உப்பு வண்டிகள், அரிசி வண்டிகள்.

ஒரு சிறிய நாளங்காடி, ஓர் அல்லங்காடி.

அந்தச் சிற்றூரிலே கட்டழகு படைத்த காளை ஒருவன்.

கார் குழலை பூமியிலே அலைமோத விட்ட கன்னி ஒருத்தி.

இல்லத்தை விட்டு வெளிவந்ததில்லை, அந்த இளங்கன்னி.

அவளது இன்முகத்தை ஒருபோதும் பார்த்ததில்லை அந்த இளங்காளை.

ஊருக்கு வெளியே உள்ள சாலையில் ஒரு கிணறு.

அந்தக் கிணற்றின் தண்ணீர், அருந்த அருந்தத் தாகம் எடுக்கும் ஒரு அற்புத நீர்.

அதில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரலாம் என்று மண் குடத்தை இடையில் ஏந்தி, மலர்த்தோட்டம் நடைபோடுவது போல் நடந்து வந்தாள் அந்த நங்கை.

போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான், அந்த வாலிபன்.

அவள் குனிந்த தலை நிமிராமல் நின்ற கோலத்திலேயே நின்றாள்.

அவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.”

காமத்துப்பாலின் விளக்கத்தைச் சுவையோடு வடிக்க, ஒரு காதல் கதையை இனிமைத் தமிழில் அழகுற நிகழ்த்தி விட்டார். மனத்திரையிலே காட்சியை அசை போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்த பகுதியில் கவிஞரின் குறள் விளக்கத்துடன் சந்திக்கிறேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:43 pm

நண்பர்களே! கடந்த வாரம் தனது காமத்துப்பாலின் விளக்கத்திற்கு முகவுரையாகக் கவிஞர் அளித்திருந்த ஒரு சிறிய கதையைக் கொடுத்திருந்தேன்.

எங்கே அதை மீண்டும் உங்கள் மனதில் அசை போட்டுக் கொள்ளுங்கள் பார்க்கலாம்!

என்ன, அந்தக் காட்சி நினைவிற்கு வந்து விட்டதா? இரண்டடிக் கவியில் ஒரு பொருள் சொல்லும் வித்தகர் திருவள்ளுவரின் குறளையும், அதற்கு எமது கவியரசர் கண்ணதாசனின் அற்புத விளக்கத்தையும் பார்ப்போமா!

குறள் 1

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு .................................................................... 1081

விளக்கம்:

தெள்ளு தமிழ் வடிவெடுத்துத்
தண்ணீர்க்குடம் சுமந்து,
கொள்ளையழகோடு நிற்கும் இவள் யார்?
தேவர் உலகத்து தேவதைக் குலமோ?
தோகை விரித்தாடும் சுந்தர மயிலோ?
அழகிய காதுகளில் குழை ஊசலாட
அன்னமென நிற்கின்ற மானிடப் பெண்ணோ?
மயங்குகிறதே என் நெஞ்சம்.

இரண்டே அடிகளில் வள்ளுவனார் இயம்பியதை, எளிமையான தமிழில் அர்த்தமெனும் அருஞ்சுவையூட்டி, அள்ளித் தெளிக்கிறார் எம் கவியரசர்.

குறள் 2

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து ............................................................ 1082

விளக்கம்:

ஏறிட்டுப் பார்க்கிறாள் அவள்,
எதிர்த்துப் பார்க்கிறான் அவன்,
அந்தப் பார்வையே ஒரு தாக்குத் தாக்குகிறது.
அது மட்டுமா?
ஒரு படையையும் அல்லவா கூட்டி வந்து தாக்குகிறது.

ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தையும் அந்தச் சம்பவத்தின் தொடராக இணைப்பதன் மூலம் குறளின் விளக்கத்தை இனிமையாக ரசிக்கச் செய்து, குறளின்பால் ஈடுபாடு கொள்ள வைக்கிறார்.

குறள் 3

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு .................................................................. 1083

விளக்கம்:

"உயிர் வாங்கும் எமன்" என்று
ஊரார்கள் சொல்லுவார்கள்.
அறியேனே முன்பு, புரிகிறதே இன்று!
அந்த எமன் ஒரு ஆண் மகனல்லன்
ஆடும் கொடி போன்ற பெண்மையுடையவன்;
அகல விரிந்த கண்ணையுடையவன்.

படித்த உடனே நெஞ்சிலொரு காதல் உணர்வைத் தோற்றுவிக்கவல்ல தமிழூற்றெடுக்கும் விளக்கமன்றோ!

குறள் 4

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண் .......................................................................... 1084

விளக்கம்:

பெண்மையும், மென்மையும்
பின்னி விளையாடும் இந்தப் பேதைக்குக்
கண்டவர் உயிரைக் கவர்ந்திழுக்கும் கண்கள்
ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிற்கின்றன.

நண்பர்களே! இங்கொரு கண்ணதாசனை வித்தியாசமான கோணத்திலே பார்த்து நிற்கின்றோம். காவியம் தான் கண்ணதாசன். அவரை அந்தக் காவியக் கோணத்திலே காட்டுவது தான் நான் மேற்கொள்ளும் முயற்சி.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:43 pm

கண்ணதாசன் எனும் கவிஞன்
காதல் கொண்டு திரை கானமும்
காதலினால் விழைந்த ஞானமும்
காமத்துப் பாலெனும் மோனமும்
கலந்தளித்தான் நாம் மகிழவே!

மனதிலே விழைந்த சிந்தை கவியாகக் கொஞ்சம் விளைந்தது. ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல, என் சிந்தையில் கவியரசு ஏற்படுத்திய தாக்கங்களை! எனது மனதிலே என்னை நானே கேள்விக் கணைகளால் தாக்கிக் கொள்ள ஒரு வில்லாக வளைந்தது கவியரசரின் கருத்துக்களே.

அவர் கூறிய கருத்துக்கள் வேறு எவராலுமே, எக்காலத்திலுமே கூறப்படாதது என்பதல்ல எனது வாதம். என் போன்ற எளிமை மனம் கொண்டவர்களாலும் புரிந்து கொள்ளப்படக்கூடிய வகையிலே அதைக் கூறியதுதான் அவற்றின் சிறப்புக்குக் காரணம்.

கடந்த வாரம் நாம் எடுத்துப் பார்த்த காமத்துப் பால் குறள் விளக்கத்தின் வரிசையிலே மேலும் நான்கு குறள்களை இவ்வாரம் பார்ப்போம்.

குறள் 1

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரால்
நோக்கமிம் மூன்றும் உடைத்து .................................... 1085

விளக்கம்:

இது எமன் தானா? இல்லைக் கண் தானா?
ஒன்றை நினைத்தால் இன்னொன்று தோன்றுகிறதே?
மூன்றையும் ஒன்றாகப் படைத்த
மோகனப் பார்வையல்லவா இது?

குறள் 2

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண் ................................................... 1086

விளக்கம்:

ஐயோ! இவள் புருவங்கள்
வளைந்திருப்பதால் தானே இவ்வளவு துயரம்?
அவை நேராக இருந்து
அந்தக் கண்களை மறைக்குமானால்
என்னெஞ்சு இவ்வளவு நடுங்காதே;
துடிக்காதே; துயரங்கொள்ளாதே!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:44 pm

குறள் 3

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் ..................................................... 1087

விளக்கம்:

நேராக நிமிர்ந்து நிற்கும் அழகான கொங்கை
தளிர் போன்ற மங்கையின் சாயாத கொங்கை
அந்தக் கொங்கையை மூடிக்கிடக்கிறது
ஒரு கோலச் சிற்றாடை.
மதம் பிடித்த ஆண் யானைக்கு
முகத்திலே போடும் திரைபோல
மத மதவென்றிருக்கும்
அந்த இளம் கொங்கையின் மீது
இவள் கச்சுக் கட்டியிருக்கிறாள்.

குறள் 4

ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு ................................................. 1088

விளக்கம்:

நான் களங்கள்(போர்க்களம்) பல கண்டவன்
பகைவர்களை வென்றவன்
தோள்வலிமை கொண்டவன்
வாள் வீச்சில் வல்லவன்
எல்லாம் இந்த மெல்லியலாளின்
நெற்றியைக் கண்டு வெற்றியை இழந்து விட்டன
நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்.

தன் நீண்டநாள் கனவினை இதைக் கொண்டு நிறைவேற்றியுள்ளார் கவியரசர். இந்தத் தேனமுதை நான் பருகியதைப் போல நீங்களும் பருகியிருப்பீர்கள் என்பது எனது அதீத நம்பிக்கை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:44 pm

கவியரசர் கண்ணதாசனின் படைப்புகளில் மிகவும் அற்புதமான படைப்பு அவரது சுயசரிதமாகும். முதலில் "வனவாசம்", அதைத் தொடர்ந்து "மனவாசம்" என்றும் அவர் படைத்த அந்த அற்புதப் படைப்புகளில் பல தருணங்களில் என்னை நான் தொலைத்திருக்கின்றேன்.

அதன் காரணம் என்னவென்று என்னையே நான் வினவிய கணங்கள் பல. அவரது சுயசரிதத்தில் இருக்கும் தன்னைத்தானே விமர்சிக்கும் தன்மை, தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை, தனது தவறான நடத்தைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உண்மைகளின் அடித்தளத்தில் இருந்து தன்னை அலசிய பண்பு, அந்தப் படைப்புகளின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் நாமனைவருமே எத்தனையோ தவறுகளை தெரிந்தோ, தெரியாமலோ இழைத்திருக்கிறோம். அதே போல போகக்கூடாத பாதை, தவறான நடத்தை என்னும் நிகழ்வுகளுக்கூடாகப் பயணித்திருக்கின்றோம்..

கவியரசரின் சுயசரிதத்தினூடாகப் பயணிக்கும் போது எமது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் நிழல்களாகப் பிரதிபலிக்கின்றன. அதை நாம் அசை போட அந்தத் தருணங்கள் உதவுகின்றன.

அவரது மனவாசத்தில் என்னைத் தொட்ட சில பகுதிகளைப் பார்க்கின்றேன். உங்களது விழிகளும் அங்கே பதியும் என்றே எண்ணுகிறேன்.

கவிஞரின் வார்த்தைகளில்

“நிர்ப்பந்தமான உறவுகள். அவற்றில் விளைந்த தவிர்க்க முடியாத பந்தங்கள் - அவற்றில் விளைந்த பெருத்த ஏமாற்றங்கள் - சேர்க்கையால் விளைந்த அரசியல் போக்குகள் - அவற்றால் வந்த காலக்கேடுகள், பண விரயங்கள், எழுத்திலே முரண்பாடுகள் - இத்தனைக்கும் இடையிலே பேனா ஒன்றுதான் நிமிர்ந்து நின்றது.

மனதின் ஆதங்கங்களை எழுதித் தீர்த்துக் கொண்டேன். ஒருநாள் உற்சாகமாக இருக்கும் போது இதல்லவா வாழ்க்கை என்றெழுதுவேன், மறுநாள் புலம்புவேன்.

போற்றியவர்களைத் தூற்றுவேன், தூற்றியவர்களைப் போற்றுவேன். நிலையான புத்தியோ, நிரந்தரமான நியாயமோ இல்லாது போயிற்று.

மேலே குறிப்பிட்ட கவிஞரின் கூற்று, அவரது சுயசரிதத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. எத்தனை ஆழமாக தன்னைத் தானே கீறிப்பார்த்துள்ளார் என்று உணரக்கூடியதாக உள்ளது. அந்த ஆழமான கீறல்கள் கொடுத்த ரணத்தின் வடுக்களே அவரது திரைகானங்களாய் பிறந்தன.

இதோ மற்றுமொரு கருத்துக் கலசம்,

“நான் யார் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்து விட்டேன்.

யார் யார் என் வாழ்வைச் சீரழித்தார்களோ அவர்களே என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஓய்வாக உட்காரும் போதெல்லாம் அவர்களே என் நினைவிற்கு வருகிறார்கள்.

என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக் கொண்ட பின்பு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.”

நண்பர்களே, இந்தச் சந்தியில் நம்மில் எத்தனை பேர் இவருடைய இந்தக் கருத்துடன் எம்மையும் இணைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம்? ஆனால் அத்தனை பேரும் இப்படித் துணிந்து நம்மை விமர்சித்துக் கொள்ள முன்வருவோமா?

இங்கேதான் கவியரசரின் தனித்துவம் கொடிகட்டிப் பறக்கிறது. கண்ணதாசன் ஒரு காவியம் என்பதற்கு இதுவே சாட்சியமாகிறது.

எங்கே இன்னுமொரு முத்தைத் துலக்கிப் பார்த்து விட்டு ஓய்வெடுப்போம் வாருங்கள்!

“உண்மையில் சில விஷயங்களை நான் மறைத்திருக்கிறேன். மனிதன் மானம், வெட்கத்திற்கு அஞ்சி மறைத்தே தீர வேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா?

உண்மைகள் நிர்வாணமானவை. ஆனால் மனிதன் எப்போது நிர்வாணமாக இருக்கலாமோ அப்போதுதான் நிர்வாணமாக இருக்கலாம். சந்நியாசியின் நிர்வாணத்தில் கூட குறைந்த பட்சம் ஒரு கோவணம் உண்டு. அதுவும் இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

கவியரசர் கண்ணதாசனின் பலமுகங்களில் ஒருமுகம், ‘தன்’முகம். அதனை இங்கு பார்த்தோம். இவை அந்தத் தனிப்பெரும் ஆழியில் சில துளிகளே!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் - Page 3 Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum